அவனும் அவளும்/புவனா சந்திரசேகரன்

தன்னுடைய பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தவன் சட்டென்று முழிப்பு வந்து எழுந்தபோது, எதிரில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். எங்கேயோ பார்த்த முகம் போலத் தோன்றியது. சோகத்தில் மூழ்கிய முகம். அவன் உற்றுப் பார்ப்பதை உணர்ந்தவள், தனது முக்காட்டை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள். 

இராஜஸ்தானில் பிகானிர் அருகே வேலை பார்க்கும் எல்லைக் காவல் படை வீரன் அவன். விடுமுறையில் சென்னை சென்று கொண்டிருக்கிறான். தில்லியில் ஏதோ வேலை இருந்தது. அதை முடித்துக் கொண்டு சென்னை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டிரெயினில் ஏறியிருந்தான். நடுவில் மதுராவிலோ, ஆக்ராவிலோ அவள் ஏறியிருக்க வேண்டும் . 

அவளுக்குத் தான் பார்த்தது பிடிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் மீண்டும் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். 

சிறிது நேரத்தில் மறுபடியும் முழிப்பு வந்தது. எதிரில் இருந்த பெண்ணைக் காணவில்லை. 

சந்தேகம் மனதில் எழுந்ததால் சட்டென்று எழுந்து சென்று தேடினான். கம்பார்ட்மென்டின் கதவைத் திறந்து வெளியே குதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். பாய்ந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினான். கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து தன்னெதிரே உட்கார வைத்தான். 

அவள் யாரென்று ஞாபகம் வந்து விட்டது. மேல் சாதிப் பையனைக் காதலித்த குற்றத்திற்காகக் கடத்திச் செல்லப்பட்டு, கேங் ரேப் செய்யப்பட்ட விக்டிம். செய்தித்தாளில் அவளுடைய புகைப்படத்துடன் வந்த செய்தியைப் படித்திருந்தான் அவன். அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தவளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். 

” நீ யாரென்று எனக்குத் தெரிந்துவிட்டது. எதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தாய் என்றும் புரிந்துவிட்டது. ஆனால், இது கோழைத்தனம். நடந்து முடிந்ததை மறப்பது கஷ்டம் தான். ஆனாலும் மறக்கத்தான் வேண்டும். வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்ள, உள்ளத்தில் துணிவை  வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்” என்று ஹிந்தியில் அவளிடம் பேச ஆரம்பித்தான். 

” என்னுடைய சகோதரி சென்னையில் என். ஜி. ஓ. நடத்துகிறார். அவர் உனக்கு உதவி செய்வார். படிக்க விருப்பம் இருந்தால் படிக்கலாம். இல்லை கைத்தொழில் கற்றுக் கொள்ளலாம். அவர்களே வேலைக்கும் ஏற்பாடு செய்வார்கள். ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு குறிக்கோளோடு தான் படைக்கப்படுகிறது. அந்தக் குறிக்கோளை அடையும் வரை வாழ்க்கைப் போராட்டத்தை நிறுத்தக் கூடாது. இவ்வளவு தான் சொல்வேன் நான். கேட்பதும் கேட்காததும் உன்னோட இஷ்டம். இன்னொரு முறை நீ இந்த வண்டியில் இருந்து குதிக்க நினைத்தால் நான் தடுக்க மாட்டேன். உன் பாதையை நீ முடிவு செஞ்சிக்கோ” என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிக் கொண்டான் அவன். 

சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்தபோதும் எதிரில் அமர்ந்திருந்தவளுக்கு சென்னை வரை டிக்கெட் வாங்கியவன் அவளைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தான். அவளும் அவனைப் பார்த்து முகம் மலர்ந்து சிரித்தாள்.