வி எம் பி/என்னை மிகவும் பாதித்த மனிதரின் நினைவில்/எஸ் வி வேணுகோபாலன்


ஓடிக் கொண்டிருக்கிறது காலம்… ஆண்டுகள் கடந்து போய்விட்டன…அந்த மனிதர் மறைந்துவிட்டார் என்பதை இந்தக் கணம் கூட நம்ப முடியவில்லை….அவர் என்றாவது ஒரு நாள் இப்படி மரித்துவிடுவார் என்பதைக் கூட வீட்டார் யாரும் ஒருபோதும் சிந்தித்ததில்லை.

2004 மே 20 அன்று அதிகாலை இரண்டு நாற்பதுக்கு வீட்டுத் தொலைபேசி ஒலித்தது இன்றும் கூட காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது…. தற்செயலாக மகள் இந்து என்னை எழுப்பி ‘பாத்ரூம்’ போகவேண்டும் என்று அப்போது தான் அறைக்கு வெளியே அழைத்து வந்தாள்.. ஹால் விளக்கைப் போடவில்லை. டைனிங் டேபிள் மீது இருந்த கருப்பு நிற தொலைபேசிஒலிக்க இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை அப்போது….. மனைவி ராஜியும் பின்னாலேயே எழுந்து வந்தார்…. திடீரென்று அலறிய தொலைபேசியின் ஓசை ஓர் அச்சத்தை முதலில் உண்டுபண்ணியது….ஹால் விளக்கைப் போட்டபடி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவாறு தொலைபேசி ரிசீவரைக் கையில் எடுக்கையில் நேரம் குழப்பமாக ஓடிக் கொண்டிருந்தது மண்டையில்.

அடுத்த முனையில் மைத்துனர் குருவின் மனைவி தீபா.

“வேணு…வேணு…” என்று அதிர்ச்சியும், இலேசாக அழுகை உடைந்த குரலுமாக ஒலித்தது அந்த “வேணு”

“சொல்லு தீபா…என்ன ஆச்சு..” என்கிறேன் நான்…

“அப்பா போயிட்டாருப்பா…” என்று கதறத் தொடங்குகிறது தீபாவின் குரல். நான் புரிந்து கொள்கிறேன், அவள் அப்பா என்று சொல்வது மாமனாரை என்று!

ஒரு கணம் தடுமாறியவாறு…..”ஏய் …என்ன சொல்றே…ஒண்ணும் ஆகியிருக்காது….” என்று குழப்பத்தோடு பதில் சொல்கிறேன், “எங்கே குருவைக் கூப்பிடு…”

குரு பேசும் நிலையில் இருக்கவே இல்லை…..எல்லாம் முடிந்து போய்விட்டது… வி.மாத்ருபூதம் விடை பெற்றுக் கொண்டுவிட்டார்….

எனது வாழ்வில் நான் சந்தித்திருக்கும் மிகவும் மாறுபட்ட பண்பாக்கமும், உள்ளம் கரையப் பழகும் உணர்ச்சித் தன்மையும் கொண்ட மனிதர்களுள் முக்கியமானவர் எனது மாமனார் வி எம் பி.

முதன் முதலில் அவரைப் பார்த்தது, மயிலை சாய்பாபா கோவில் அருகே சாரதாபுரம் கெனால் பேங்க் சாலையில் அவர்கள் குடியிருந்த வீட்டில்….

அதுவும் ஒரு மே மாதம் தான்….ஆண்டு 1991. அதவும் ஓர் அதிர்ச்சி மிகுந்த சூழலில் தான்….ராஜீவ் காந்தி படு கொலை நிகழ்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டைத் தேடிச் சென்ற தினம் அது.

தோழர் ராஜேஸ்வரி (ராஜி)யும் நானும் வாழ்வில் இணைவது என்ற முடிவை அந்த மாதம் பத்தாம் தேதி நேரில் சந்தித்துப் பேசி முடிவெடுத்திருந்தோம்….. அதற்குப் பின் இருவரும் சந்தித்துக் கொள்ள இயலவில்லை…தொழிற்சங்க சுற்றுப் பயணம் தொடர்ந்தது… ராஜீவ் மரணம் நேர்ந்த அன்று இரவு நான் சங்கராபுரத்தில் இருந்து திரும்பி வந்துவிட்டேன்….மறு நாள் காலை தெரு முனையில் பால் வாங்க கியூ நிற்கும்போது தான் தெரிகிறது முந்தைய இரவின் மிகப் பெரிய அதிர்ச்சி நிகழ்வு….

அடுத்த இரண்டு நாட்கள் நாட்டின் இதர பாகங்கள் போலவே சென்னையும் பதட்டம் சூடிக் கொண்டிருந்தது….அப்போது தான் தெரிய வந்தது, என்னைக் கவலை கொள்ள வைத்த செய்தி ஒன்று.

தோழர் ராஜி அப்போது சென்னை கலைக் குழுவில் நடித்து வந்தார்….ராஜீவ் கொலை நிகழ்ந்த அந்த இரவு பத்து மணிக்கு, அம்பத்தூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது….தோழர் உ ரா வரதராசனை ஆதரித்து ஜோதிபாசு அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்….அவருக்கு காவல் துறை மூலம் செய்தி வந்தடைகிறது….கூட்டம் சட்டென்று முடிக்கப்பட்டுவிடுகிறது….யாருக்கும் செய்தி தெரியாது.. பரபரப்பான தொலைக்காட்சி சானல்கள் எல்லாம் அப்போது தோன்றியிருக்கவில்லை..வானொலியும் உடனே செய்தி சொல்லியிருக்கவில்லை… எதுவும் யாருக்கும் பிடிபடாத நேரம் அது…

கலைக்குழு தோழர்கள் நாடகம் ரத்து ஆனபிறகு புறப்பட இருந்த நேரத்தில் தான் தாங்கள் சிக்கிக் கொண்டுவிட்டோம் என்று புரிய ஆரம்பித்தது, ஏனெனில், மிகப் பெரிய வன்முறையில் இறங்க ஆரம்பித்துவிட்டிருந்தனர் தேர்தலில் எதிர்க்கூட்டணியில் இருந்தவர்கள். கலைக்குழு அன்பர்கள் தங்கள் வாகனத்தில் கொடிகளும் தட்டிகளும் நிறைய கட்டிவைக்கப்பட்டு இருந்ததால் பெரிய தாக்குதல் அதன் மீது வந்து விழும் என்று யூகித்து, உடனே தோழர்களைச் சட்டென்று ஒருங்கிணைத்து வண்டியை எடுத்துக் கொண்டு நேரே தோழர் அலெக்ஸ் வீட்டுக்குச் சென்று அவர்களை பத்திரமாக சேர்த்திருக்கின்றனர் …..தோழர் ராஜி, இரண்டு நாட்கள் பொறுத்து, அயனாவரத்திலிருந்து மயிலாப்பூருக்கு நடந்தே சென்றிருக்கிறார்…

ராஜி என்ன ஆனார் என்ற கவலை என்னைப் பற்றிக் கொண்டது….அவரது வீட்டு விலாசம் தெரியாது…..10 X கெனால் பாங்க் சாலை என்று மட்டுமே தெரியும், ஆனால், இடம் அறியாது அவர்கள் வீடிருந்த பகுதிக்கு எதிர்ப்புறம் பாலத்திற்கு அப்பால் தொடர்ந்த சாலையில் (மறைந்த) தோழர் ஏபி விஸ்வநாதன் அவர்களோடு வண்டியில் தேடித் தேடிப் பார்த்து அப்படியான எண்ணே கிடைக்காது திரும்பினேன். பிறகு யோசித்து, மாதர் சங்கத்திற்குத் தொடர்பு கொண்டு, தோழர் மாதம்மா அவர்களிடம் மகளிர் சிந்தனை சந்தாதாரர் பட்டியலிலிருந்து ராஜி முகவரி பார்க்கச் சொல்லி, சாராதாபுரம் என்ற கூடுதல் குறிப்பு கேட்டறிந்து தோழர் கே கிருஷ்ணன் அவர்களோடு வண்டியில் புறப்பட்டுச் சரியான முகவரிக்குச் சென்றடைந்தேன்.

வீட்டில் முதலில் தட்டுப்பட்டவர் திரு மாத்ருபூதம் அவர்கள்….என்னை இன்னார் என்று அவரிடம் நான் அறிமுகப் படுத்திக் கொள்ள?

ஒரு வழியாக உள்ளே சென்றதும், தோழர் ராஜி பத்திரமாக இருந்ததைப் பார்த்ததும் தெம்பு வந்தது….அம்பத்தூரிலிருந்து அயனாவரம் சென்று தப்பித்த மேற்படி படலத்தை அவர் அப்போது தான் சொன்னார்….ஆனால் அதோடு விஷயம் முடியவில்லை….

மறுபடியும் இரண்டு நாள் பொறுத்து அங்கே சென்றேன்…இந்த முறை அவருக்கு விஷயம் சொல்லப்பட்டிருந்தது. என்னை உட்கார வைத்துக் கொண்டு நிறைய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார் எனது வருங்கால மாமனார்….பொறுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன் எனது பதில்களை…. குறும்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது மொத்தக் குடும்பமும்! கார அடையும், மாங்காய் பச்சடியும் தற்செயலாகத் தயாராயிருந்ததைக் கொடுத்தார் மாமியார் கோமதி அம்மாள்.

காதல் திருமணம் இல்லை என்றாலும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் திரும்பத் திரும்ப எனக்குச் சொன்னபிறகு (ஏய் வேணு…என்ன ரொம்ப பிகு பண்ற….அவளைப் பாத்துப் பேசிட்டு யெஸ் சொல்லப் போறியா இல்லையா, வாட்’ஸ் திஸ் காம்ரேட்’) ராஜியை சந்தித்துப் பிறகு இருவருமாக முடிவு செய்து கொண்ட வாழ்க்கை. (என்னை எப்படி ஏற்றுக் கொண்டாய் என்று பின்னர் கேட்க்கும்போதெல்லாம் ராஜி சொல்லும் ஒரே பதில்: காம்ரேட் மைதிலி சொல்லிட்டாங்க உங்களை பத்தி…எனக்கு கல்யாண வயசுல பொண்ணு இருந்தா அவனுக்குத் தான் கொடுப்பேம்மா)

திருமணம் நோக்கி நகரலாம் என்றதும், திரு வி எம் பி என்னைக் கேட்டார்: உங்க அப்பா கிட்ட எல்லாம் சொல்லிட்டிங்களா என்று! எனக்கு, காதலிக்க நேரமில்லை நாகேஷ் நினைவுக்கு வந்தது….இந்த ஜன்மத்தில் நீ எனக்கு மாமனார் ஆக மாட்டே என்பார் நாகேஷ் சச்சுவின் தந்தையிடம்!

பிறகு அவரையும், மாமியார் கோமதி அம்மாளையும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து எனது பெற்றோரிடம் பேச வைத்தேன்… ஏதோ முறைப்படி திருமணம் பேச வருவது மாதிரி….வி எம் பி அவர்களுக்கு நடிக்கத் தெரியாது என்பதையும், எதையும் போட்டு உடைத்தது மாதிரி தான் வெகுளியாகப் பேசுவார் – குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர் என்பதையும் அன்று நேரடியாகத் தெரிந்து கொண்டபோது இப்போது இதை எழுதுவது போன்ற நிதானத்தில் இருக்கவில்லை நான், அப்படியே ஆடிப் போயிருந்தேன்….

எனது அப்பா எஸ் ஆர் வி அவரைப் பார்த்துக் கேட்டார்: “சரி, கல்யாணத்த எப்படி எங்க வச்சுக்கலாம்”

வி எம் பி: ரிஜிஸ்தர் ஆபிஸ்ல….

எஸ் ஆர் வி அதிர்ந்து போனார். “எதுக்கு ரிஜிஸ்தர் ஆபீஸ்…?”

அதற்கு இவர்: “உங்க பையன் அப்படி மென்டாலிட்டி உள்ளவர் தானே, உங்க கிட்ட அவர் பேசலையா….இல்லன்னா ஏதாவது சின்ன ஓட்டல்ல வச்சு முடிச்சுடலாமா….”

ஒய்வு பெற்ற டிபுடி கலெக்டரான எனது தந்தை, இந்தப் பேச்சு எதுவும் நேர்க்கோட்டில் போவது போல தெரியவில்லையே என்று முடித்துக் கொண்டார்… தான் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவுக்குக் கிட்டத் தட்ட போயிருந்தார்…

கதையை வளர்ப்பானேன்…ஒரு மாதிரி பேசி முடித்து, செப்டம்பர் 11 பாரதி நினைவு நாளன்று ராஜியின் சித்தி வீட்டில் சுருக்கமாக விருந்தினரை அழைத்து, என் அப்பாவைக் கலந்து கொள்ள வைக்க வேண்டிய ஒரு காரணத்துக்காகத் தாலி கட்டி முடித்தேன்…வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல்….புரோகிதர்கள் யாரையும் உள்ளே விடாமல். (பின்னர் ராஜியிடம் நான் கொடுத்த வாக்குப் படியே அந்தத் தாலியைக் கழற்றிப் போட்டது வேறு கதை).

ஆனால், என் அப்பாவுக்கு மாத்ருபூதம் அவர்களை மிகவும் பிடித்துப் போய்விட்டது…அவரது பட்டவர்த்தனமான பேச்சு தான் அதற்கு முக்கிய காரணம். அடுத்தது, என் அப்பாவைப் போலவே அவரும் அரசு ஊழியராக இருந்தவர், அவரைப் போலவே நேர்மையாக இருந்தவர். பொதுப் பணித்துறையில் ஜூனியர் எஞ்சினீயர். என் தந்தை எப்போது எங்களைப் பார்க்கும் போதும், தொலைபேசியில் அழைக்கும் போதும் மாமனார், மாமியார் இருவரைக் குறித்துத் தான் முதல் விசாரிப்பே இருக்கும். உள்ளார்ந்த முறையில் கேட்பார் ..மிகுந்த மரியாதை கொடுப்பார்

வி.எம்.பி., அவர்களும் என் தந்தையைப் போலவே அன்பின் ஊற்றானவர். வாஞ்சை, கர்ணனுக்கு கவச குண்டலம் அமைந்தது மாதிரி அவருக்குப் பொருந்தியிருந்தது. காக்கை குருவி எங்கள் சாதி என்பது மாதிரியும், உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றது மாதிரியுமாக அனைவரையும் அனைத்தையும் நேசித்தவர். கையில் இருக்கும் காசு, கஷ்டம் என்று தன்னெதிரே தட்டுப்படுபவருக்கு என்று எடுத்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்.

அவரோடான வாழ்க்கை சுவாரசியமானது. நான் குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டு அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, வெளியே இருந்து நுழைவார், அவர் கையில் ‘இஸ்திரி’ போட்டு வாங்கி வந்த என் உடைகள் இருக்கும் ….’உங்க செட்ல பார்த்தேன், பேன்ட் சட்டையே காணோம்… ஆபீஸ்க்கு அப்படியே போக முடியாதே…துணிக் கொடியிலிருந்து உலர்ந்ததை எடுத்து அயர்ன் பண்ணி எடுத்து வந்தேன்’ என்பார். அத்தனை கூச்சமாக இருக்கும்.

பசி நேரம் தெரிந்து இரண்டு வாழைப் பழம் எடுத்துப் பக்கத்தில் வந்து தருவார். நாம் அதை உரிக்கத் தொடங்கும்போது, டஜன் இருபது ரூபா என்பார். ‘சாப்பிட்டு விட்டுக் கொடுக்கலாமா, காசு கொடுத்துவிட்டு சாப்பிடட்டுமா சார்?’ என்று சிரித்துக் கொண்டே கேட்பேன். ‘யூனியன்ல இருக்கீங்க.. உங்களுக்கு விலைவாசி தெரியணும். அதுக்காகச் சொன்னேன்’ என்பார். இயல்பாகப் பேசுவார்.

திருமணமான பிறகு பம்மலில் அவர்களோடு நாங்கள் குடி புகுந்தோம். பல்லாவரம் ஸ்டேஷன் சாலையில் எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள். அதில் ஒருவர் எஸ் டி டி பூத் வைத்திருந்தவர். ஆசாத் படக் கடை என்ற பெயர்ப் பலகை எனக்கு மிகவும் பிடித்ததொன்று..கம்பீரமாக சந்திரசேகர ஆசாத் மீசை முறுக்கிய கதியில் வரையப் பட்டிருக்கும். காந்தி என்பவர் கடை உரிமையாளர். அவரது வயதான தந்தை எனக்கு நெருக்கமானவர். ஒரு முறை என்னோடு ஸ்டேஷனுக்கு வி எம் பி வந்தபோது, காந்தி என்னைப் பார்த்து, ‘அவரு யாரு?’ என்றார். ‘என்னோட மாமானார்’ என்றேன். ‘ஓ அவரும் உங்க கூடத் தான் இருக்காரா பம்மல் வீட்ல?’ என்றார் காந்தி. உடனே நம்மாள் சொன்னார்: ‘ஹலோ, உங்க ஃப்ரெண்ட் தான் என்னோட இருக்காரு’ என்று. நான் உடனே சிரித்துக் கொண்டு அதை அப்படி உடனே சொல்லியாகணுமோ என்றேன்.

இந்த “படார் படார்” “பளீர் பளீர்” தான் வி எம் பி.

அவரது இன்னொரு பக்கம் கட்டுக்கடங்காத உடனடி கோபம். அதற்கு மிகப் பெரிய பின்னணி உண்டு. படு கேவலமாக லஞ்சம் கரை புரண்டோடிய ஒரு துறையில் வி எம் பி மிக பரிசுத்தமாக வேலை பார்த்தார். அல்லது வேலை பார்க்க முடியாது திண்டாடினார் என்பது தான் சரி. அவர் குறைந்தபட்சம் பதினெட்டு முறையாவது மாற்றலுக்கு உள்ளாகியிருப்பார் என்று நினைக்கிறேன். மிக மிக ஏழ்மையான வாழ்க்கை. தமது பக்க உறவினர் ஒருவரிடமிருந்தும் பெரிய உதவியோ, மரியாதையோ வாய்க்கப் பெறாத வாழ்க்கைத் தடம். அவரது தீட்சண்யமான பார்வை, மிக விரைவாகப் புரிந்து கொள்ளுதல், பரந்த பொது அறிவு, விஷய ஞானம், மிக சாதாரண மக்கள்பால் அவர் கொண்டிருந்த கரிசனம் இது எதுவும் சல்லி காசு பெறாத மனிதர்களிடையே அவர் வேலை பார்த்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

அணைக்கட்டுக்கள் மீது தன்னந்தனியே இரவு நேரத்தில் கூடப் போய்ப் பார்க்கும் அசாத்திய துணிச்சல் அவருக்கிருந்தது, இந்தத் துணிவு அவரது மகளிடம் அரசு ஊழியர் போராட்டத்தில் வெளிப்பட்டதைப் பார்த்து அசந்திருக்கிறேன் நான். ராஜியின் பெரும்பாலான பண்பாக்கங்கள் தமது தாய்வழி பாட்டியிடமிருந்தும், தந்தைவழியாகவும் அமைந்திருப்பதன் மகத்துவத்தில் வி எம் பி என் மீது பெரும் தாக்கம் நிகழ்த்தியிருப்பவர்

குணமென்னும் குன்றேறி நின்ற அவரது இந்தக் கோபத்தைக் கணமேயும் காத்தல் அரிது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். குழந்தைகளை அவர் கொஞ்சுவது மாதிரி இன்னொருவர் கொஞ்ச முடியாது. வீட்டுக்குள் நுழைகிற மனிதர்கள் யாரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பது அவரது கவலைக்கு அப்பாற்பட்ட விஷயம். அவர்களுக்கு தண்ணீரும், சாப்பிட இரண்டு பிஸ்கட்டுகளோ, மிக்சர் பொட்டலமோ எதாவது கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர்களிடம் தன்னை மறக்காமல் ஓய்வு பெற்ற PWD JE என்று அறிமுகம் செய்து கொண்டுவிடுவார்.

அவர் பல இடங்களுக்கு மாற்றல் ஆனதில், எங்கும் ஒழுங்கான ரிகார்ட் இருக்கவில்லை, ஒழுங்கான ஊதியம், இன்கிரிமென்ட் நிர்ணயிக்கப் பட்டிருக்கவில்லை ….நீண்ட LOSS OF PAY கதை தான் அவரது…ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வில் வெளியேறிவிட்டார்…அவரை சமாளித்துக் குடும்பத்தை கவனித்துப் பிள்ளைகளைக் கரையேற்றி விட்டதில் கோமதி அம்மாள் பங்கு மகத்தானது. இந்த ஓய்வூதியத்திற்கு ஏதாவது வழி கண்டு பிடியுங்களேன் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு நாள்.

மாமனாரது சர்வீஸ் புத்தகத்தை – சுக்கல் சுக்கலாகக் கிழிந்து கிடந்த கந்தல் புராணத்தை எடுத்துக் கொண்டு போய் வேலூரில் பணியாற்றி வந்த இந்தியன் வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தோழர் சிவராமன் அவர்களிடம் ஒப்படைத்து ஏதேனும் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவர் மேற்கொண்ட முயற்சிகளில் அவரது வற்புறுத்தல் காரணமாக PWD துறை பெண் ஊழியர் ஒருவர் சரி செய்து கொடுத்த அந்த ஒரே காரணத்தால் வி எம் பி அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும் வாய்ப்பு உருவானது. இந்த நன்றியை வி எம் பி தொடர்ந்து சங்கத்தின் பால் காட்டி வந்தார். பென்ஷன் பணம் வந்தவுடன் ஒரு நல்ல தொகையை நன்கொடையாக சங்கத்திற்கு அளித்தார்….அவர் மறைவுக்குப் பின்னும், சங்கம் நடத்தும் பள்ளிக்கு இந்தக் குடும்பம் முடிந்தபோதெல்லாம் நன்கொடை அளித்துக் கொண்டிருக்கிறது.

கடவுள் நம்பிக்கை அவருக்கு இருந்தது…ஆனால் பெரிய ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் அவர் மேற்கொண்டு பார்த்ததில்லை… எங்கள் யாருக்கும் நம்பிக்கை இல்லாதிருந்தது அவரை உறுத்தும்…அதற்காக எங்களை சமயம் வாய்க்கும் போதெல்லாம் வசை மாறி பொழிவார். அதில் ஒரு சுவாரசிய நிகழ்வு நடந்தது.

திருவான்மியூர் வீட்டில் எனது புது செருப்பு காணாமல் போனது…முதல் நாள் வாங்கி வந்தது, மறுநாள் விடியலில் யாரோ அடித்துக் கொண்டு போய்விட்டார்கள்….உடனே அவர் கத்தினார்…’இந்த வீட்டில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை கிடயாது…பூஜை புனஸ்காரம் எதுவும் நடக்காத வீடு…அது தான் செருப்பு போய்விட்டது’ என்று!

‘நானாவது கோயிலுக்குப் போகிறேன்’ என்று புறப்பட்டவர் உடனே வீட்டுக்குள் நுழைந்து, ‘என் செருப்பையும் எவனோ அடிச்சுட்டுப் போயிட்டானே’ என்று புலம்பினார்…நாங்கள் எல்லாம் சிரித்தோம்.

‘இப்போ என்ன சொல்றீங்க?’ என்று நான் கேட்டேன்… அதற்கும் அவர் சளைக்கவில்லை..’உங்க பாவங்கள் என்னையும் சேர்த்து அடிக்குது’ என்று வெறுங்காலோடு கோயில் புறப்பட்டார். அது தான் வி எம் பி.

‘கம்யூனிஸ்டுகள் மட்டுமே யோக்கியமானவர்கள், மக்களைப் பற்றி யோசிப்பவர்கள்’ என்று சொல்லிக் கொண்டே, ‘ஆனால் ஒருத்தனும் உங்களுக்கு ஓட்டுப் போடமாட்டான்..இந்த நாடு உருப்படாது’ என்றும் சொல்வார். .அவரையும் அழைத்துக் கொண்டு எத்தனையோ மாநாடுகள், ஊர்வலங்களுக்கும் போயிருக்கிறோம்….உள்ளார்ந்த மரியாதையை இடதுசாரிகள் மீது வைத்திருந்தார் அவர். திருச்சியில் வசிக்கையில் பாரதியார் மனைவி செல்லம்மாள் கையால் சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன் என்பார். பள்ளி நாட்களில் ஏராளமான போட்டிகளில் அவர் வென்ற பரிசுப் புத்தகங்கள், இன்னும் வைத்திருக்கிறோம் பத்திரமாக.

அந்த முறை ஊருக்குப் புறப்படுமுன், 3 வயது நிரம்பிய எங்கள் மகன் நந்தாவைப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்றார், கொஞ்சம் காத்திருக்கலாம் என்றால் கேட்கவில்லை, அவருக்குப் பதில் சொல்ல இயலாமல் பள்ளியைத் தேடியலைந்து சேர்த்துவிட்டோம் என்றதும், முதல் வேலையாக எங்கள் வீட்டருகே குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த பெண்மணியின் இல்லம் சென்று, நீ எங்கள் பேரனைப் பார்த்துக் கொள்வேன் என்று உறுதி சொன்னால் தான் நாங்கள் நம்பிக்கையாக பெங்களூர் செல்ல முடியும் என்று சத்திய வாக்கு பெற்றுக் கொண்டு தான் வந்தார்.

2004 மே மாதம் மகன் வீட்டுக்கு பெங்களூர் புறப்பட்டுப் போனார் மனைவியுடன் .. விடிந்தால் அவர்கள் எல்லோரும் மைசூர் செல்வதாகப் பயண ஏற்பாடு… முந்தைய இரவு எல்லோரையும் விரைந்து தூங்கச் சொல்லிவிட்டு வழக்கம்போலவே அவரும் ஒன்பது மணிக்குமுன் உறங்கச் சென்றுவிட்டவர், நள்ளிரவு தண்ணீர் குடிக்க எழுந்திருந்தார் போலிருக்கிறது… அவர் தண்ணீர் பாட்டில் எடுக்க முயற்சி செய்வதை என் மாமியார் பார்த்திருக்கிறார்…..சட்டென்று அப்படியே நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்துவிட்டாராம்….அவருக்கு டயாபடீஸ் இருந்தது…நெஞ்சு வலி தெரியாது போயிருக்கிறது….’கார்டியாக் அரெஸ்ட்’ என்று சொல்லப்படும் மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டு சடுதியில் பிரிந்துவிட்டது உயிர்….

தீபா அழைத்த அந்த அதிகாலை தொலைபேசி அழைப்பு, இப்போதும் கூட அந்த நேரத்தில் எழுந்திருக்க நேரும் ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வந்து அழுத்துகிறது…..குழந்தைகள் அவரை ‘பப்பு தாத்தா’ என்று அழைப்பார்கள்….நாங்கள் சார் என்றோ வேறு எப்படியோ அழைத்தாலும் அவர் மிகவும் நெருக்கமான எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே அறியப்பட்டிருந்த ஓர் உறவைப் போல் எனக்கு நெருக்கமாக இருந்தவர்….அவரது கண்டிப்புக்கும், அன்புக்கும், வாஞ்சைக்கும் நான் அடிமைப் பட்டிருந்தேன்….இப்போதும் எப்போதும் அவரது நினைவுகளுக்கும்……

ஒன்பது ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன என்று 2013இல் எழுதி இருந்த இந்த எழுத்துகள் இப்போதும் அதே உணர்வுகளோடு வாசிக்கையில், இப்போது 19 ஆண்டுகள் வேகமாக உருண்டோடி விட்டன என்றெழுதத் தோன்றுகிறது…

காலம் ஓடிக் கொண்டிருக்கிறது…

(அடையார் டைம்ஸ் புகைப்படம்: நவம்பர் 28, 1999: நவ திஷா பள்ளி நடத்திய தாத்தா பாட்டிகள் தினத்தில் திரு வி மாத்ருபூதம் – கோமதி அம்மாள்)

One attachment
• Scanned by Gmail

2 Comments on “வி எம் பி/என்னை மிகவும் பாதித்த மனிதரின் நினைவில்/எஸ் வி வேணுகோபாலன்”

  1. ஒரு மிகச்சிறந்த குடும்பம் உருவானதும் காலத்தினால் மறைந்துவிட்ட எம் எம் பி யும் மனதில் ரீங்காரம். நன்றி🙏💕

  2. நீங்கள் கொடுத்து வைத்தவர்.எல்லாமே நல்ல படியாக அமைந்தது. நல்ல மரு மகன். நல்ல மாமனார்.

Comments are closed.