தங்கேஸ் கவிதை

ஒரு சிறிய தீப்பெட்டிக்குள்
அடைத்து விடத் தோன்றுகிறது
இந்த நிலவை
பொன்வண்டு போல்
உள்ளே கிடந்து முட்டையிட்டுக்கொண்டிருகும்
அத்தனையும்
வெண்ணிற முட்டைகள்

கருவேலங் கொழுந்துகளைப் போல
கொஞ்சம் பசும் கதைகளை வைத்து
அடைத்து விடலாம் உள்ளே

கதைகள் கதைகள்
கதைகளின் கதைகளென்று
கதைகளை தின்று
இரவெல்லாம் உயிர் வாழும்
நிலவு இடும் முட்டைகள்
நிரம்பி வழியும் உள்ளடுக்கில்
தீப்பெட்டிக்குள் ஒரு கதை உலகம்

காலையில் உள்ளங்கையில் வைத்து
உருட்டி உருட்டி அழகு பார்க்கும்போது
அந்தந்த கதைகள்
அதனதன் திசையில்
பறக்க ஆரம்பித்துவிடும்
பச்சை நிற நிலவு
ஒரு பெரிய கதையாக
பறந்து போகும் போது
வைத்த கண் வாங்காமல்
பார்த்துக்கொண்டேயிருக்க தோன்றும்