திருமணத்திற்குப் பிறகு பெண்கள்/ரேவதி பாலு

ரவியும் செந்திலும் வங்கி வாசலில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். எதிரே உள்ள பூங்காவில் ஒரு பெண் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது அவளையே உற்றுப் பார்த்த ரவி, ” ஏய் செந்தில். அங்க பாருடா .அவளை பார்த்தா புனிதா மாதிரி இல்ல” என்றான். செந்தில் அவளை பார்த்துவிட்டு ‘ஆமாம்’ என்பது போல் மௌனமாக தலையசைத்தான். அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக தான் இருக்க வேண்டும் ஒருவன் போனான். ரவிக்கு பயங்கரமாக கோவம் வந்தது. “என்னடா நம்மள அடையாளம் தெரிஞ்சுகிட்ட பாவனை அவ முகத்தில் தெரிஞ்சது. நம்ம கிட்ட வந்து ரெண்டு வார்த்தை பேசினா என்ன ஆயிடும்” என்றான். செந்தில் மௌனமாக அவன் கையை பற்றி இழுத்துக் கொண்டு வங்கிக்குள் போனா ன். இருக்கையில் போய் அமர்ந்தும் கூட ரவிக்கு பதட்டம் அடங்கவே இல்லை. பொருமிக் கொண்டே இருந்தான். “விழுந்து விழுந்து காதலிச்சுட்டு இப்படி மருதலிப்பா போனா என்ன அர்த்தம் ? பேசினா என்ன ஆயிடும் ?”செந்தில் அவன் கையைப் பற்றி அவனை அமைதியாக இருக்கும்படி ஜாடையில் சொன்னான் .கோபம் முற்றிலும் தீராமலே வீட்டுக்கு வந்த ரவி தன் மனைவி அனிதாவிடம் நடந்ததை சொல்லி புலம்பினான். அனிதாவுக்கு ஏற்கனவே செந்திலின் காதல் விவகாரம் தெரியும். அவளும் அவனுக்காக ரொம்ப அனுதாபப்படுவாள். புனிதா தன் கல்யாணத்துக்குப் பிறகு இன்று தான்இவர்களை சந்திக்கிறாள். அதுவும் கணவரோடு வந்திருக்கிறாள் என்றெல்லாம் ரவி சொன்னதும் அவள் சற்றே சிந்தனை வயப்பட்டாள். “நீங்க கோவப்படுறது நியாயம் இல்லைங்க. கல்யாணம் ஆன பெண்களுக்கு எப்பவுமே ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி இருக்கும் தங்களோட வாழ்க்கைய காப்பாத்திக்கணும் அப்படிங்கிற உணர்வே மேலிட்டு இரு க்கும். அதனால்தான் அவ உங்க கிட்ட நின்னு பேசாம போயிருக்கா. இது ஒன்றும் பெரிய தப்பா எனக்கு தெரியல.”
அதற்குப் பிறகு அனிதா மௌனம் ஆகிவிட்டாள். ஏதோ சிந்தனை வயப்பட்டது போல தெரிந்த து.
திடீரென்று ரவிக்கு பெரிய சந்தேகம் வந்தது. அனிதாவும் திருமணத்துக்குப் பின் இருக்கும் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள நினைப்பவள் தானா . அவளுக்கும் திருமணத்துக்கு முந்திய பிளாஷ்பேக் ஏதோ இருக்கா.

ஏதேதோ சிந்தனையில் அவன் மனம் அலைபாய ஆரம்பித்தது