
‘அங்கிள், எனக்கு இந்தப் பார்க் ரொம்பப் பிடிக்கும்!’
குழந்தை பேசுமா என்ன? அதன் பார்வை அப்படி இருந்தது!
‘இப்டித் தோள்ள சாஞ்சிண்டு, பார்க்கைச் சுத்தி வேடிக்கை பார்க்கப் பிடிக்கும் எனக்கு. நெறைய பூச்செடி, சறுக்கு மரம், பெரிய காந்தி தாத்தா, சோளம், வேர்க்கடலை வண்டி, பலூன் தாத்தா, கோன் ஐஸ் எல்லாம் இருக்கும். ரெண்டு தோத்தோ – என்ன தெரியுமா, ‘டாக்’ – எப்பொவும் மூலைல தாச்சிண்டிருக்கும்!
கையில ஒரு குச்சியோட, மெதுவா நடந்து வந்து, அந்த பெஞ்சுலெ ஒக்காந்து, சின்ன சொப்புலேந்து, கையிலே எடுத்து மூக்குலெ வெச்சு உறிஞ்சுவாரு ஒரு தாத்தா. சிரிச்சா வாயில பல்லே இருக்காது, எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்..
தெனமும் ஒரு புது ஃப்ராக்குல வருமே அந்தப் பாப்பா – நானா, நான் பெரிய் ..ய்..ய பாப்பா – தத்தக்கா பித்தக்கான்னு நடந்து, ஓடி புல் தரையிலே ‘தமால்’ன்னு விழும். அதோட அம்மா ஓடி வந்து, பாப்பாவைத் தூக்கி, முட்டியில ஒட்டியிருக்கற புல்லு, மண்ணெல்லாம் தட்டி விடுவா. பாவம் பாப்பா, அழும்.
இந்த அம்மா எப்பொவும் எனக்கு கோன் ஐஸ் தரவே மாட்டா. கேட்டா, ‘சளி’ புடிக்கும்னு சொல்வா. எனக்கு கோன் ஐஸ் புடிக்கும்னு கூட தெரியாதா? அங்க பாருங்க, அந்த அக்காவும், அண்ணாவும், ஒரே ஒரு கோன் ஐஸ் வாங்கி, மாத்தி மாத்தித் திங்கறாங்க, சிரிப்பா இல்ல?
நான் தோள்ள இருந்து பாக்கறது கூட தெரியாம, அந்த அங்கிள், எதிர்க்க வர ஆண்டி கையக் கிள்ளறார் – சீ.ய்.. வெக்கமே இல்லே.. சிட்டாங்கோல், என்னத் தொட்டா ஆறுமாசம் பாவம்…
பாவம் அந்த அக்காவும், இன்னொரு அண்ணாவும், கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு, கையில குச்சியத் தட்டிக்கிட்டு, ஒருத்தர் பின்னால ஒருத்தர் போறாங்க – இதெல்லாம் அவங்க பாக்க முடியாதா? ப்ச்…பாவம்.
அச்சச்சோ, என்ன இது… கையில சாக்லெட் குடுத்துத் தூக்கிண்டு வந்த இந்த ஆண்டி வாசல்ல என்னத் தனியா இறக்கி விட்டுட்டுப் போய்ட்டாங்களே…. ஆங்ங்.. அம்மா… அம்மா…
ஐயோ கழுத்துல இருந்த செயின் … அம்மா…அம்மா…ம்ம்ம்..
