
வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகம் கிளம்ப ஆயத்தமானாள் ஸ்டெல்லா. மறக்காமல் அவள் சுடிதாருக்கு மேட்ச் ஆக உள்ள துப்பட்டாவுடன் எக்ஸ்ட்ராவாக வாங்கிய துணியை ஸ்கார்ஃப் போல முகத்தை மூடி கட்டிக் கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து சரி செய்யும் போது பழைய நினைவுகள் வந்து போயின.
கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் சமயம் அவள் நண்பன் நரேஷ் இப்படி செய்வான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடன் படிக்கும் நரேஷை உற்ற தோழனாகக் கருதி அவனுடன் தன் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வாள் ஸ்டெல்லா. வழக்கம் போல் கல்லூரி இறுதி ஆண்டில் பிரிவு உபசார விழா நடைபெற்ற நாளில் அவள் நரேஷிடம் சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.
“நரேஷ் நாளையிலிருந்து நம் பொறுப்பு அதிகமாகுமே தவிர குறையாது. நான் என் வீட்டாரின் விருப்பப்படி என் அத்தை மகன் மெல்வினை மணந்து கொள்ளப் போகிறேன். நீ என் உற்ற தோழன் ஆதலால் எங்கள் வீட்டிற்கு என் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாகவே வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.... சரியா ?” என்றாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நரேஷ் நிலைகுலைந்து போனான். கொஞ்ச நாளாகவே அவளை மனதிற்குள் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்திருந்தான். இதை ஸ்டெல்லாவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தான். ஸ்டெல்லா இப்படி சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான். ஸ்டெல்லாவிற்கும் அதிர்ச்சி. ரெண்டு நாட்களில் சரியாகிவிடுவான் என்று நினைத்து அவளும் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அடுத்த நாள் அவள் நரேஷைப் பார்க்க அவன் வீட்டிற்கு செல்ல பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாள். சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று அவள் முகத்தில் வலது பக்கத்தில் ஏதோ சூடாக வந்து விழுந்தது. நல்ல வேளை, அவள் முகத்தை சட்டென்று திருப்பியதால் சிறிதளவு காயம் ஏற்பட்டது. அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது யாரோ தன் முகத்தில் அமிலத்தை வீசி இருக்கிறார்கள் என்று. அதிர்ந்து போய் சுற்றுமுற்றும் பார்த்தபோது தூரத்தில் நரேஷ் வேகவேகமாக நடந்து செல்வது தெரிந்தது. விக்கித்து அப்படியே பஸ் ஸ்டாப்பின் நிழலில் உட்கார்ந்து விட்டாள். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. உயிர்த் தோழன் நரேஷா இப்படி பண்ணினான் ? அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. உடனே வீட்டிற்கு வந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். வலது பக்கம் ஓரத்தில் சிறிது தோல் பிய்ந்திருந்தது. மற்றபடி சேதம் அதிகம் இல்லை. உடனே அருகில் உள்ள கிளினிக்கிற்கு சென்று முதலுதவி பெற்றாள்.
நாட்கள் உருண்டோடின. நரேஷைப் பார்ப்பதை தவிர்த்து வந்தாள். ஓரளவு முகம் சரியாகப் போனாலும் வலது பக்கம் சிறிய தழும்பு இருந்ததால் அதை ஒரு துணியால் மூடிக்கொண்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள அனைவருக்கும் தனக்கு ஏதோ ஒரு தோல் வியாதி வந்து சரியானது என்று நம்ப வைத்தாள்.
ஒரு நாள் காலை வழக்கம் போல அலுவலகம் செல்ல பஸ்ஸுக்கு காத்திருந்தபோது ஒரு வயதான பெண்மணி ரோடை க்ராஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அப்போது வேகமாக வந்த ஒரு பைக் அந்த அம்மாவை கீழே தள்ளி இருக்கும். ஸ்டெல்லா பாய்ந்து போய் அந்த அம்மாவை தாங்கி பிடித்து கீழே விழாமல் காப்பாற்றி பஸ் ஸ்டாப்பில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்தாள். அப்போதுதான் நன்றாகப் பார்த்தாள் ஸ்டெல்லா. அவர்கள் நரேஷின் அம்மா. அவர்களும் ஸ்டெல்லாவைப் பார்த்து, “ஏம்மா நல்லா இருக்கியா ? வீட்டு பக்கமே வரவில்லையே ? நரேஷும் ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறான்…. ஆனால் என்னவோ தெரியல…. என்கிட்ட பேசவே மாட்டேங்கறான்…. பைத்தியம் பிடிச்சவன் மாதிரி நடந்து கொள்கிறான். நீதாம்மா அவன சரி பண்ணனும்…” என்று சொன்னாள் நரேஷின் அம்மா.
“ஆகட்டும்மா…. கட்டாயம்” என்று சொல்லிக்கொண்டே அவரை ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டில் விடும்போது வாசலில் நரேஷ் இவளைப் பார்த்ததும் தலையை குனிந்து கொண்டான். நடந்ததை அவன் அம்மா சொல்லி முடித்தவுடன், நரேஷ் இவள் காலடியில் தொப்பென்று விழுந்து “என்னை மன்னித்துவிடு ஸ்டெல்லா…. நான் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டும் கூட என் மேல வெறுப்பு காட்டாம எங்க அம்மாவை காப்பாத்தி வீடு வரை கொண்டு வந்து விட்டிருக்க… நீ உண்மையிலேயே சக்தியின் அவதாரமான ஒரு பெண் தான்…. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…. என்று தழுதழுத்து அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.
ஸ்டெல்லாவும் “ரிலாக்ஸ் நரேஷ்…. ரிலாக்ஸ்….. நான் அதை அப்போதே மறந்து உன்னை மன்னித்தும் விட்டேன்”. என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டாள்.
