
எழிலரசி அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் போட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். சலிப்பாகத் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் வைபவமும் அதற்குப் பின் தொடரும் நிராகரிப்பும் எவ்வளவு கொடுமையானது என்று அந்த முதிர்கன்னிக்கு நன்றாகத் தெரியும்.
வயது முப்பதைத் தாண்டி விட்டது. நிறம் மட்டும் மாநிறம். சிவப்பில்லை.
உயரம் அதிகமில்லை. மற்றபடி முகம் களையாகத் தான் இருக்கும். அவர்கள் வீட்டின் வறுமை நிலையும் அவளுடைய கறுப்பு நிறமும் சேர்ந்து அவளுக்கு எதிராக வேலை செய்கின்றன. என்ன சொன்னாலும் அம்மாவிற்குப் புரிவதில்லை. தரகரிடம் பேசி மாதத்துக்கு ஒரு பெண் பார்க்கும் சம்பவம். பெருமூச்சுடன் கிளம்பினாள்.
புதிதாக வந்து சேர்ந்திருந்த மங்கையர்க்கரசி மட்டும் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கையை உயர்த்திக் காட்டினாள். ‘நல்ல செய்தியோடு நாளை வா’ என்று அதற்கு அர்த்தம்.
மங்கை நல்ல தோழி. சின்னப் பெண். புதிதாக ஒரு லீவ் வேகன்ஸியில் அந்த அரசு நிறுவனத்திற்கு வந்திருக்கிறாள். குடும்பம் ஓரளவு வசதியுள்ளது தான். ஆனால் திருமணத்திற்குப் பார்க்கும் போது வேலை பார்க்கும் பெண்ணுக்கு மதிப்பு என்பதால் வேலைக்கு முயற்சி செய்கிறாள்.
போனவாரம் கூட யாரோ பார்க்க வந்து சரிவரவில்லை என்றாள்.
எழிலரசி வீட்டை அடைந்து வழக்கம் போலத் தன்னை எளிமையாக அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல வந்தவர்கள் முன்னால் போய் நின்றாள்.
ஆச்சர்யம்! இந்த முறை மாப்பிள்ளை உடனடியாக சம்மதம் தெரிவிக்க , அம்மாவிற்கு பயங்கர சந்தோஷம். ‘கல்யாணமும் எளிமையாகக் கோயிலில் வைத்துச் செய்யலாம், சீர் செனத்தி எல்லோமே முடிந்ததைச் செய்தால் போதும்’ எனறு அவர்கள் சொன்னார்கள்.
எழிலரசி எழுந்து நின்று மாப்பிள்ளையைப் பார்த்தாள்.
” அம்மா, எனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை” என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல, அம்மா திகைத்து நின்றாள்.
டமாப்பிள்ளை வீட்டார் கோபத்துடன் எழுந்து செல்ல, அம்மா வாடிய முகத்துடன் எழிலரசியிடம் வந்து கத்தினாள்.
“ஏண்டி இப்படிப் பண்ணினே!” என்றவளை எழிலரசி ஏறிட்டுப் பார்த்தாள்.
“அம்மா, இந்த மாப்பிள்ளை சம்மதம் சொன்னது என்னைப் பிடித்ததனால் இல்லை. என் வேலையையும் சம்பளத்தையும் பார்த்துத் தான். போன வாரம் மங்கையர்க்கரசியைப் பார்த்து விட்டு அவளுக்கு நிரந்தர வேலையில்லை என்று அவளை நிராகரித்திருக்கிறார். அவரை எப்படிம்மா நான் ஏற்க முடியும்?
நாளைக்கே எனக்கு ஏதாவது காரணத்தால் வேலையை விட வேண்டி வந்தால் என்ன ஆகும்?” என்று எழிலரசி கேட்க அம்மா விக்கித்துப் போனாள்.
எழிலரசியின் தெளிவான முடிவு சரிதான் என்பது அம்மாவுக்கும் புரிந்தது.
