செங்கோல்/முபீன் சாதிகா

தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கோலை பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரிட்டீஷ் ஆட்சியிடமிருந்து அதிகார உரிமையைப் பெற்றுக் கொண்டதைக் குறிக்க வாங்கினார். அது அலஹாபாத் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இப்போது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது.

செங்கோல் என்பது மன்னர்கள் நேர்மை தவறாமல் ஆட்சி புரிவதற்கான குறியீடு. முன்னாள் வைஸ்ராய் ராஜ கோபாலாச்சாரியின் ஆலோசனைப்படி இந்தச் செங்கோலை பிரதமர் நேரு பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

சோழ ஆட்சி காலத்தில் செங்கோல் பெரு மதிப்பு கொண்டிருந்தது. பாண்டியர்கள் ஆட்சியிலும் கூட. இன்றைய நவீன பொருளில் ‘பொன்னியின் செல்வனுடன்’ இணைத்து செங்கோலின் பொருளை உள்வாங்கலாம். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் சோழ மரபு வேறு பொருள் கொண்டதாக உருமாற்றப்பட்டது, இப்போது அது நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் உண்மைக்கு முன் பாண்டியனின் செங்கோல் வீழ்ந்தது. அது போல் பெண்கள் உண்மையாக இருக்க வலியுறுத்தக் கூட இந்தச் செங்கோல் இப்போது வைக்கப்படலாம்.

மன்னர்கள் நேர்மை தவறாத ஆட்சி நடத்துவதை செங்கோல் கண்காணிக்கிறது என்பது தமிழ் மரபில் வந்த பொருள். மன்னன் நேர்மை தவறினால் செங்கோல் வீழும். இப்போது நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் தமிழ் மரபின் குறியீடு என்ற செங்கோலின் கண்காணிப்பின்படி ஆட்சிகள் நடந்தால் எந்த ஆட்சியும் நீடிக்க முடியாது.

மன்னராட்சியின் மீளுருவாக்கமாக இது இருந்தாலும் விளைவைக் குறித்துச் சிந்திக்கவேண்டும். மேலும் தமிழ் மரபில் வந்தவர்களுக்கு இந்தச் செங்கோல் மூலம் நேர்மை குறித்து நினைவுபடுத்த புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படலாம்.

நேர்மையற்ற நவீன தமிழ் ஆட்சி அதிகாரத்தினர், செங்கோலைக் கண்டு திருந்தவேண்டும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது அல்லது குத்திக் காட்டப்படுகிறது.
எனவே தமிழ் நாட்டிலிருந்து உருவான ஆட்சியில் நேர்மை குறித்த கருத்தின் குறியீட்டுக்கு ஏதோ ஒரு வகையில் பங்கம் வந்திருப்பதாக மறைமுகமாகக் காட்டுவதற்கு மீண்டும் செங்கோல் வைக்கப்படுகிறது.

சமீபத்தில் பிரிட்டீஷ் மன்னரான சார்ல்ஸிடம் கூட செங்கோல் வழங்கப்பட்டது. அதைக் கண்டதும் கூட இந்தச் செங்கோல் பற்றிய பொருளை மக்களிடம் பரப்பும் விருப்பம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

துக்ளக் போல் ஆட்சி செய்திருந்தாலும் நேர்மை தவறவில்லை எனவும் செங்கோல் தனக்கே பொருந்துகிறது எனவும் பெருமைப்படுத்திக் கொள்ளவும் கூட புதிய கட்டிடத்தில் அது வைக்கப்படலாம்.