இரவின் மடியில்/இந்திரநீலன் சுரேஷ்

+2 ரிசல்ட் வந்த நாள். நள்ளிரவு 1:00 மணியிருக்கும்.

படுக்கையில் தலைகாணியை மூடிவைத்துவிட்டுக் கிளம்பி சத்திரம் பஸ்ஸ்டான்ட் வந்துவிட்டான்.

18 வயது பையனைக் காணவில்லையே எனப் பதறுவதற்குள் போய்ச் சேர்ந்து விடவேண்டும் – இந்த உலகத்தை விட்டே..!

அடுத்து என்ன செய்வது, என்று யோசிக்கும் முன் நாகபட்டினத்திலிருந்து சேலம் செல்லும் பஸ் வந்து நின்றது. கண்டக்டர் தலையை நீட்டி,

“எங்க தம்பி, தனியாவா?”

சேலம் வந்தது. மேட்டூர் பஸ் கிளம்பத் தாவி ஏறினான்.

முழுவதும் விடிவதற்குள் யார் கண்ணிலும் படாமல் சாகவேண்டும். 

குளிர் காற்று முகத்தில் அடிக்க, வண்டி மேட்டூர் டேம் வளைவில் திருப்பியது.

‘16 பாலம்’ முடிவில் இறங்கிக்கொண்டான். சுற்றி யாருமில்லை. 

120’அடி ஆழம், ‘ஒருமுறை கூட யோசிக்காதே’ எனத் தடதடவென ஓடி பாலத்தின் கைப்பிடிச் சுவரிலிருந்து, 

கு..தி..த்..தா..ன்..!

‘பளக்!’ எனத் தண்ணீர் முகத்தில் விசிறியடித்தது.. 

மூழ்கும்போது தண்ணீரினுள் விழித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? கண்களை மெல்லியதாகத்  திறந்தான்..

எதிரே அம்மா,

ஒம்போது மணியாவ போவுது, மார்க் வாங்கியிருந்த லட்சணத்துக்கு உருப்படியா எந்த காலேஜூம் கிடைக்காது. இதுல கூச்சம் நாச்சமில்லாம எப்படி தூங்கறான் பாரு?!

One Comment on “இரவின் மடியில்/இந்திரநீலன் சுரேஷ்”

  1. எல்லோரும் ‘குட்டி’ கதை எழுத ஆரம்பிச்சுட்டாங்க! இது பெரும் தொற்றாக பரவும்.
    முடிவை ‘அவன் விழித்த போது மெர்மெய்ட் மடியில் இருந்தான்.’ என்று மாயாஜாலமாக மு டி த் திருக் கலாம்.

Comments are closed.