
ஏழு வரி கதை
அவளுக்கு காலையிலிருந்து கைவலியாக இருந்ததால் வீட்டு வேலைகள் சிலவற்றை செய்ய முடியாமல் போனது.
“ஒரே ஒரு சட்டைய அயண் பண்ண அஞ்சு நிமிஷம் ஆகுமா? அதக் கூட உன்னால செய்ய முடியல..” அவள் கணவன் காட்டுக் கத்தல் கத்தினான்.
அவனுடைய கத்தலை பொருட்படுத்தாமல் டாக்டரிடம் சென்று காட்டியதில் அவளுடைய முழங்கையில் லிகமன்ட் டியர் என்று சொல்லப்படும் எலும்பு சவ்வு கிழிந்திருந்தது தெரிய வந்தது.
மாவு கட்டு போட்டு மூன்று வாரங்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் கையை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார் டாக்டர்.
இப்போது வீட்டில் மொத்த வேலையும் இவன் தலையில்தான் விழுந்திருக்கிறது.
“நா வேலைக்கு போனப்றம் உனக்கென்ன வேலை? நாள் முழுக்க சும்மாதான இருக்க?” என்று எப்போதும் கேட்டவன், அவளுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க முடியாதபடிக்கு வீட்டு வேலைகள் குவிந்திருக்கின்றன என்ற உண்மை அப்போதுதான் அவனுக்கு உரைத்தது.
“ஒரே ஒரு சட்டைய அயண் பண்ண அஞ்சு நிமிஷம் ஆகுமா?” என்று கேட்டவனின் இடுப்பு அந்த ஒரே ஒரு சட்டையை அயண் செயவதற்குள் விண்விண் என்று வலித்துத் தொலைத்தது.
எல்லாவற்றையும் சமாளித்தவனால் ஒன்றை மட்டும் சமாளிக்க முடியாமல், “ஐயோ! யாராவது ஒரு நிமிஷம் இந்த குழந்தைய பாத்துக்கோங்களேன்.. நா நிம்மதியா பாத்ரூம் போய்ட்டு வந்திடறேன்..” என்று அவன் வாய் விட்டு புலம்புவதைக் கண்டு அவள் நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு குழந்தையை தன் பக்கமாக இழுத்துக் கொண்டு அவனை பாத்ரூமுக்கு அனுப்பினாள்.
♥♥♥♥♥

நல்ல கருத்து.வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.
அனுபவம் தான் சிறந்த பள்ளிக் கூடம்.
கலக்கிட்டீங்க பூரணி.👌