எங்க ஏரியா: உள்ளே வராதே/பிரேம பிரபா

ஒரு மனிதன் அவனுக்கென ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட எல்லைகள் குறித்தான ரகசிய வட்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக மற்றவர்களை அவன் உள்ளே நுழைய ஒரு போதும் அனுமதிக்கமாட்டான். நெருங்கிய நண்பர்களானாலும், கணவன் மனைவியானாலும் காதலர்களானாலும் அந்த ரகசிய எல்லைக் கோட்டை மற்றவர்கள் அதிகப்படியான உரிமையின் காரணமாக மீறும் போதுதான் உறவுகள் கொஞ்சம் திகட்டலகிறது.

நாம் ஒரு உணவதத்திற்குப் போகிறோம். இருவர் மட்டுமே அமரும் மேஜை. மனதளவில் நாம் தீர்மானித்துக்கொள்கிறோம். இதில் பாதி மேஜை, என் புழக்கத்திற்குரியதென்று. அந்த  எல்லையை அடுத்தவர் மீறும் போது உடனே முகம் சுளிக்கிறோம். அளவிற்கு மேல் அடுத்தவர் எல்லை மீறும்போது நாகரீகமாக நம் எதிர்ப்பையும் உடனே பதிவு செய்கிறோம்.

இதுபோன்ற எல்லைக் குறியீடுகள் சரியா தவறா என்பதல்ல என் விவாதம். நம்மைச் சுற்றி நாம் வளர்த்திருக்கும் இந்த எல்லைக் குறியீடுகள் மற்றவர்களால்  ஆக்கிரமிக்கப்படும்  போதுதான் தலைவலி ஆரம்பமாகிறது. 

யாரும் என் எல்லைக்குள் வரக் கூடாது. அதற்கான உரிமை உங்களுக்குத் துளியும் கிடையாது என்றால் தனிமைதான் நமக்குக் கிடைக்கும். தனிமை சுகம்தான். தவறில்லை. அது தற்காலிக தனிமையாக இருக்கும் பட்சத்தில் மிகச் சரி. சக மனிதர்களை அண்டவிடாத இறுக்கமான தனிமை மனவியாதியின் முதற் குறியீடு.

இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பிடிபட்ட ஜெர்மானிய போர்க்கைதிகளை நான்கு பேருக்கு ஒரு அறைவீதம் சிறை வைத்தார்கள். உடனே ஒவ்வொருவரும் அந்த அறையை நான்காகப்  பிரித்து தற்காலிகத் தடுப்புகளை ஏற்படுத்திக்கொண்டு தத்தம் தனிமையை பதுகாத்துக் கொண்டார்களாம். அதற்குக் காரணம் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறைதான். ஜெர்மானிய வீடுகளனைத்தும் சற்று இறுக்கமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். மூடிய வாசல்கள். முழுவதும் திரைச் சீலைகளால் மறைத்த ஜன்னல்கள். வீட்டின் முன் அமைப்பு வேளியே துளியும் தெரியாத வண்ணம் கட்டப்பட்ட உயர்ந்த சுற்றுச் சுவர்கள். இப்படி இந்த மனிதர்கள் தனித் தனித் தீவுகளாக வாழ்ந்தது கூட ஹிட்லரின் கொடுங்கொலாட்சிக்கு வழி வகுத்ததென்று ஒரு சரித்திரப் பார்வை உண்டு..

ஜப்பானிய மொழி அகராதியில் இல்லாத  ஒரு வார்த்தை “தனிமை”. ஆனாலும் அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அராபியர்களைப் போல இறுக்கமாக அணைத்துக்கொள்ளாமல், தனி வட்டத்தில் எட்ட நின்று கொண்டு முகமன் தெரிவித்துக் கொள்வார்கள். ஜப்பானியர்களின் அகராதியில் தனிமை என்ற வார்த்தை இல்லை எனினும் நடைமுறை வாழ்க்கையில் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மொழிகள் நாடுகள் கடந்து அனைத்து மனிதர்களிடையே இந்த எல்லை வளையம் இருக்கிறது. இதற்குக்காரணம் தாயின் கருப்பைக்குள் பத்து மாதங்கள்  பாதுகாப்பாக தனிமையுடன் இருந்தது கூட இருக்கலாம். கருப்பைக்குள் இரட்டையர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். செல்லமான முஷ்டியுத்தம் செய்தாவது பிறக்கும் முன்பே அவரவர்கள் தத்தமது இடத்தை ஊர்ஜிதம் செய்துகொள்வார்கள்.