கல்யாண்ஜி கவிதை

ஒரு சிறு கைப் பையை
மடியில் வைத்திருந்த பெண்
மிக அழகாக இருந்தார்.
தன் அழகு முழுவதையும்
அந்தப் பையிலிருந்து எடுத்திருப்பது போல,
இந்த நிகழ்ச்சி முடிகையில் அதை மீண்டும்
அந்தப் பையில் பத்திரப்படுத்த வேண்டியது போல இருந்தது
மடியில் வைத்திருந்த விதம்.
நான் பேசிய பேச்சின் ஒன்றிரண்டு சொற்களையும் வைக்க
அதில் இடமிருக்குமா தெரியவில்லை.