அதங்கோடு அனிஷ்குமார்
தலைகீழ் மாற்றம்
என் மீதான
ஒரு புகாருக்குப் பிறகு
எல்லாமே
தலைகீழாகிவிட்டது
பழகிய மனிதர்கள்
மெல்ல மெல்ல
சலனமற்று விலகுகிறார்கள்
என்னிடம்
பேசத் தயங்குகிறார்கள்
ஆனால்
என்னைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
என் புன்முறுவலைக் கூட
ஒரு தலைதிருப்புதலில்
மறுதலிக்கிறார்கள்
தனிமை இருளுக்குள்
தள்ளிவிட்டு
தங்கள் மேல்
புனிதப் போர்வைகள்
போர்த்திக் கொள்கிறார்கள்
என் இருப்பை கேலிசெய்யும்
அவர்களின் குரல்கள்
என்னை
குற்றவாளியாக்கி
குதூகலிக்கின்றன
என்னை
நெருப்பில் தள்ளிவிட்டு
என் துடிதுடிப்பை
கைபேசியில் படமெடுத்து
ரசிக்கும்
இவர்களிடம்
எப்படி நிரூபிப்பது
புகார்கள்
குற்றங்களல்ல
சமீபத்திய கவலை
இனிமேலும்
தாங்கிக் கொள்ள முடியாது
என்றான பிறகு
உங்களுக்காகவும்
அவர்களுக்காகவும்
இவர்களுக்காகவும் என
என்
கழுத்தின் மேல்
ஒட்டிக் கொண்டிருந்த
தலைகளை
ஒவ்வொன்றாய் வெட்டி
சவப்பெட்டிக்குள்
விட்டு விட்டு
போகிற போக்கில்
மெல்லத் திரும்பிப் பார்க்கையில்
வெட்டப்பட்ட
தலைகளில்
திறந்து கிடக்கும் கண்களில்
தெரிகின்றன
வேறுவேறு முகங்கள்.
என் சமீபத்திய கவலையெல்லாம்
இனியும்
தலைகள் முளைக்காமல்
தடுப்பது எப்படி என்பது தான் .
-அதங்கோடு அனிஷ்குமார்
