-சௌவி
இன்னும் அவள் எழவில்லை
அவளுக்காக
வீட்டுக்கு உள்ளேயும் வாசலிலும்a
குப்பைகள் காத்திருக்கின்றன
அவளுக்காக
கருவேப்பிலைச் செடி
இலைகளைக் கிள்ளிப்போவாளெனக்
காத்திருக்கிறது
வெளிவாசல் கதவுக்கு வெளியே
நேற்றைய பழையதைக்
கட்டாயம் போடுவாளென
ஒரு நாய் காத்திருக்கிறது
அடைக்கப்பட்டிருக்கும் தன்னைத் திறந்துவிடுவாளென
சமையல் எரிவாயு காத்திருக்கிறது
மூடப்பட்டிருக்கும்
குளிர்சாதனப்பெட்டிக்குள்
மூச்சு முட்டிப்போய்
வெளியே எப்போதடா போவதென
காய்கறிகள்
அவளுக்காகக் காத்திருக்கின்றன
நேரம் வரை தூங்காமல்
நீண்டு போன நேற்றைய இரவின்
கழுவப்படாத பாத்திரங்கள்
தங்களுக்கான இடத்தில்
நிறைந்து காத்திருக்கின்றன
உடனே அவளை அடுத்தவீட்டில்
தேடவேண்டாம்
உங்கள் வீட்டிலும்
இந்த அவள் இருக்கிறாள்
நீங்களும்
வீட்டு வாசலில் வந்து விழுந்த
செய்தித்தாளைப் பிரித்து வைத்துக்கொண்டோ-
தொலைக்காட்சியை உயிர்ப்பித்தபடி
அதன் முன்னே அமர்ந்து
சானல்களை மாற்றிக்கொண்டோ
அவளுக்காகக் காத்திருக்கிறீர்கள்
காஃபி கொணர்வாளென.
இன்று விடுமுறைதானே
இன்னும் கொஞ்ச நேரம்
அவள் தூங்கட்டுமே
அல்லது இன்றேனும் நீங்கள்
அவளாக மாறுங்களேன்
-சௌவி

அருமை…
அருமை
மிகவும் அருமை
மகிழ்ச்சி
ஆஹா!என்ன புரிதல்!
அருமையான கவிதை, மெதுவாக உலுப்பி கேள்வி கேட்கிறது. “அல்லது இன்றேனும் நீங்கள் அவளாக மாறுங்களேன்” இந்த கடைசி வரிகள் அதிகம் எனப் படுகிறது.
அழகிய கவிதை. பெண் அருமை தெரிந்தவர். வாழ்க இளைய சமுதாயம் அன்புடன் , புரிதலுடன்