காத்துக் கொண்டிருக்கிறேன்/சாந்தி பாலா

இங்கிருந்து பார்த்தால் தெரியுமே, அந்தப் பாலம், அதை அமைக்க நானும் இடைவிடாது ஓயாமல் ஓடினேன். எல்லாம் அந்த சுந்தர புருஷன் ராமனின் மீது கொண்ட பக்தியால். அது பக்தியா, பரிதாபமா, காதலா என்று இன்றுவரை புரியவில்லை. இப்படி ஒரு கணவன் அமையக் கொடுத்து வைத்தவள் எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும், எத்தனை பேரழியாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணி வியந்ததோடு கண்ணில் பார்க்காத அவள் மீது பொறாமை கொண்டேன் என்றால் மிகையில்லை. எப்படித் துடித்துப் போனான் அந்தக் கணவன். ஊணும் உறக்கமும் இன்றி ‘சீதே, சீதே’ என்று எந்நேரமும் அவள் நினைவில் உருகிய அந்த ராமன் போல ஒரு கணவன் அமையவாவது மனிதப் பிறவி எடுக்க வேண்டும் என்று ஏங்கினேனே. கடலைப் பார்த்த வண்ணம் கண்களில் நீர் வழிய அவன் நிற்கும் கோலம் இன்று கூட என் மனக்கண்ணில் நிற்கிறதே. நானும் இந்த சிறிய உடம்பில் ஒட்டிய மணலில் அந்த அதிசயப் பாலத்தை கட்ட உதவினேனாம்! என்னை அந்த தெய்வ புருஷன் அணைத்து முதுகில் விரல்களால் தடங்கள் பதித்த அந்த நிமிடங்களை அடுத்து எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மறக்கக் கூடாது என்று வரம் கேட்டேன். அவன் தன் படையோடு கடந்து சென்ற பாலத்தில் இங்கும் அங்கும் ஓடி அவன் நினைவாகவே நாட்களை செலுத்தினேன். சென்றான், வென்றான், மனைவியாடு மீண்டான், தன் கடமையை ஏற்று அரசனான், ஒப்பற்ற நல்லாட்சி நடத்தினான் என்று செய்திகள் வந்த போது எப்படி மகிழ்ந்தேன். அவன் ஸ்பரிசம் பட்ட இந்த உடல் அழியாது இருந்து கொண்டிருந்ததில் மிக மகிழ்ந்தேனே! ஆனால் அந்தோ பரிதாபம், இனி ஒரு கணமும் வாழ விரும்பவில்லை, ஆனால் எனக்கு மீட்சி எப்போது? என்றைக்கு அந்த ராமன் தன் அன்பு மனைவியை மற்றவர் ஐயம் தீர அக்னியில் இறங்கச் சொன்னானோ, அதைக் கேட்ட அன்றே இறந்திருக்க வேண்டும் நான்! அந்தக் கடல் அரசனும் தன் கோபம் தாங்காமல் அந்தப் பாலத்தை விழுங்கியாயிற்று. புயலில் முறிந்த இந்த மரத்தின் மீது நின்று காத்துக் கொண்டிருக்கிறேன், கண்ணிலிருந்து மறைந்தாலும் கருத்திலிருந்து அழியாத அந்தப்பாலத்தை பற்றிய நினைவுகளோடு அந்தக் காலன் என்று வருவானென்று!