காவல் தெய்வம்/நாகேந்திர பாரதி

இப்போது இந்தச் சிலை சென்னை மியூசியத்தில் . அதன் அடியில் பாதி அழிந்த நிலையில் இருக்கும் அந்தக் குறிப்பைப் படித்தான் கதிரேசன் .

‘இது ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குறிச்சி என்ற ஊரின் கண்மாய் அழிந்தபோது அங்கு துருத்திக் கொண்டிருந்த கல்லைக் கண்டு தோண்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டது . இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்சிலை என்றும் அங்கே காவல் தெய்வமாக ஊர் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்திருக்கலாம் ‘என்ற செய்தி அதில் .

‘ எல்லாத்துக்கும் ஒரு கதை அடிக்கிறானுங்க இவனுங்க . அதையும் நம்புது ஒரு கூட்டம் ‘ என்று அவர்களை மனதில் கிண்டல் செய்தபடி நகர நினைத்தவன் அவளைப் பார்த்தவுடன் நின்று விட்டான் .

அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண் . அந்த கைடு சொல்வதை ஆவலுடன் கவனித்துக் கேட்டுக் கொண்டு இருந்தாள் அவள் .

‘இந்தச் சிலையில் ஆபரணங்களும் ஆயுதங்களும் எவ்வளவு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன ’ என்று ஆச்சர்யத்துடன் ஆங்கிலத்தில் வியந்த அவள் மேனி மேல் மேய்ந்து கொண்டிருந்தன கதிரேசனின் கண்கள் .

அவர்கள் நாகரிகத்திற்கு ஏற்ப அவள் அணிந்திருத்த குட்டைப் பாவாடையிலும் இறுக்க மேலாடையிலும் திணறிய அவள் அங்கங்களை ஆசையுடன் பார்த்திருந்த அவனுக்கு அந்த கைடு அடுத்துச் சொன்னது கேட்கவில்லை .

‘இந்தக் காவல் தெய்வம் அந்த ஊரில் இருக்கும் பெண்களைத் தீய நோக்கோடு பார்ப்பவர்களை தனது வெட்டருவாளால் வீழ்த்தி விடுமாம் ‘ . அப்போது லேசாக அசைந்த அந்தச் சிலை கதிரேசன் மேல் சாய்ந்தது . விழுந்த அவன் கழுத்தில் வேகமாகப் பதிந்த அந்தக் கல் அரிவாளில் தெறித்தது அவன் கழுத்து ரத்தம் .

அப்போது தொலைக்காட்சியில் படத்துடன் அந்தச் செய்தி ‘ சென்னையின் சில இடங்களில் லேசான நில அதிர்ச்சி . மக்கள் பயத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடினர் ‘

—————-