
( வெள்ளிக்கிழமை (26.05.2023) அன்று நவீன விருட்சம் நிகழ்வில் தலைப்புக்கு வாசித்த 6 கவிதைகள்.)
- மெட்ரோ ஸ்டேஷன்
மெட்ரோ ஸ்டேஷனில்
காலையிலிருந்து
இரவு வரை காத்திருந்தேன்
அவள் வரவில்லை
அவள் வரவே இல்லை
- பூனை
பூனை கர்ணகடுரமாய்
கத்தியது
‘மியாவ்..மியாவ்..’
என்று.
பக்கத்திலிருந்த
இன்னொரு பூனை
உர்ர் ரென்று துரத்தியது
நான் கீழே போய் விரட்டினேன்
- கண்ணாடி
கண்ணாடி முன்
நின்றேன்
நான்…நான்..
ஆனால் நான் மாதிரி
தெரியவில்லை
சிறிது நேரம் கழித்து
திரும்பவும் ஆடியில்
முகம் பார்த்தேன்
இப்போது நான் மட்டும்தான்
தெரிந்தேன்
- தெரு
எங்கள் வீடு இருக்கும்
தெருவில்
எல்லாம் உண்டு
ஒர் அழகான செடி
மஞ்சள் நிறப் பூக்களை
சுமந்து நின்றது
கொள்ளை அழகு
யாரோ
உடனடியாகப்
பூக்களைப் பறித்துக்கொண்டு போய் விடுகிறார்கள்
- வாழ்க..வாழ்க..
உங்களைப் பார்க்கிறேன்
வாழ்க வாழ்க என்கிறேன்
நீங்களும் ம்ம் என்கிறீர்
திரும்பவும் உங்களைப்
பார்த்து
வாழ்க வாழ்க என்கிறேன்
இப்போது
முகத்தைச் சுளித்துக்கொண்டு
நீங்கள் ஓட்டமாய்
ஓடிக் கொண்டிருக்கிறீர்
என் பார்வையில் படாமல்
- மின்னல்
வானத்தில் மின்னல்
ஒரு வைர ஊசி
மின்னல்
ஒரு நிமிடம்
கண்ணை மூடித்
திறப்பதற்குள்
மறைந்து போய் விடுகிறது
ஐயோ மின்னல்
