அர்த்த மாயை/ எல்.ரகோத்தமன்


 
மதில் மேல்
அமர்ந்திருந்த பூனை
“ மியாவ்…மியாவ்..” என
ஸ்வரம் பாடியது!
 
உடனே
மதிலடியில் நின்றிருந்த
கழுதை
தனக்குத் தானே
கத்திக்கொண்டது!
 
கழுதையின்
நாராசக் குரலுக்கு
கட்டிப் போடப்பட்டிருந்த
வெண்குதிரை
சற்றே கணைத்து
சிலிர்த்துக் கொண்டது!
 
கா..கா..கா என கரைந்தபடி
ஒரு காகம் பறந்து வந்து
குதிரையின் மீதமர்ந்து
தன் அலகை குதிரையின்
முதுகில் தீட்டிக்கொண்டது!
 
யாரையோ அழைத்த
காகத்திற்கு
தெரு நாய் ஒன்று
வாலாட்டியபடி ஓடி வந்தது
காகத்தின் காவலுக்கு!
 
திடீரென
உறும ஆரம்பித்த
தெரு நாயின் குரல்
சற்றே தொலைவில்
சங்கிலி முனையில்
கட்டுண்டு தவித்த
தன் இனத் தோழனின்
காதில் விழவில்லை!
 
ஆனால்
சங்கிலியின் மறு முனையில்
கட்டுண்டிருந்த எஜமானனின்
காதில் விழுந்த்து!
 
எஜமான்
தன் செல்லக் குழந்தையை
வேறு திசையில்
அழைத்துச் சென்றான்!
 


31-05-2023
                                        ***