
அமேசான் பிரைமில் ‘வதந்தி’ தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா- அதில் முக்கியமாக என் மனதில் தங்கிவிட்ட நிலக்காட்சி செம்மண் தேரிக்குள் கதாநாயகன் செல்லும் காட்சி. நான் பாண்டிச்சேரி பகுதியில், திருச்செந்தூர்- உவரி பகுதியில் செம்மண் தேரி நிலங்களைப் பார்த்திருக்கிறேன். ‘வதந்தி’ தொடரில் காட்டப்படும் கன்னியாகுமரி மாவட்ட செம்மண் நிலம் அடர்சிவப்பு நிறத்தில் இன்னும் வசீகரமாக இருந்தது. ஒரு வேளை டிஜிட்டலாக அதன் செம்மண் நிறத்தை அதிகபடுத்தி இருப்பார்களோ என்ற எண்ணம் கூட எனக்கு ஏற்பட்டது. என்னுடைய ஆரம்பகால கல்விப்புல வாழ்க்கையில் என்னை வெகுவாக பாதித்த நூல்களில் ஒன்று வரலாற்றாசிரியர் Simon Schama எழுதிய Landscape and Memory என்ற நூல். ஸ்காமா தன்னுடைய புத்தகத்தில் மரங்கள் (காடு), பாறை, தண்ணீர் என்ற பகுதியில் இந்த மூன்றும் நிலங்களின் பகுதியாக ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படை வளர்ச்சிக்கு எப்படி அடிகோலின என்று எழுதுகிறார். நிலக்காட்சிகளின் உள்ளே இருக்கும் மனிதனின் நனவிலி புராணங்கள் ஒரு பண்பாட்டின் அடிப்படை அடையாளங்களை தீர்மானிப்பதாக இருக்கின்றன என்பதை ஸ்காமா விரிவாக எடுத்துக்காட்டுவது எனக்கு மிகவும் உவப்பானதாக இன்றைக்கும் இருக்கிறது. ஃப்ரெஞ்சுக்கவி பாதலேரும் ஜப்பானியக்கவி பாஷோவும் கூட நிலக்காட்சிகளை தங்கள் கவிதைகளின் அடிப்படை உருவகங்களாகக் கொண்டிருக்கின்றனர். ஓவியங்களுக்கும் கவிதைகளுக்கும் இடையிலுள்ள பொதுவான காட்சிப்படுத்தும் தன்மைகளிலும் நிலக்காட்சிகள் முக்கியமானவை. ஆஹ் நான் வதந்தித் தொடரில் பார்த்த செம்மண் நிலத்தைப் பற்றி சொல்ல நினைத்து வேறு பலவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். செம்மண் தேரி நிலங்களை நான் அடிக்கடி கனவு காண்கிறேன். என்ன சொல்கின்றன அவை? உவரியில் பார்த்த நிலக்காட்சியைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
உவரியின் நிலக்காட்சி
—
காலத்தின் புனைவாய் பிரேமையின் மடிப்புகளோடும்
உறக்கத்தின் ஆழ்நிலை ஓடைகளோடும்
புவியில் உன் இருப்பின் மென்கதுப்பாய்
தூய்மையின் குருதியாய் திட்பமாய்
உவரியின் செம்மண் தேரிகள் துலக்கமாகின்றன
உவரியின் உப்புக்காற்று பனைகளூடே
உன் உன்மத்தத்தின் புயல் போலவே வீசுகிறது
கடல் அலைகள் ஆர்ப்பரித்து கொந்தளிக்கையில்
உன் திகைப்பின் பூர்ணிமை திமிறி எழுகிறது
அடிவானத்தில் அதன் சன்னமான
மணல் போன்ற செந்நிற கிரணங்கள்
தேரியின் புழுதியோடும் உன் குருதியோடும் கலக்க
எங்கும் செந்நிற ஐக்கியம்
நீயும் நிலவும் நீர்நிலையும் நிலமும் கடலும்
கலந்த கணத்தில் நானுனக்கு சொல்வதெல்லாம்
உவரியிலிருந்து உன் ஏக்கத்தின் தொலைவில்தான் பரிபூரணம்
உன் பரவசத்தின் அருகில்தான் பேரெழில்
உன் ஆழ்மனச் சித்திரமே இவ்வுலகு
நீயே தேரி
நீயே திரு
