எஸ்.சண்முகம் கவிதை

எதிரிடும் பொழுதெல்லாம்
அவருக்கான தனிமுத்திரையாய்
அடர்சாம்பல் வண்ண ’சபாரி சூட் ’
அரைக்கையும் சில நாட்களில் முழுக்கையும்
அதே துணியில் அதே வண்ணத்தில்
எல்லா நாட்களிலும் அணிந்திருந்தார்

பழைய ஆங்கில துப்பறியும் திரைப்படங்களில்
கதாநாயகன் அணியும் சற்று அகலமான
மேலுயரமான தொப்பியுடன்
கடைகளில் ஏதேனும் வாங்கும் தருணங்களில்
பிறமொழி கலப்பிலா பொருத்தமான தமிழ்ச்சொற்களில் தனக்கு வேண்டுவன கேட்பார்

அவர் முன்னே நிற்போரெல்லாம் திரும்பி
விநோத பார்வையைச் செலுத்துகையில்
நான் மட்டும் மிகுஇயல்புடன் நின்றிருந்தேன்
கடைக்காரர் இவர் யார் சார் என்றார்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாக இருக்கலாம் என்றேன்
இல்லை சார் அவர் பேராசிரியராக இருந்திருக்கலாம் எனக் கூறிய பின்
கடைக்காரர் நகைப்பாரென காத்திருந்தேன்
அவரோ அடுத்தவரிடம் என்ன வேண்டுமென்றார்

அனால் ஒருபோதும் அவர் ஷூ அணிந்து பார்த்ததில்லை
பாட்டாவின் ஹவாய் காலணிதான்
அதுவும் பழைய மோஸ்தர்
வாரத்தில் சனி ஞாயிறு தவிர
மற்ற நாட்களில்
காலை நடைப்பயிற்சியிலும்
அடர்சாம்பல் வண்ண சபாரி சூட்டில்
தொப்பியை மறக்காமல் அணிந்த அதிநடைதான்

நான் வசிக்கும் தெருவில்
ஒரு அடுக்குமாடி குடியிருப்பின்
முன்பக்க பால்கனியில் மாலையில்
அவர் தொப்பியைக் கழற்றிவிட்டு
சபாரி சூட்டில் எதிர்வீட்டு சாளரத்தை உன்னித்தபடி
நிற்பதைப் பார்த்துள்ளேன்

அவரைக் காணும் சந்தர்ப்பங்களில்
இவர் உறங்கும்போதும் சபாரி சூட்டுடன்தான்
இருப்பாரோ என நினைக்கையில்
ஒருவேளை இரவுநேரத்திற்கென
ஓவர் சைஸ் சபாரி சூட் தைத்திருப்பாரோ.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09MHm8N8HMHZHLzUjHSMi6xruj9NdmWrzmKNiSZcqM8u2KB4kShxoKoJNNFgQ6H4fl&id=100002902527443&mibextid=Nif5oz