ஜோ அண்ட் ஜோ/எம்.டி.முத்துக்குமாரசாமி


1

ஜோ (நானாக வைத்த பெயர்) ஒரு தெருவோர தீர்க்கதரிசி. நீங்கள் அவரை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜடாமுடியும், தாடி மீசையுடன் அழுக்குத் தோள்ப்பையுமாக வதங்கிக் கிடப்பார். பாலத்தின் மேலேறி சிலசமயம் ஏதேதோ ஆரூடங்களை உரக்கக் கத்துவார். என்னுடைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள இடம் என்பதால் அவரை அடிக்கடி பார்க்க நேரிடும். ஒரு முறை என்னிடத்தில் பதினேழு ரூபாய் கேட்டார். கொடுத்தேன். அதிலிருந்து ஏதோ ஒரு எண்ணிக்கையில் பணம் கேட்பார். கூடுதல் குறைவாகக் கொடுத்தால் வாங்கமாட்டார். நாற்பத்தி ஒன்பது ரூபாய் என்றால் சரியாக நாற்பத்தி ஒன்பது தர வேண்டும் ஐம்பது ரூபாய் கொடுத்தால் வாங்கமாட்டார். அருகாமையிலுள்ள பீடாக்கடையில் வட இந்தியர் கூட்டம் அள்ளும்; கார்களை நிறுத்திவிட்டு பீடா வாங்குவார்கள். அவர்களுக்கு ஜோ ஒரு பெரிய ஜோதிடர், தீர்க்கதரிசி, மகான், மாயாவி, மந்திரவாதி என பலவிதமான நம்பிக்கைகளுண்டு. அவர்கள் நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையெல்லாம் அவருக்கு தருவார்கள் அவற்றையெல்லாம் வாங்கி அவர்களை நோக்கி வீசி எறிவார் அவர்கள் அவற்றை பயபக்தியுடன் பொறுக்கிக்கொண்டு போவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பங்க் கடையில் டீ வாங்கிக்கொடுத்து நானும் அவரோடு நின்று குடித்தேன். அதிலிருந்து அவருக்கு என்னிடத்தில் மேலும் நெருக்கம் உண்டானது என நான் நினைத்தேன். போன மாதம் என்னிடத்தில் மடித்த காகிதம் ஒன்றைக் கொடுத்து அதை வாசிக்கும்போது எனக்கு அட்டமாசித்தி கிடைக்கும் என்றார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை. இன்று அவர் இறந்துவிட்டதாக அறிந்தேன்.வருத்தமாக இருந்தது. அவர் கொடுத்த காகிதத்தைப் பிரிக்காமலேயே பத்திரமாக வைத்திருப்பதும் நினைவுக்கு வந்தது.

2

ஜோ ப்ரயன்ஸ்கி ஏரியில்
படகில் சுற்றி வர விரும்பினான்
படகுக்காரன் ஒரு சுற்றுக்கு
இரண்டாயிரம் ரூபாய் கேட்டான்
ஜோ ப்ரயன்ஸ்கி இரண்டாயிரம் ரூபாயா
என்று வாய் பிளந்தான்
பின்னே, யேசு நீரில் நடந்த ஏரியாயிற்றே
இது என்றான் படகுக்காரன்
அவர் ஏன் நீரில் நடந்தார் என்று
இப்போதுதான் புரிகிறது
என்றான் ஜோ ப்ரயன்ஸ்கி
படகுத் துறை காலிப் படகுகளால் நிரம்பியிருந்தது

3

முன்பொரு காலத்தில்
ஜோ ஏரியில் நீர் மேல் நடந்தான்

ஏரி படர்தாமரைக் கொடிகளால் நிரம்பியிருந்தது
அந்தியில் அவன் நடந்ததால் வெளிச்சம் போதவில்லை
ஏரியில் படகுக் கட்டணம் அதிகம் என்றெல்லாம்
சொல்லிக்கொண்டோம்

மீண்டும் ஜோ ஏரியில் நீர் மேல் நடந்தான்

இது என்ன பெரிய அற்புதம்
அம்பாசடர் மட்டுமே ஓடிய நம் சாலைகளில்
இப்போது எத்தனை வகைக் கார்கள்
அது போல நீர் மேல் நடக்க
புதியதாய் ஒரு சப்பாத்து
என அலட்சியமாயிருந்தோம்

மூன்றாம் முறையும் ஜோ ஏரியில் நீர் மேல் நடந்தான்

ஜோவிடம் ஆதார் அட்டையில்லை
ஜீதானே நீரில் நடக்க முடியும்
ஜோ எப்படி நீரில் நடக்கலாமென
நம்மிடம் அது செல்லுபடியாகவில்லை

நான்காம் முறை ஜோ ஏரியில் நீர் மேல் நடக்கவில்லை

வறண்டு விட்ட ஏரியில்
அடுக்கங்கள் கட்டி வசித்து
மகிழ்ந்திருக்கும் நமக்கு
யாரோ ஒருவன் எங்கோ ஒரு ஏரியில் நீர் மேல் நடப்பதாக
கனவுகள் வருகின்றன