கணையாழி கி.கஸ்தூரிரங்கன் மனைவி திருமதி இந்து ரங்கன்/திருப்பூர் கிருஷ்ணன்



*பல ஆண்டுகளுக்கு முன்னால் புதுச்சேரியில் கணையாழி வாசகர் வட்டக் கூட்டம் ஒன்று நடந்தது.

கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும் அதில் கலந்துகொள்வதற்காகப் புதுச்சேரி சென்றோம்.

வாசகர் கேள்வி நேரம். பிரசாத் என்ற அன்பர் எழுந்து வித்தியாசமான ஒரு கேள்வியைக் கேட்டார்.

(பிரசாத் சிறந்த ஓவியர். எழுத்தாளரும் கூட. சித்தன் என்பது அவர் புனைபெயர். பின்னாளில் யுகமாயினி என்ற இலக்கிய இதழ் நடத்தியவர். சில ஆண்டுகள் முன் காலமாகிவிட்டார்.)

பிரசாத் கேட்ட கேள்வி இதுதான்:

பொருளாதார நஷ்டம் கடுமையாக ஏற்படும் என்று தெரிந்தே எப்படி கணையாழியைத் தொடர்ந்து நடத்துகிறீர்கள்?

கூட்டம் கஸ்தூரிரங்கனின் பதிலுக்காகக் காத்திருந்தது. முகத்தில் தென்படும் அமைதி மாறாமல் மெல்லிய முறுவலுடன் கஸ்தூரிரங்கன் பதில் சொன்னார்:

எனக்கு ரங்கஸ்ரீ என்று ஒரு மகள். அவளை வளர்ப்பதற்காகச் செய்யும் செலவை நஷ்டக் கணக்கிலா சேர்ப்பேன்? அதுபோல கணையாழி எனக்கு இன்னொரு மகள்!

கூட்டத்தின் கைதட்டல் அடங்க நெடுநேரமாயிற்று. என் மனத்தில் சிந்தனை ஓடிற்று…

*குழந்தையை வளர்ப்பதில் என்ன செலவு நேர்ந்தாலும் மனைவி தடுக்க மாட்டார் என்பது இயல்புதான். ஆனால் இலக்கியப் பத்திரிகைக்கு ஆகும் செலவை மனைவி பொறுத்துக் கொள்வாரா?

பொறுத்துக் கொண்டார் அண்மையில் காலமான திருமதி இந்து ரங்கன். கஸ்தூரிரங்கனின் மனைவி.

அவரது சம்மதம் இல்லாதிருந்தால் கணையாழி என்ற அற்புத இலக்கியப் பொக்கிஷம் தமிழுக்குக் கிட்டியிராது.

கணவரைப் போலவே மனைவிக்கும் தீவிர ஆன்மிக நாட்டமுண்டு. ஏராளமான பேருக்கு இந்து ரங்கன் திவ்யப் பிரபந்தம் பாடக் கற்பித்திருக்கிறார்.

திருமதி இந்துரங்கனின் தங்கை திருமதி செளபாக்கிய லட்சுமியின் கணவரான ஸ்ரீராமபாரதி இசை வல்லுநர். அரையர் சேவை நடனத்தில் நிபுணர். அவர் கட்டிய திரு நாராயண பெருமாள் கோயில் சென்னையில் பள்ளிக் கரணையில் இருக்கிறது.

அந்தக் கோயில் எதிரில் ஒரு வீட்டில் குடியேறி, அதன் மாடியில் இருந்த சாளரத்தின் வழியே கோயில் கோபுரத்தைப் பார்த்தவாறு மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார் காந்தியவாதியான கஸ்தூரிரங்கன்.

ஆங்கிலப் பத்திரிகையான நியூயார்க் டைம்ஸில் பல்லாண்டுகள் சிறப்பு நிருபராக இருந்தவர். பின்னாளில் தினமணியின் ஆசிரியராக இருந்தவர்.

புகழில் ஒருசிறிதும் நாட்டமில்லாத துறவு மனப்பான்மையோடு வாழ்ந்தவர். அவருக்கேற்ற மனைவியாக வாழ்ந்தவர் இந்து ரங்கன்.

பிறவியிலேயே இதயப் பழுதோடு பிறந்த இந்து ரங்கனின் குறைபாட்டை அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்தார்கள் கைதேர்ந்த மருத்துவர்கள்.

பின்னர்தான் கஸ்தூரிரங்கனின் கரம்பிடித்தார். திருமதி இந்து காலமாகிறபோது 82 வயது. சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நலப் பிரச்னைகள்.

சுமார் பத்தாண்டுகள் முன்னால் கஸ்தூரிரங்கன் காலமான போதே தன்னில் பாதி கழன்று அவரோடு போய்விட்டதுபோல் உணர்ந்தார்.

உடல் கூட்டிலிருந்து ஒரு விடுதலை போல அண்மையில் பெருமாள் திருவடியில் இணைந்தார்.

சுதந்திரத் தியாகிகளை நாம் அறிவோம். தியாகியின் மனைவி பெயரையேனும் நாம் அறிந்துகொள்ள முற்பட்டதுண்டா?

சுதந்திரத் தியாகிகளைப் போலவே தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள் தான் இலக்கியப் பத்திரிகை நடத்தியவர்களும். அந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தது மனைவியின் தியாகம் தான்.

கஸ்தூரிரங்கனின் பணிகளை இலக்கியப் பக்கங்கள் குறித்து வைத்துக் கொள்ளும். அவரது மனைவியின் பாசத்தை அவருடன் பழகியவர்களின் நெஞ்சங்கள் குறித்து வைத்துக் கொள்ளும்.

(ஜூன் 2023 அமுதசுரபி இதழில் இடம்பெறும் கட்டுரை.)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0z8NuYwpCSY99a5oikjX7MXBdnXN2yqKd9YTfa4hwV4nEGCvzHnW53RnoVJwXzUv3l&id=100081607759751&mibextid=Nif5oz

One Comment on “கணையாழி கி.கஸ்தூரிரங்கன் மனைவி திருமதி இந்து ரங்கன்/திருப்பூர் கிருஷ்ணன்”

Comments are closed.