நினைக்கப்படும்/கலாப்ரியா

இப்படியாக நான்-அரிகிருஷ்ணப் பெருமாள் ராஜமர்த்தாண்டன்


`சாய்வின்றித்தான்
சிந்திக்கிறது மூளை
விரல்களோ
முகம் நோக்கி
அதற்குத் தக எழுதிவிடும்
அவ்வப்போது.
இப்படியாக நான்”

1975-ல் ராஜமார்த்தாண்டன் நடத்திய ‘கோகயம்’ இதழ் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்தது.நான்கு இதழ்கள் வந்தது.இரண்டு இதழ்களில் நான் எழுதிய நினைவு.மார்த்தாண்டன் அப்போது ஆராய்ச்சி மாணவர். S.C.A HOSTEL பாளையம், திருவனந்தபுரம் முகவரியிலிருந்து வந்தது. அங்குதான் அவர் தங்கி இருந்தார். கோகயம் என்றால் தாமரை. கம்பராமாயணத்தில் வருகிறதாக அவர் சொன்னார். பின்னர் அதுவே கொல்லிப்பாவையாக மாறிற்று. அது பிரமிள் வைத்த பெயர். நான் அங்கே போனது 76 பிப்ரவரி முதல் வார வாக்கில். ஏதோ இருக்கிற காசை வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். மார்த்தாண்டனுக்கு ஒரு கடிதம் மட்டும் போட்டிருந்தேன். நான் போய்ச் சேர்ந்த அன்று மாலை ஆ.மாதவன் அண்ணாச்சி கடையில் காத்திருந்தேன். காரியாவாட்டம் பல்கலை.யிலிருந்து பஸ் பிடித்து வர பெரிய சிரமம் என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது சரியாக வந்து சேர்ந்தார் மார்த்தண்டன். அதற்கு முன்பே ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு வார்த்தைகள், மூன்று பேரும் பேசினதுமே என்னை அழைத்துக் கொண்டு விறுவிறுவென்று கடையை விட்டு வெளியே வந்தார்.
அவருடைய சட்டைப் பையில் என்னுடைய கடிதம் இருந்தது. கழிவிரக்கம் சொட்டுகிற கடிதம். ஒரு மதுச் சாலைக்குள் நுழைந்தார். நான் என்ன என்றேன். சட்டைப் பையின் கடிதத்தை தொட்டுக் காட்டியவாறு சும்ம வாங்க’, என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனார்.இதான எழுதிருக்கீங்க’,என்று சொல்லிக் கொண்டே அரைக் குப்பி கொண்டு வருமாறு பணித்தார். அருமையான கடிதம் என்றார்.அடப்பாவி மனுஷா என்றிருந்தது. ஆம், உண்மையில் மனுஷன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ராஜ மார்த்தாண்டன்தான். யாரையும் எந்தக் காலத்திலும் எதிரியாய் நினைக்காதவர். சக எழுத்தளர்களிடையே ஒரு தவிர்க்க முடியாத பொறாமை உணர்வு (பெர்சனல் ரைவல்ரி என்று நம்பி குறிப்பிடுவார்.) இல்லாத யாரையும் நான் பார்த்ததில்லை. ஒரேயொரு விதிவிலக்கு மார்த்தாண்டன். அன்று பணம் அதிகமாய் கையில் இல்லை, என்பதே அவர் வருத்தமாயிருந்தது. ஸ்டைபண்ட் பணம் வர இன்னும் இரண்டு நாளாகும் அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.எனக்கு அங்கங்கே புதிதாய் ஒட்டியிருக்கிறபாற்கடல்’ சினிமாப்பட சாரதா போஸ்டர்களைப் பார்ப்பதே போதுமானதாயிருந்தது. அதொன்றும் பிரச்னயில்லை என்றேன். கடையைச் சாத்தி விட்டு, நாங்கள் வந்ததும் சொல்லிக் கொண்டு போவதற்காக, மாதவன் அண்ணாச்சி கடைக்கு முன்பாகக் காத்திருந்தார்கள். இரவு, பேச்சு பூராவும் புதுமைப் பித்தனைப் பற்றி இருந்தது, அவருடைய அறையில், புதுமைப் பித்தன் புத்தகம் கிடந்தது. சிற்பியின் நரகம் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். அவர் தான் பைலார்க்கஸ் போல் எனக்குத் தோன்றினார், நான் சொல்லவும் சொன்னேன். அப்போது அவர் உயரமாகவும் மேன்லியாகவும் இருப்பார். அவர் சிரிக்கவோ மறுக்கவோ இல்லை,சட்டென்று வாருங்க கொஞ்சம் கீழே போய்ட்டு வந்துருவோம் என்று சட்டையை மாற்றிக் கொண்டு கிளம்பினார். அறையில், சட்டையணியாமல் வேட்டியை மடித்துக் கட்டியபடிதான் உட்கார்ந்திருப்பார். பக்கத்திலேயே ஒருபார்’, அடைக்கப் போகிற நேரம், அவசரமாக நுழைந்து ஆளுக்கு கொஞ்சம், இருந்த காசுக்கு, ஊற்றிக் கொண்டோம். எவ்வளவு சாப்பிட்டாலும், கொஞ்சம் கூட நிதானம் இழக்காதவர்.
ஆமா நான் கலைஞனில்லை, என்றார் திடீரென்று. நான் தெளிவ்வாவே இருக்கேன்., எனக்கு உங்க அளவுக்கு சோகமான பார்வை இல்ல, ஒரு அல்லாட்டம் இல்ல பாருங்க என்றார். நான் சாத்தனாக இருக்க முடியாது பாருங்க என்றார். நான் புதுமைப் பித்தன் கதையெல்லாம் மறந்து விட்டிருந்தேன். மறுநாள் அறையில் என்னை விட்டு விட்டு காரியா வட்டம் போய், எப்படியோ முன்னூறு ரூபாயுடன் வந்து விட்டார்,பகல் பூராவும் நான் புதுமைப் பித்தனைப் படித்துக் கொண்டிருந்தேன் அன்றுதான் நான் புதுமைப் பித்தனை அவ்வளவு நிறையப் படித்தேன் என்று சொல்லவேண்டும். அப்போதுதான் வெளிவந்திருந்த எஸ் வி ஆரின் எக்சிஸ்டென்ஷியலிச்ம் ஒரு அறிமுகம் புத்தகம் வந்திருந்தது. அது அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.அதை எனக்கே தந்து விட்டார். அவருடைய அணுகுமுறையே வேறு. இசங்களின் கெட்ட பாதிப்பை (BAD INFLUENCE) அவருடைய விமர்சனங்களில் காணமுடியாது. விமர்சனங்கள் மூலம் நண்பர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதவர். அதற்காக தன் கறாரான அபிப்ராயத்தை எந்த தடாலடியும் இன்றி சொல்லிவிடுவார்.
அந்த மாத உதவித் தொகை பூராவையும், கோவளம், அங்கே இங்கே என்று கண்ட இடங்களிலும் சுற்றி, எனக்காகச் செலவழித்தார்.ஒரு வள்ளத்தில் ஏறிக் கொண்டு அலையில்லாத கோவளம் கடலில் கொஞ்ச தூரம், ஓடக்காரருடன் பேசிக் கொண்டே போனோம்., எனக்கு குளிர் எடுத்தால் சொல்லி விடுங்கள் என்று அவ்வப்போது கூறிக் கொண்டே வந்தார். வள்ளத்துக்குள்ளும் தண்ணீராகி, உடலும் நனைந்த பின்தான், எனக்கு அந்த உச்சி வெயிலிலும் குளிர் எடுக்கும் என்று புரிந்தது. சரி திரும்புவோம் என்றேன். பசித்தது. சொன்னேன். அதுக்கு முன்ன வாங்க, ரொம்ப நனஞ்சிட்டீங்க, என்று சாராயக் கடையில் புகுந்தார். அதுவும் தேவையாய்த் தான் இருந்தது.
அப்புறம் அவரை ரொம்ப நாள்க் கழித்து1982 வாக்கில் பார்த்தேன் .நான், மறுபடி திருநெல்வேலியில் இருந்தேன். வங்கியிலிருந்து வீடு திரும்பும் போது, எங்கள் தெரு முனையில் அவர் போல தெரிந்தது.எதிர்பாராத சந்திப்பாயிருந்தது. வீட்டுக்குப் போய் விட்டுத்தான் வருகிறேன் என்றார். மறுபடி வீட்டுக்கு அழைத்து வந்தேன்.ஒன்றுமே பேசாமல் இருந்தார். வீடு அப்போது சுமுகமாயில்லை. அதை அவர் முதலில் வந்து விசாரித்தபோதே உணர்ந்திருக்க வேண்டும். நான் வலியக் கேட்டேன் என்ன, என்ன யோசிக்கிறீர்கள் என்று. நிரம்பத் தயக்கத்திற்குப் பின்தான் பேசினார், பண உதவி கேட்டுத்தான் வந்தேன்,ஆனால் இங்கே நிலைமை சரியில்லை போலிருக்கிறதே என்று.அவர் தொந்தரவு தருகிற ஆளே இல்லை. சில முறை உதவி கேட்டிருக்கிறார், இருப்பதைக் கொடுத்து விட்டு போதுமா என்றால் இருந்தால்த்தான் அதிகமாய் கொடுத்திருப்பீர்களே என்பார்.
சின்னக் கபாலி என்ற பெயரில் கவிதைகளும் ,கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். கொல்லிப்பாவை 16 வது இதழில் என் கவிதைகளைப் பற்றி எழுதிய கட்டுரை எனக்கு மிக முக்கியமானது. ஒரு தமிழ் மாணவனை மிக நல்ல வாசகனாக மாற்றக் கூடிய தன்மையில் அவரது கட்டுரைகள் அமைந்திருக்கும். நல்ல வாசகனை, பரந்த வாசகனாக மாற்றும். வெருட்டும் தன்மை சிறிதும் இருக்காது. ”புதுமைப் பித்தனும் கயிற்றரவும்”, நூல் ஒரு அருமையான எடுத்துக்காட்டு. அதில் ஜெயமோகனின் கேள்விகளை முன் வைத்து தன் பாணியில் புதுமைப் பித்தனை அணுகி இருப்பார். அந்த கேள்விகளின் பதில்களை ஜெயமோகனே எழுதியிருந்தால் அது பல தர்க்கங்களை உள்ளடக்கி, (வேறு மாதிரி) இருந்திருக்கும். புதுமைப் பித்தன் போலவே எந்தச் சித்தாந்தத்துக்கும், கொள்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தன்னை முழுதாக ஒப்புக் கொடுத்து தன் சுயம் இழக்காதவர்.ஆனால் அவருக்கென்று தீர்மானமான முன் முடிவுகள் இருந்தன. அவையும் மனமும், அன்பும் சார்ந்து அமையப்பெற்றதுதான் . தேர்ந்து தெளிந்த முடிவுகள்தான்.
கொங்குதேர் வாழ்க்கை இரண்டாம் பகுதியில் அவர் 983 கவிதைகளைக் கோர்த்திருக்கிறார். அதை வாசிக்கிற, அதில் இடம் பெற்ற எந்தப் படைப்பாளியும் கண்டிப்பாக தனக்கும் பிடித்தமான தன் கவிதையை அவர் தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.அதில் குறிப்பிடத்தக்க விடுதல்கள் இருக்கின்றன. அது பற்றி சில நண்பர்கள், ஊட்டியில் வைத்து என்னிடம் சொன்னார்கள். அண்ணாச்சி நீங்க சொல்லுங்க அண்ணாச்சி அவை விடுபடக் கூடாதென்பதை என்று. நான் வசந்த குமாரிடம் சொன்னேன். இதுக்கு மார்த்தாண்டன் சரியான காரணம் வச்சுருக்காரு அண்ணாச்சி என்று அவர் சொன்னார். அது பற்றிய விவாதம் காலச்சுவட்டில் இடம் பெற்றது. அவர் தனது கவிதையை அதில் சேர்க்கவில்லை.அது எவ்வளவு பெரிய விஷயம்.அவரிடம் வெறும் ஆராய்ச்சிக் குறிப்புகளாக இல்லாமலும், அசதி தருகிற நடை இல்லாமலும் கட்டுரைகள் எழுத முடிகிற இயல்பான திறமை இருந்தது. பலவித தலைப்புகளில் வளர்கிற வாசகனுக்கும், வளர்ந்த வாசகனுக்கு இன்னும் நுணுக்கமான வாசிப்புக்கு வழிகோலுகிற விதமாய் நூல்கள் எழுதவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருப்பார்.
பதிவுகள் கூட்டத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறார். இரண்டாம் முறை வந்த போது காலையில் சாப்பிடப் பணம் வாங்கிக் கொண்டு போனவரைக் காணவே இல்லை. மாலையில் நான், சாரு, சிவா, பாண்டியராஜன் என்று நடை போனபோது குற்றாலம் பார்க்கில் உட்கார்ந்திருந்தார், ராஜகோபாலனுடன். நன்றாகக் குடித்திருந்தார். சாப்பிடவே இல்லை என்றார். சாப்பிடுமாறு வற்புறுத்திய போது மீன் கிடைக்குமா என்றார்.மீன் மீது பிரியம் ஜாஸ்தி. என்னையும் வற்புறுத்துவார். கன்னியாகுமரிக்கருகே உள்ள கோவலத்தில் உமாபதியின் நண்பர்களின் அழைப்பின் பேரில் 1975 கிறிஸ்துமஸ் முன்னிரவைக் கழித்தோம். மார்தாண்டன், எனக்காக கூழ்வற்றல் போன்ற, மீன் வறுத்ததைக் கள்ளுக்கு தொட்டுக் கொள்ள.கொண்டு வந்து கொடுத்தார், இது ரொம்ப அமட்டாது, என்று சொல்லியபடி. அங்கே அன்று வேறு எதுவுமே கிடைக்கவில்லை.எனக்கு மீன் பிடிக்காது. நிறைய தடவைகள், அதிலும் சென்னையில் அவரைச் சந்தித்து, கொண்டாடும் போது, நீங்க இடையன் விளைக்கு வரணும் கலாப்ரியா, கள்ளும் மீனும் சாப்பிட என்பார் தவறாமல்.
இடையன் விளைக்குப் போனேன், அவர் அப்பா,
அரிகிருஷ்ணப் பெருமாள் நாடார்-ஈஸ்வரவடிவு சமாதி அருகே குழியில் இருந்தார்.