இலக்கிய இன்பம் 73 /கோவை எழிலன்

மது உண்பார் சேரி

சீவக சிந்தாமணியின் நாயகனான சீவகன் இலக்கணையின் மேல் காதல் கொண்டிருக்கும் போது கடற்கரையில் மதுச்சேரியில் மலர்ந்திருக்கும் நீல மலரைக் காண்கிறான். அது அவனுக்கு தன் காதலியின் கண்களை நினைவு படுத்துகிறது.

அவன் அம்மலரிடம் நீ என்னதான் கடற்கரையில் ஒற்றைக் காலில் (ஒரே தண்டில்) நின்று தவம் செய்தாலும் என் காதலியின் கண்ணழகைப் பெற மாட்டாய். அதை அறிந்திருந்தும் நீ வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாய். இம்மதுச்சேரியில் குடித்து அறிவு மயங்கி இருப்பவர்களின் சேர்க்கை தான் இதற்குக் காரணமோ? என்று ஐயுறுகிறான்.

மூடர்களோடு சேர்வது தன்னையும் மூடனாக்கும் என்ற கருத்தையும் அழகான உவமையோடு விளக்கும் பாடல் இது.

நிறைஓதம் நீர்நின்று
நீள்தவமே செய்யினும்
வாழிநீலம்
அறையோ அரிவை
வரிநெடுங் கண் ஒக்கிலையால்
வாழி நீலம்
கண் ஒவ்வாயேனும்
களித்து நகுதி நின்
வாழிநீலம்
வண்ணம் இதுவோ
மதுஉண்பார் சேரியையோ
வாழி நீலம்