ஹரித்வாரில் மஹா கங்கா புஷ்கர விழா! (3)/ஜெ.பாஸ்கரன்

பிரயாணக் களைப்பு, நீண்ட நேரம் தூங்கி விட்டேன் போல் இருக்கிறது…..பதிவு தாமதமாகிவிட்டது!!

‘ஹர் கி பவுரி’ கங்கையின் அழகை அனுபவித்து, அங்கிருந்த மக்களின் ஆன்மீக ஆழத்தை நினைத்து வியந்தவாறே, கங்கா புஷ்கர விழா நடக்கும் இடத்திற்குச் சென்றோம். காஞ்சி மடம் சேர்ந்த மதராஸி தர்மசாலா மகரவாஹினி கோவிலில் (பிர்லா ghat) ஹோமம் மற்றும் அபிஷேகம், பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிர்லா படித்துறையின் மறுபக்கத்தில், தினமும் மாலையில் கங்கா ஆரத்தி விமரிசையாக நடந்தது.

பிர்லா காட், லால்தாராவ் புல்லில் மகரவாஹினி கோயில் அமைந்துள்ளது. தென்னிந்திய கட்டட வடிவில் அமைந்துள்ள இந்தக் கோயில், காஞ்சி காமகோடியின் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் நிறுவப்பட்டது. நவராத்திரியின் எட்டாவது நாள், காய்கறிகள், உலர் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, ‘சாகம்பரி’ என்ற பட்டத்துடன் அம்மனை இங்கு வழிபடுவது ஒரு வரலற்றுச் சடங்கு. கங்கா தேவி மகரவாகனத்தில் (முதலை வாகனம்) அமர்ந்து, வலது பக்கம் கையில் கலசமும், இடது பக்கம் கையில் சக்கரமும் கொண்டு அருள் பாலிக்கிறார். கோயிலின் பின்புறம் நன்கு பராமரிக்கப்படும் கோசாலை ஒன்றும் உள்ளது. கோயிலினுள் சிவலிங்கம், பிள்ளையார், நவக்கிரக சன்னதிகளும் உண்டு.

கோயிலுக்கு எதிரில், கங்கைக் கரையில் கொலுப் படிகள் போல் அமைக்கப்பட்ட இடத்தில் சிவன், பார்வதி, விநாயகர், வள்ளி,தேவசேனா சமேத முருகன், கங்கைக் கலசம், என அழகாக அருள் பாலித்தவண்ணம் இருந்தனர். கீழ்ப் படியில் அபிஷேகம் செய்வதற்கான இடமும், எதிரில் பெரிய ஹோமகுண்டமும் அமைந்திருந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு இறைவனுக்கு – நாங்கள் சென்ற அன்று முருகனுக்கும், மறு நாள் தட்சிணா மூர்த்திக்கும் – என்று சிறப்பான ஹோமங்களும், அபிஷேகமும், பூஜையும், வேதகோஷங்களும், தேவார,திருவாசக, பிரபந்தங்களும், பக்திப் பாடல்களும் என காலை முதல் இரவு வரை கங்கைக் கரையில் பக்தி மழை! முத்தாய்ப்பாக மாலை ஆறு மணிக்கு எதிர்க் கரையில் கங்கை அன்னைக்கு ஆரத்தி!

காஞ்சி மடத்தின் ஆசியுடன் அருமையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தினமும் கோபூஜையும், தம்பதிகள் பூஜையும் நடந்தன. மாலையில் நாதஸ்வர இசையும், ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும், தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்களும் ஓதப்பட்டன. வந்திருந்தவர்களும் பக்திப் பாடல்கள் பாடினர்.

கோயிலுக்கு எதிரில் இருந்த கர்நாடகா தர்மஸ்தலா கட்டடத்தில், கங்கா புஷ்கரத்திற்கு வந்திருந்தவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காலை டிபன், மதிய உணவு, மாலை காபி, டீ, இரவு உணவு எல்லாம் அங்கேயே தயார்செய்யப்பட்டுப் பரிமாறப்பட்டன. ஒரு வேளைக்குக் குறைந்தது இருநூறு பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டது!

ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை புஷ்கரம் கொண்டாடப்பட்டது. தினமும் பல ஆதீனத தலைவர்கள், சமயத் தலைவர்கள், சுவாமிகள் என வருகை தந்து ஆசி வழங்கியது சிறப்பு. சிதம்பரத்திலிருந்து வந்திருந்த ’தில்லை வாழ் அந்தணர்கள்’ முறைப்படி எல்லா பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தினர்.

கோயில் அமைந்திருந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில், சங்கர மடம் கங்கைக் கரையில் அமைந்திருந்தது. பின்புறம் கங்கை நதி ஆர்பரித்துச் செல்ல, அங்கேயே ஸ்நானம் செய்ய படித்துறை வசதியாகவும், பாதுகாப்பு வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. காலையில் சங்கல்பம் செய்துகொண்டு, கங்கையில் முங்கிக் குளித்தோம்! என்ன ஒரு குளிர்ச்சியான நீர் – மனமும், உடலும் குளிர்ந்து, மனதில் ஓர் அமைதி வந்து அமர்ந்துகொண்டது. எல்லோரையும் அரவணைத்து ஓடிக்கொண்டே இருக்கும் கங்கையைப் பார்த்தபடி படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். கங்கை நமக்குச் சொல்லும் செய்தி அதுதான் – ”எதற்கும் கவலையோ, அச்சமோ படாமல், யார் என்ன செய்தாலும் கலங்காமல், நீ நீயாக ஓடிக்கொண்டே இரு; உன் கடமையைச் செய்து கொண்டே இரு” – என்று தோன்றியது.

காசியை விட ஹரித்வாரில் நம் முன்னோர்க்கு அளிக்கும் திதிகளை – பித்ரு கடன்களை – கொடுப்பது சிறந்தது என்பார்கள். கங்கைக் கரையில் எனக்கு அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, பூர்வ ஜென்மப் பயனே என நினைத்து, மனம் நெகிழ்ந்தேன்.

பூஜைகள் முடிந்து, தீபாராதனையும் முடிந்து கிளம்பினோம். மா சாந்தி தேவி, ஶ்ரீ மாதா மானசா தேவி கோயில்களுக்குச் செல்ல நினைத்து, ரோப் கார் ஸ்டேஷன் சென்றோம். கூட்டமான கூட்டம் – டிக்கட் வாங்குவதற்கே இரண்டு மணி நேரம் கியூவில் நிற்கவேண்டும் போலத் தெரிந்தது. நல்ல வெயில் வேறு… ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று எண்ணி, வெளியே வந்தோம். 50 ரூபாய்க்கு அருமையான வெஜ் சாலாட் இலைத் தொன்னையில் கிடைத்தது – வெயிலுக்கு இதமாக வாங்கி சாப்பிட்டோம்! மானசா தேவி மீண்டும் ஹரித்வார் வருவதற்காகத்தான், இம்முறை தரிசனம் கொடுக்கவில்லை என எங்களையே சமாதானம் செய்து கொண்டு, கெஸ்ட் ஹவுஸ் வந்துவிட்டோம்.

மாலை மீண்டும் கங்கைக் கரைக்குச் சென்று, எதிர்க் கரையில் கங்கை ஆர்த்தியைக் கண்டு களித்தோம். படியில் அமர்ந்தபடி, அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் காலை நனைத்தபடி மிதந்து செல்லும் தீபங்களைப் பார்த்தோம். கவிழ்ந்து விடாமல், தீபமும் அணைந்துவிடாமல், அந்த விளக்குகள் ஆடி, ஆடி மிதந்து செல்லும் அழகே அழகு. கங்கை நதியை ஓர் தெய்வமாய், அன்னையாய் வணங்கும் மனிதர்கள் – வயது வித்தியாசம் இன்றி, ஆண்கள், பெண்கள் எல்லோரும் – எனக்கு வியப்பாய் இருந்தது! கரையில் இருக்கும் சிவனோ, விநாயகனோ, சக்தியோ – தெய்வத்தின் முன் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கி, கையில் இருக்கும் பூக்களை கங்கா மாதாவிற்கு அளித்து, தீபத்தை மிதக்கவிட்டு செல்லும் மனிதர்கள் நம் கலாச்சாரப் பெருமைகள், பழக்க வழக்கங்கள் மறையாமல் காத்துவருகின்றனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி! ஓடும் கங்கை நீரில் தெரியும் மின் விளக்கின் பிம்பங்கள், அந்த இருட்டில் தங்கக் குவியல்களாய் மின்னின! அமர்ந்திருந்த ஒரு மணிநேரமும் மனது அடைந்த அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை! இரவில் கங்கைக் கரையில் கங்கையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது, விவரிக்க முடியாத ஓர் அமானுஷ்ய அமைதியை, நிம்மதியை அளிக்கிறது – அமைதியாக, சத்தமின்றி கங்கை நம்முடன் உரையாடிக்கொண்டே செல்வது போலத் தோன்றுகிறது.

மனதில்லாமல், எழுந்து, கங்கைக் கரையைவிட்டு வெளியே வந்தோம். அந்த மாலையும், இரவும் அப்படியே உறைந்து போய்விடக்கூடாதா என்று கூடத் தோன்றியது – அனுபவித்து உணர வேண்டிய ஓர் அபூர்வ அனுபவம்!

ஊரிலிருந்து பேசிய என் மைத்துனன், அங்கே உள்ள ஒரு ஐயப்பன் கோயிலைப் பற்றிச் சொல்ல, தேடிச்சென்றோம். கடைகள், வீடுகளுடன் இருந்த கோயிலை கொஞ்சம் சிரமப்பட்டுதான் கண்டுபிடித்தோம். கேரளத்துக் கோயில்கள் எங்கும் ஒரே மாதிரிதான் – பூஜைகள், தீபாராதனை, அலங்காரம் எல்லாம்! சின்முத்திரை, யோக பட்டத்துடன் ஐயப்பன், ஒரு புறம் சிவன், பார்வதி, திருமால், மகாலட்சுமி சன்னதிகள், விநாயகருக்குத் தனியாக ஒரு சன்னதி, அந்தப்பக்கம் வித்தியாசமாக ஶ்ரீராம, லக்‌ஷ்மனர்களைத் தோளில் சுமந்தபடி ஆஞ்சனேயர் என அழகான கோயில். நாங்கள் போன நேரம் மாலை ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. கேரள முறைப்படி, சந்தனம், பூக்கள் கொடுத்தார்கள்!

நம்ம ஊரிலிருந்து அங்கு போய் செட்டில் ஆகிவிட்ட பெரியவர் ஒருவர் – வேட்டி, மேல் துண்டுடன், நீண்ட வெண்தாடியுடன் ஐயப்பன் சன்னதிக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். கங்கா புஷ்கரம் அதுவரை அவர் கேள்விப்படாத ஒன்று என்றார். அசோக் நகரின் எங்கு உங்கள் வீடு என்றார். வித்தியாசமான பெரியவர். அந்தக் கோவிலிலேயே தங்கியிருப்பதாகச் சொன்னார். பேச்சில் ஒரு அலட்சியம் இருந்தது. நம்ம ஊர்க்காரர்தான். அதற்குமேல் அவர் ஒன்றும் சொல்வதாயில்லை, நாங்களும் கேட்கவில்லை!

பூஜை சாமான்கள், கங்கைச் சொம்புகள், கிண்டிகள், விளக்குகள் எல்லாம் விளக்கொளியில் பளபளக்கும் கடைகள், துணிக்கடைகள், பிளாட்ஃபாரக் கடைகள், ஹோட்டல்கள், சக்கர வண்டியில் பழங்கள், ஸ்வெட்டர்கள், குல்லாய்கள்…’சாய்’ கடைகள்… ஹரித்வாரில் அசைவம் யாரும் சாப்பிடுவதில்லை என்றும், ஓட்டல்களில் கூட அசைவம் கிடைக்காது என்ற ஒரு செய்தியைக் கேள்விப் பட்டோம் – உண்மையா என்று தெரியாது.

இரவு உணவை முடித்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் வந்துவிட்டோம். மறுநாள் காலை மீண்டும் கங்கையில் குளித்துவிட்டு, ரிஷிகேஸ் போவதாக ஏற்பாடு….

தொடரும்..