
ரதி,இவள் தான் இந்த சின்ன கிரா மத்தின் கதாநாயகி. ரதியைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. பூந்தோட்டம் கிராமத்தின் அழகுப் பாவை,எல்லோர் மனமும் கவர்ந்த பூவை ரதி. சின்ன வயதில் தாயை இழந்த ரதிக்கு எல்லாமே அவளுடைய தந்தை செல்லமுத்து தான். அம்மாவும் நீயே , அப்பாவும் நீயே என்று அடிக்கடிப் பாடிக் கொண்டு செல்லமுதுவின் தலையைக் கோதி விடுவாள். பூந்தோட்டம் கிராமம் விழித்துக் கொள்வதற்கு முன்பே ரதி விழித்து கொண்டு காலை வேலைகளில் இறங்கிவிடுவாள். நான்கு வீதிகள் கொண்ட கிராமம். மிக அருமையும்,ரம்யமுமான சூழல். கிழக்கு சிவந்து ஒளி வெள்ளத்தை பாய்ச்சியது போல் இருக்கும் கிழக்கு பார்த்த வீதி. மாலை நேரம், கீழிறங்கும் கதிரவன் சிவப்பு நிற பந்து ஒன்று மூழ்குவது போல் காட்சி அளிக்கும். தெற்கு வீதி கடைசியில் வயல் வரப்புகளிலும் பயிர் செய்தவர்கள் மதிய உணவு நேரத்தில் கிராமக் கிணற்றடியில் வந்து உண்டு, ஓய்வுத் தேடுவார்கள். நிழலின் அருமை அப்பொழுது தான் தெரியும். வடக்கு புறமாக கிராமத்தில் அமைந்துள்ளது சின்ன கோவில்,உள்ளே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தெருவுக்கு பத்து வீடு என்று மொத்தமாக நாற்பது வீடுகள் கொண்ட பூந்தோட்டம் கிராமத்தின் சிங்காரப் பெண் ரதி சில பல வென்று வியாபாரம் செய்து சந்தோஷமாக இருப்பவள். முதியவர்கள்,சிறியவர்கள் என்று வேறுபாடு இல்லாமால் சகஜமாக பேசிப் பழகுபவள். அவள் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு மாணிக்கம் ஆசாரிது. ரதியை அவ்வப்போது கிண்டல் செய்வார்.ரதி,உன் மன்மதன் எப்ப வரப் போகிரான்? போங்க பெரியவரே என்று சிணுங்குவாள் பிறகு,.நான் எப்ப தாலி செய்யறது? “என் தொழிலுக்கு வேட்டு வெச்சிடாதே கண்ணு.”என்பார் மாணிக்க ஆசாரி. நாலு தெருவிலேயும் ரதிக்கு வியாபாரம் உண்டு.வாடிக்கையாளர்கள் அவள் வரவைக் காத்து திண்ணையில் அமர்ந்து அளவளா விக் கொண்டிருப்பார்கள். திங்கள் கிழமை மோர் வியாபாரம், செவ்வாய்க் கிழமை கீரை, புதன் அன்று காய்கறி, பழம் கொடுத்துவிட்டு, வியாழன் வெள்ளி இரு தினங்களும் பூக் கடையையே தன் கூடையிலும் பையிலும் கொண்டு சேர்த்து விடுவாள்.சனிக்கிழமைகளில் பெரும்பாலும் மீன் அல்லது நண்டு, இரால் என்று கொண்டு கொடுப்பாள். ஞாயிறு காலை வேலைகளில் ஈடுபட்டு,சமைத்து, எண்ணெய் தேய்த்து குளிக்க அரை மணி,துணி தோய்த்து,அடுத்த வார ஓட்டத்திற் க்காக தயார் செய்து மதியம் தந்தையோடு அமர்ந்து மீன் குழம்பும் சோறும் உண்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி தூங்கி விடுவாள். ரதியைப் போலவே அவளுடைய வாடிக்கையாளர்களுக்கும் இந்த தினசரி அட்டவணை தெரியும். நல்ல வேனல்க் காலத்தில் மோர் அம்ரிதம். தினமும் குறைந்தது ஆறு கிலமீட்டர் நடை ரதியை மெல்லிய இடை அழகி ஆக உதவியது. போன இடம் எல்லாம் வீட்டு அம்மா ஏதாவது ஒன்றை கொடுத்து உண்ணவோ, குடிக்கவோ சொல்லி சந்தோஷப் படுபவர்கள் பலர். நான்கு வீதிகளையும். ஓடுக்கிக் கொண்டு கிராம குளம் நடுவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அன்று வெள்ளிக் கிழமை. கூடை நிறைய ரோஜா மலர்களும்,மல்லிகை பூக்களும் , சம்பங்கி மாலைகளும் வாசத்தை பரப்பி ரதியின் வரவை அறிவித்த போது கிழக்கு வீதியில் இருந்த கண்ணம்மா வீட்டுத் திண்ணையில்.போய் அமர்ந்தாள். ரதி. ஒரு புதிய ஆண் மகன் திண்ணையில் முகம் காட்டி உள்ளே போய் விட்டான். கொஞ்சம் நேரம் பொறுத்து கண்ணம்மா கையில் காபி டம்ளர் சகிதம் வந்து உட்கார்ந்தாள். காபியை வாங்கிக் கொண்டு “யார் அம்மா புது முகம்”என்று கேட்டாள். “ஓ! அதுவா, என் அண்ணன் மகன், கடலூரில் இருந்து வந்திருக்கு.”என்றாள் கண்ணம்மா. “அப்படியா.சரி.சரி. உங்களுக்கும் தொணயா இருக்கும் இல்லே “என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். “என்ன இருந்தாலும் அது ரொம்ப நாள் நம்மோட தங்காது ரதி. அடுத்த வாரம் சொந்த ஊருக்குப் போய் சேரும். ” கண்ணம்மாவின்.பதில் ரதியின் மனதிற்கு ஆறு தலாகில்லையே! வியாபாரத்தை முடித்துக் கொண்டு பக்கத்து வீட்டு சோமு பிள்ளை அவர்கள் வீட்டுக்குச் சென்று “அய்யா,”என்று குரல் கொடுத்தாள். பிள்ளை அவர்கள் எப்பொழுதும் முன் கதவை சாத்தி தான் வைப்பது வழக்கம். காரணம் , பிள்ளை அவர்கள் மனைவி உடல் நலம் இல்லா நிலையில் சற்று அதிக கவனத்துடன் இருப்பார். ரதி வியாபாரம் முடித்துக் கொண்டு மதிய உணவு நேரத்தில் வீட்டுக்கு போய் சேர்ந்து விடும். திரும்பவும் நாலு மணி அளவில் கிளம்பி மற்ற மொத்த விற்பனை முடித்து விட்டு சுமார் எட்டு மணிக்குள் வீடு என்ற கூட்டுக்குள் போய் அடைந்து விடும். அன்றும் அப்படித்தான். சுமார் ஒன்பது மணி இருக்கும். ரதி பின் வாசல் கதவை தாளிட்டு, முன்பக்கம் கதவை உள்புறமாக தாளிடும் போது வேலியோரம் கேட் தட்டும் ஓசை கேட்டு “அப்பா ‘யார் கேட் லே, பாருங்க”என்று குரல் கொடுத்தாள். கண்ணம்மா தான் அந்த நேரம் வந்து இருந்தா. பெரியவரே, நாளை காலை நம்ம வீட்டுக்கு வாங்க.என் அண்ணன் மகன் கடலூரில் இருந்து வந்திருக்கு. என் அண்ணன் குமாரும் நாளை காலை வரான். ஒரு நல்ல சமாச்சாரம் பேசணும் என்று சொல்லிக் அனுப்பியிருக்கிறார். பெரியவர் ஒன்றும் புரியாமல் விழிக்க “என்ன விஷயம் கண்ணம்மா? நல்ல தகவல் என்றால் சந்தோசம் தான்”என்று சொல்லி, 10 மணிக்கு வரட்டுமா என்று கேட்டார். “சரி””என்று கிளம்பி விட்டாள்.ரதி மனதிற்குள் பட்டாம்பூச்சி சிறகடித்து. அந்த பையன் முகத்தை கண்டதில் இருந்து என்னவோ சொல்லத் தெரியவில்லை. இவன் தான் நமக்கு வரப் போகும் மாப்பிள் ளையோ?! எங்கேயோ ஏதோ ஒரு விதத்தில் அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைத்த வண்ணம் உறங்கிவிட்ட ரதி காலையில் எழுந்து ஒன்றும் தெரியாதது போல் “அப்பா, யார் வந்தாக நேற்று இரவு?”என்று கேட்டு அவர் வாயைப் பிடுங்கினாள். பெரியவர் விவரத்தை சொல்லி “பத்து மணிக்கு அவுக வீட்டுக்கு போகணும்.”சொல்லிக் கொண்டே தன் வேலைகளை கவனிக்க போய் விட்டார். இன்று ரதிக்கு அந்த வீதியில் வேலை இல்லை. மனசு ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. வழக்கம் போல் ரதி வியாபாரதிற்கு கிளம்பி விட்டாள். உச்சி வெயில். ரதியின் தந்தை செல்லமுத்துப் படுசந்தோஷமாக கேட் திறந்துகொண்டு ” ரதி கண்ணு, சொம்புலே குடிக்க தண்ணீர் கொண்டு வா. ராஜாத்தி, உனக்கு நல்ல காலம் பிறந்திடுத்து. நேற்று அந்த பிள்ளை உன்னைப் பார்த்த பிறகு கண்ணம்மாவிடம் உன்னைப் பற்றி மேலும் விவரம் கேட்டு த் தெரிந்து கொண்டு அவன் அப்பாவுக்கு ஃபோன் பேசி இருக்கான். உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கான். கண்ணம்மாவும் உன்னை பற்றி ரொம்ப நல்ல விதமாக சொல்லி இருக்கு. இன்னிக்கு அவன் அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க. நாளைக்கு நல்ல நேரம் பார்த்து பெண் பார்த்து கேட்க வராங்க தாயி. நாளைக்கு எங்கும் வியாபாரத்துக்கு கிளம்பிடதே.ஒய்வு எடுத்துக்கோ.” என்று ,கை கால் கழுவி வா வா சாப்பிடலாம். பசிக்குது””என்றார். ரதிக்கு பசி எடுக்க வில்லை.மனசு போல் வயிறும் நிரம்பி இருந்தது. இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நடக்கிறதே என்று வியந்து தங்கள் குல தெய்வம் பேச்சியம்மனை வணங்கி நன்றி சொன்னாள் . “ஆத்தா,நீ தான் துணை.எனக்கு நல்லதையே செய்”என்று கை தூக்கிக் கும்பிட்ட ரதி உண்ணதட்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளவும், கடைந்த கீரை,வெண்டைக்காய் பொரியல் , முள்ளங்கி சாம்பார் சாதம் என்று பரிமாறி விட்டு சாப்பிட உட்கார்ந்து கொண்டாள். “என் கண்ணு கை சமயல் சாப்பிட அந்த தம்பி குடுத்து வெச்சு இருக்கணம். என்று பெருமை கொண்டார் செல்லமுத்து . கண்டதும் காதல் நெஞ்சங்களில் பூத்து மணம் கமழும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் ரதிக்கு மன்மதன் கிடைத்து விட்டான். மாணிக்கம் ஆசாரியிடம் ஓடிப் போய் மன்மதன் வந்து விட்டான் என்று சத்தமாக சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
