பகவானுடன்/எஸ். கே. பெருமாளப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர்

பகவானுடன் திருவண்ணாமலையில் நான் இருந்தபோது திரு. ப. ராமச்சந்திரன் தரிசனத்திற்காக வந்திருந்தார்கள். அப்போது பகவான், “பாரதத்தில் எண்ணெய் வளம் நிறைய உண்டே; எங்கு கண்டெடுக்கப் போகிறீர்கள்” என்றார்கள். அதற்கு திரு. ப. ராமச்சந்திரன், இமாசலப் பிரதேசத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார். “பம்பாய் ஆழ்கடலில் எண்ணெய் மிகுதியாகக் கொட்டிக் கிடக்கிறது” என்று பகவான் கோடிட்டு காட்டினார்கள். அது போல் இமாசலப் பிரதேசத்தில் எண்ணெய் காணப்படவில்லை. பம்பாய் ஆழ்கடலில் அபரிமிதமாக எண்ணெய் கிடைக்கிறது. அதை நாம் இன்று கண்கூடாக அறிவோம்.

பின்பு ஒருமுறை திரு. ப. ராமச்சந்திரன், சுவாமியுடன் இருக்கும்போது நான் தரிசனத்திற்காகச் சென்றேன். அவர் அப்போது எந்தப் பதவியிலும் இல்லை. செலவுகள் இருப்பதாகப் பகவானிடம் விண்ணப்பித்தார். அதற்கு சுவாமி, “பெரிய வேலை கிடைக்கும்; யாவும் சரியாகும்” என்று கூறி அனுப்பிவிட்டார்கள். அவ்வாறே திரு. ப. ராமச்சந்திரன் கவர்னர் ஆகிவிட்டார்.

ஒரு சமயம் சுவாமியிடம் இருக்கும்பொழுது English பேப்பரைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். “எனக்கு English சரியாகத் தெரியாது” என்றேன். படியுங்கள் என்று கூற நான் படித்தேன். அந்தச் செய்தியில் பிரதமர் இந்திராகாந்தி காஷ்மீரில் இலையுதிர் காலத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் செய்தி இருந்தது. அதற்கு சுவாமிஜி, “இல்லை: இலையை உதிர்க்கும் காலம்” என்றார்கள். அவர் சொன்னதைப் போல் மூன்றாம் நாள் நம் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

வேப்பமரத்திலிருந்து பழம் ஒன்று விழுந்தது. பழத்தை சுவாமி கையில் எடுத்து என்னிடம் தந்து, “பெருமாளப்பன்! இதைச் சாப்பிட்டுத்தான் ஞானிகளும், ரிஷிகளும் உயிர் வாழ்ந்தார்கள்” எனக் கூறினார்கள். அப்பொழுது சுவாமியிடமிருந்து வேப்பம் பழத்தைப் பெற்றுக் கொண்டேன். இரண்டு பழங்களைச் சாப்பிட்டேன். அன்று முதல் எனக்குப் பசி தோன்றவில்லை.

    - .

Thanks: Souvenir 1995

Courtesy : Vinothkumar Annamalai