தனியாய் ஒரு பயணம்/அன்ன பூரணி 

மனம் கொஞ்சம் பாரமாய் இருந்தது. திடீரென்று இப்படி ஆகுமென்று எதிர்பார்க்கவேயில்லை.

இல்லை. எதிர்பார்த்த செய்திதான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்ததுதான் யாருமே எதிர்பாராதது ஆகிப் போனது.

எல்லாம் போட்டது போட்டபடி கிளம்ப வேண்டும்.

அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.

அடுத்து ரயில் டிக்கட்.. யாரோ அப்பாவுடைய மாமாவின் ஒன்றுவிட்ட கொழுந்தியாள் வீட்டுக்காரர் ரயில்வேயில் வேலை செய்ததால் டிக்கட் எடுத்துக் கொடுத்தார். ஓபன் டிக்கட்தான்.. ஆனால் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் உட்கார இடம் ஏற்பாடு செய்து தந்தது ரொம்பவே சௌகரியமாக இருந்தது.

பின்ன? ஆறு மணி நேர பயணமாயிற்றே? என்னதான் அவசரப் பயணமென்றாலும் நின்னுண்டா போக முடியும்?

டிடிஆரிடம், “குழந்தைக்கும் சேர்த்து ஃபுல் டிக்கட் எடுத்திருக்கேன்.. அப்றமா வந்து இங்க சீட் குடுங்கன்னு கேக்காதீங்க.. ப்ளீஸ்!” என்று முதலிலேயே கறாராகச் சொல்லிவிட்டேன்.

ரயில் ஏறியதுமே தூக்கம் வருது என்று படுத்துக் கொண்டாள் குழந்தை.

“எம்மா? கொய்ந்தைய மடில வச்சிக்கிட்டு கொஞ்சம் எடம் வுடும்மா.. குறுக்கு நோவுது..” கேட்டாள் ஒரு கண்டாங்கிச் சேலை கட்டிய கிழவி.

“இல்லம்மா.. எனக்கு வயித்தில ஆபரேசன் ஆகியிருக்கு.. அதுக்குதான் பொண்ணுக்கும் சேர்த்து முழு டிக்கட் எடுத்திருக்கேன்.. நீங்க வேற யார் கிட்டயாச்சும் கேட்டு உக்கார்ந்துக்கங்க..” நயமாய் மறுத்தேன்.

“ம்க்கும்..” கழுத்தை வெட்டிக் கொண்டு நகர்ந்தாள் கிழவி.

இதே போல வேண்டுகோளுடன் மேலும் இருவர் வர அவர்களிடமும் இதே பதிலைக் கூறி மறுத்தேன்.

ரயில் வேகமெடுக்க எனக்கு கைப்பேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

“ஆமாமா.. இப்பதான் ட்ரைன் ஏறியிருக்கேன்.. வந்துண்டே இருக்கேன்..”

“இல்லல்ல.. லீவ் சொல்லியாச்சு..”

“அவளுக்கு அடுத்த வாரம்தான் ஸ்கூல்..”

“அவரால வர முடியல.. என்ன செய்ய? அவர் உத்யோகம் அப்டி..”

“சரி.. சரி.. நா பத்திரமா வரேன்..”

இரண்டு மணி நேரம் கழிந்ததும் அழைப்புகள் குறைந்துவிட்டன.

வெளியே வேடிக்கை பார்த்தபடியே இருந்த எனக்கு கண்கள் சொருகத் தொடங்கின.

பிரக்ஞையே இல்லாமல் அரைமணி நேரம் தூங்கிப் போனேன்.

கண்விழித்த போது என் மடியில் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் காணவில்லை. பதறியடித்துக் கொண்டு எழுந்து தேடத் தொடங்க, குழந்தை கழிப்பறையிலிருந்து வெளியே வந்தாள்.

“அம்மா.. டாய்லெட் வந்திச்சு.. எனக்கு இந்த டாய்லெட்ல எப்டி வாஷ் பண்றதுன்னு தெரீல.. ஆன்ட்டிதான் வாஷ் பண்ணி விட்டாங்க..” என்று அந்த கண்டாங்கி கிழவியை கை காட்டினாள் மகள்.

என் கண்கள் குளம் கட்டிக் கொண்டன.

கிழவியின் கைப்பிடித்து அழைத்து வந்து என்னருகில் அமர்த்திக் கொண்டேன்.

♥♥♥♥♥