பிரஸ்னோபநிடதம் -5 /எஸ்ஸார்சி

பன்ச்சம பிரஸ்னா
வினா 5

இதுவே இந்த கவிவாசகம்.
அழியா ஆன்மாவில்
உறையும் சுயம்,
அதன் தேவர்கள்,
பிராணன் பஞ்ச பூதங்கள்
இவை அறிந்த அன்பனே
யாதும் அறிந்து எதிலும் உறைபவன்.

சத்யகாமா மற்றும் பிப்லாதர்

1.சிபியின் மைந்தன் சத்யகாமன் கேட்டார்.’ ஓ பகவானே ! மனிதர்களில் ஓம் எனும் மந்திரத்தை தன் இறப்புவரை தியானிப்பவன் அதனால் எந்த உலகத்தை அடைவான்.

  1. சத்யகாமா ! ஓம் என்பது பிரம்மத்தின் உயர் நிலையும் தாழ் நிலையுமாகும். அது அறிந்தவன் இவை இரண்டில் ஏதோ ஒன்றைஅடைவான்.
  2. ‘அ’ எனும் ஒலி அளவை தியானிப்பவன் அதனால் விளக்கம் பெற்று பூவுலகிற்கு விரைவில் வருகிறான். ரிக் வரிகள் மனித உலகிற்கு அவனை இட்டுச்செல்கின்றன. உறுதியை சிறப்பை நம்பிக்கையை பெற்று அவன் பெருமை அடைகிறான்.
  3. ‘உ’ எனும் இரண்டாவது மாத்திரையை தியானிப்பவன் யஜுர் வேத வரிகளால் ஆகாயத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறான்.சந்திர உலகிற்கு (பிதிர் உலகம்) ச்செல்கிறான். அங்கு பெருமை பெற்று மனித உலகிற்குத்திரும்புகிறான்.
  4. ஓம் எனும் மூன்று மாத்திரை ஒலிகளை தியானிப்பவன் ஒளி வீசும் சூரியனோடுஇணைகிறான். பாம்பு தன் சட்டையை உரிப்பதொக்க பாவங்களிருந்து விடுபடுகிறான். சாம தோத்திரங்களால் பிரம்ம உலகம் சென்று நிறை வாழ்வெனும் ஹிரண்யகரப்பத்தை அடைந்து உயர் புருஷன் எனும் இதயவாசியைக்காண்கிறான். இது பற்றி இரண்டு பாடல்கள் உள்ளன.
  5. இந்த மூன்று மாத்திரைகளை
    பிரித்துப் பிரித்துப்
    பயன்படுத்துவோன்
    நிலையற்றவன்
    தவறாகப் பிரயோகிக்காது

மூன்று மாத்திரைகளையும் சேர்த்துச்
சரியாகப் பிரயோகிப்பது தெரிந்தவன்,
உள் வெளி நடு எனும்
அனைத்துச் செயல்பாடுகளிலும்
நடுக்கமுறமாட்டான்.

  1. ரிக் வரிகளால்
    பூவுலகை அடைந்து,
    யஜுர் வரிகளால் ஆகாயம் அடைந்து,
    சாம வரிகளால் பிரம்ம லோகம் அறிகிறான்.
    ஓம் எனும் மந்திரம் தெரிந்த
    புத்திசாலி இவைகளை ப்பெறுகிறான்.
    அமைதியான அழிவில்லாத
    இறப்பில்லாத அச்சமில்லாத
    உயர்ந்த நிலை அது.