
எழுத்தாளர் பால சாண்டில்யன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான தண்டவாளங்கள் தொகுப்பில் வந்துள்ள அழகு தேவதைகள் என்கிற இச்சிறுகதை இலக்கியபீடம் மாத இதழ் சிறுகதை போட்டியில் சிறப்புப் பரிசுபெற்ற சிறுகதை.
கதையின் நாயகி மாலதி தன் தந்தை காலமானதால் ஆபீஸ் வீடு என எனவும் அம்மாவுடன் ஆஸ்பத்திரி எனவும் நாட்களைக் க/ நடத்துகிறாள். ஆபீஸில் அவள் மேலதிகாரி தனது தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அம்மா தன்னுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டால் திருமணம் சம்மதம் என்கிறாள். அவள் நிபந்தனையை ஏற்று வீட்டோடு மாப்பிள்ளையாகிறான் சுரேஷ். ஆறு மாதம் கடந்தபின் சுரேஷிற்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க அம்மாவுடன் மாலதி இருந்துவிட முடிவாகிறது. சுரேஷ் தனியாக சிங்கப்பூரில் வாசம். மாண்டிசேரி பயிற்சி முடித்த மாலதி தன் அம்மாவை பார்த்துக்கொள்வதற்காக இதுவரை தான் பார்த்துவந்த வேலையை உதறி வீட்டிற்கு அருகில் , சம்பளம் சற்றே குறைவாக வரும் பள்ளி ஒன்றில் டீச்சராக சேருகிறாள்.
இருபத்தி ஏழாவது வயதில் திருமணம் செய்து கொண்ட மாலதிக்கு முப்பத்திரண்டு வயதாகிறது. கணவன் சுரேஷ் ஆண்டுக்கொருமுறை பத்து நாள் லீவில் வந்துபோகிறான். குழந்தைகள் என்றால் மிகப்பிடிக்கும் மாலதிக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.
பள்ளியில் படிக்கும் மழலைச்செல்வங்களை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. குழந்தைகளும் அவளுடன் பாசமாக ஒட்டிக்கொள்கின்றன.
ஒரு நாள் அவளின் அம்மாவும் காலமாகிவிட தனித்து விடப்படுகிறாள்.
சிங்கப்பூரிலிருந்து ஒரு வார விடுப்பில் வரும் கணவன் சுரேஷ் மாலதியை சிங்கப்பூருக்கு அழைக்க பள்ளிக் குழந்தைகள் மீது உள்ள பாசத்தால் கணவன் சுரேஷுடன் வர மறுக்கிறாள் மாலதி. கோபித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பிச் செல்லும் சுரேஷ் ஒரு கட்டத்தில் அவளைக் கைவிட முடிவு செய்கிறான். வேறொரு பெண்ணுடன் திருமணம் எனும் அவன் முடிவு மாவதிக்கு தெரிய வருகிறது. இடிமேல் இடி அவள் வாழ்வில். அவள் பள்ளியின் அழகு குட்டி தேவதைகள்தான் அவளுக்கு ஆறுதல். அவளின் பின் நாட்களின் வாழ்வு என்னாகிறது என்னும் நம்பிக்கை விடையுடன் கதை முடிகிறது.
ஆண் கதாபாத்திரங்கள் ஒன்றிரண்டு வந்து போனாலும் அம்மா, ப்ரீத்தி டீச்சர், குழந்தைகள் என பெண் பாத்திரங்களே பிரதானம் கதையில்.
குழந்தைகளுடனான இருவித பள்ளி அனுபவ வாழ்க்கையையும் கதை சித்தரிக்கிறது. கனிவான அனுபவங்கள் மாலதிக்கும் வலியான அனுபவங்கள் ப்ரீத்தி டீச்சருக்கும் நிகழ்வது பெண்கள் உலகின் இருவித நிலைகளின் குறியீடாகக் கொள்ளலாம்.
மழலைக் குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவைகளை ஊக்குவித்து குழந்தைகளைப் போட்டிகளில் பங்கேற்க வைத்து என அவர்களுக்கு வெற்றிப்பாதை வழிகாட்டுகிறாள் மாலதி. அவளுக்கும் அதில் ஒரு மன நிம்மதி.
விழா ஒன்றில் முதலிடம் பெறுகிற குழந்தை ஆராதனா மாலதியை அன்னை ஸ்தானத்தில் வைத்து பரிசளிப்பு விழா மேடையில் சிலாகிக்க வாழ்வின் மீதான நம்பிக்கை ஒளி சுடர் விடுகிறது மாலதிக்கு.
சிக்கலில்லாத எளிய நடை, ஒரு பெண் எதிர்கொள்ளும் புற உலக நிர்ப்பந்தங்கள் என்னென்ன அதை மீறி அவள் சுயமாய் எடுக்கும் முடிவுகள் அதன் விளைவுகள் என பெண்களின் உலகத்தை மென்மையாக ஆனால் ஆழமாக அலசுகிறது அழகு தேவதைகள் சிறுகதை. சூழலின் வலிகள் இருந்தாலும் அதை எதிர்கொண்டு மிச்ச வாழ்வினை எப்படி மாலதி தன் உறுதியான அன்பினால் மீட்டெடுக்கிறாள் இதுதான் கதையின் அடிநாதச் சரடு.
அன்பே வெல்லும் என்பதை குறிப்பால் கதை உணர்த்துவது தனிச்சிறப்பு.
தொகுப்பில் உள்ள மற்ற கதைகளை நான் படிக்கட்டில் போனாலும் தொகுப்பின் முக்கியக்கதையாகவே முத்திரைக்கதையாகவே இதை நான் பார்க்கிறேன்.
ஏழு ஸ்வரம் ,ஏழு வர்ணங்கள் (vibgyor), மேல் ஏழு உலகங்கள் கீழேழு உலகங்கள், ஏழு பிறவிகள், ஏழு புண்ணிய நதிகள், ஏழு உலக அதிசயங்கள், ஏழு கோள்கள் எப்படி சிறப்பு பெறுகிறதோ அதைப்போலத்தான் தண்டவாளங்கள் சிறுகதைத் தொகுப்பில் ஏழாவது கதையாக வந்துள்ள இக்கதையும் சிறப்பு பெறுகிறது. ஆசிரியர் பால சாண்டில்யனுக்கு வாழ்த்துகள் .
