இரண்டு கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்

1

என்னுடைய பதின்ம வயதுகளில் கிறுக்கனாயிருந்தேன்
என்பதை இருபதுகளில்
கண்டு பிடித்தேன்
பதின்ம வயதின் நம்பிக்கைகளை
கிழிந்த ஆடைகளைப் போல கழற்றி
அதனதன்
கள்ள ஆசான்களின் மீது விட்டெறிந்தேன்

முப்பதுகளின் தொடக்கத்தில்
இருபதுகளில் எப்படி
முழு கிறுக்கனாக இருந்தேன் என்பதைக்
கண்டுபிடித்து
அதற்குத் தூக்க மாத்திரை
பரிசளித்தேன்

நாற்பதில் அதற்கு முன்னர்
இருந்ததெல்லாம் கிறுக்கே என்று
கத்தத் தொடங்கியது
உள்ளத்தில் அமர்ந்து சிரித்த
கள்ளத் தெளிவு

ஐம்பது வர தெளிவும் ஒரு கிறுக்குதான்
என்பது தெரிந்து விட்டது

இப்போது
காலையில் கிறுக்கு பிடிப்பது
மாலையில் தெரிந்து விடுகிறது
மாலைக்கிறுக்கு காலையில்
தெளிகிறது

ஆக கிறுக்கும் தெளிவும் இரண்டு கால்கள்
ஒரு கால் முன்னே செல்லும் போது
மற்றொரு கால்
பின்னால் வருகிறது
பயணத்தில்
இருப்பவனுக்கு

2

சிலர் அப்பாவின் வயதில் அப்பாவாக
மாறுகிறார்கள்
வெள்ளையடித்த சுவர் வெளிறி
உள்ளிருக்கும் புற்று
வெளித் தோன்றுவது போலும்
அப்பா முனகிய வண்ணம்
வெளிப்படுகிறார்

உள்ளேயிருப்பது அப்பாதான் என்றாலும்
அப்பாவை
முறைத்துக் கொண்டிருக்கிறானொரு இளைஞன்

சிறு வயதிலேயே அப்பாவை வெளிகாட்டுபவனின்
உடல்
சிமெண்ட் மூட்டை பொதி

அப்பாவை நினைவுபடுத்தாமல்
அப்பாவாகிற அப்பா
உண்மையாகவே மிகவும்
அழகாயிருக்கிறார்

இந்த தந்தையைக் கொல்கிறவனின்
அப்பா இருக்கிறாரே
பெரும்பாவம்
பெரும் பொதியை தலையில் சுமந்த
வண்ணம்
பலசரக்கு கச்சவடம்
முடித்து
ஒற்றையில்
திரும்பிக் கொண்டிருக்கிறார்
அவனுக்கான
அரிச்சாக்கு
அடியில்
உச்சி
உறுத்த

எனினும் முதிர்ந்த பெண்ணுக்குள்
இருந்து வெளித் தோன்றுகிற போது
அவர்
பீதியூட்டுகிறார்
பேய்மையடைந்து

One Comment on “இரண்டு கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்”

Comments are closed.