யோகி ராம்சுரத் குமார்/எஸ்.பார்த்தசாரதி

அவர் கல்லூரி பேராசிரியை. சுவாமி யோகி ராம்சுரத்குமாரரையே தன் துணையெனக் கருதியதால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சுவாமி தன் இல்லம் தேடி, தன்னை நாடி என்றேனும் ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்தார்.சுவாமியின் தனிப்பட்ட தேவைகளுக்கென நிறைய பொருட்கள் சேகரித்து வைத்திருந்தார்.

சுவாமிக்காக சில காலமாக தனித்துக் காத்திருந்தார்.

அவரின் பெற்றோர் அவர் நிலை கண்டு பயந்து, அவரையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை சென்றனர். சுவாமியைத் தரிசித்தனர்.

“சுவாமி மகள் திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கின்றாள். நீங்களாவது அவள் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்யுங்கள் சுவாமி.” அன்னை கெஞ்சினார். பேராசிரியைக்கு கோபம் கோபமாக வந்தது. சுவாமி இருவரையும் பார்த்த வண்ணமிருந்தார். சுவாமியின் திருமுகத்தில் மந்தகாசமான அழகிய புன்னகை விரிந்தது.

இதைக் கண்ணுற்ற தாய்க்கு நம்பிக்கை பிறந்தது. தன் மகள் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிடுவாளென நம்பினார்.

“சுவாமி எங்கே பையனைப் பார்க்கலாம்?” என மிக ஆர்வமாகக் கேட்டார்.

“இங்கே கோவிலில் அம்மா”, சுவாமியின் பதிலைக் கேட்ட தாய் திகைத்துப் போனார். மகள் ஆனந்தமாக ஆனால் மௌனமாகச் சிரித்தார்.

சுவாமியிடம் விடை பெற்று பெற்றோரும் மகளும் ஊர் திரும்பினர்.

மகளை அவர் வேலை பார்க்கும் ஊரில் விட்டுவிட்டு பெற்றோர் தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பேராசிரியை ஒரு நாள் கல்லூரியிலிருந்து மிகுந்த தலை வலியுடன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் தலைவாசல் கதவைத் திறந்து நேராக அவரின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்து விட்டார். சற்று நேரத்தில் தூங்கி விட்டார்.

வீட்டின் முன் கதவு பரக்க திறந்திருந்தது. இரவு நன்கு தூங்கி காலையில் பேராசிரியை தன் அறையிலிருந்து வெளியில் வந்தார். கூடமெல்லாம் சிகரெட் புகையின் வாசம் கவிந்திருந்தது. முன் வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். கதவைத் தாளிட்டார்.

அவருக்கு ஏதோ பொறிதட்டியது. குளித்துத் தயாராகி நேராக திருவண்ணாமலை சென்றார். சுவாமி பெரிய மரக் கதவருகே அமர்ந்திருந்தார்.

பேராசிரியைப் பார்த்ததும் சுவாமி அவரை இரும்புக் கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னார். கதவை வேகவேகமாகத் திறந்து பேராசிரியை நேராக சுவாமி முன் சென்று நின்றார்.

“புத்தியிருக்கா உனக்கு, கதவை திறந்தபடி வந்து விட்டாயே. யார் மூடுவது?” சுவாமி கோபத்தோடு கேட்டார்.

பேராசிரியைக்குப் புரிந்து விட்டது. இரும்புக் கதவைப் பூட்டி விட்டு சுவாமியின் திருப்பாதங்களை அவர் நமஸ்கரித்தார். சந்தோஷத்தில் சிரித்தார். சுவாமியின் முகமலர் நிறைவாகப் பூத்திருந்தது.

யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

https://www.facebook.com/groups/664926857956345/permalink/940243343758027/?mibextid=Nif5oz