வணக்கம் அன்பர்களே../எஸ்.எல்.நாணு

இன்று தந்தையர் தினம்.. என்னைப் பொறுத்தவரை அனுதினமும் அன்னை தந்தை தினம் தான்..

2019ம் வருடம் அப்பாவின் நூறு வயதையொட்டி நான் போட்டிருந்த பதிவின் மீள் இது..

ஏற்கனவே படித்தவர்கள் மன்னிப்பார்களாக.. இதுவரை படிக்காதவர்களுக்காக இது..

                            அப்பா.. நூறு

     இன்று (19/11/2019) அப்பாவுக்கு (திரு. சகஸ்ரநாமன்) வயது நூறு.

     அப்பாவை எனக்கு எப்படி நினைவிருக்கிறது?
     ஒரு ஹிட்லராக.. ஒரு கண்டிப்பு சிகாமணியாக.. அடிக்கடி பிரம்பை ஓங்கும் ஒரு கொடூரக்காரராக..

     உகும்.. அப்பா இது எதுவுமே இல்லை..

     ஆரம்பத்திலிருந்தே.. அப்பா எனக்கு ஒரு சிநேகிதனாகத் தான் தெரிந்தார். 

     எழுத்துலகில் நான் தவழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு மூல காரணம் அப்பாதான்.. பள்ளிப்பருவத்திலிருந்தே என்னுடைய எழுத்தார்வத்திற்கு ஊன்று கோலாக இருந்தார். காரணம் அவரே ஒரு படைப்பாளி தான்.. அவருடைய சிறு வயதில் எங்கள் ஊர் கல்லிடைக் குறிச்சியில்.. அவரே நாடகம் எழுதி.. அவரே திரைச் சீலைகள் வரைந்து.. அவரே இசையமைத்து.. அவரே இயக்கி.. அவரும் நடித்து.. பலத்த வரவேற்பு பெற்றிருக்கிறார்.. அது மட்டுமில்லை.. ஐம்பதுகளில் அப்பா எழுதிய சிறுகதைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகியிருக்கின்றன. ஆக என்னுடைய எழுத்தாசையை அப்பா ஊக்குவிக்கக் கேட்பானேன்..

     அதன் பிறகு ஐம்பதுகளின் பிற்பாதியில் அப்பா கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்து அங்கு பணியில் சேர்ந்த பிறகு அவரால் எழுத்துப் பணியைத் தொடர முடியாமல் போனது.. (ஒருவேளை தன்னுடைய கனவு என் மூலம் நிரைவேறுமோ என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம்)

     “நீங்க யார் பக்கம்” என்ற நாடகத்தில் என் குருநாதர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் பேசுவது போல் ஒரு வசனம் எழுதியிருப்பேன்.. “பதிமூணு வயசுல உழைக்க ஆரம்பிச்சேன்.. பண்ணாத வேலையில்லை.. வேலை பண்ணிண்டே ஏதேதோ படிச்சேன்.. கடைசில இந்தக் கம்பெனில குமாஸ்தாவா சேர்ந்து முப்பத்தஞ்சு வருஷ சர்வீஸ்.. இப்ப சீப்-மேனேஜரா ரிடையர் ஆகறேன்”.. உண்மையில் இந்த வசனம் அப்பாவை மனதில் வைத்து எழுதினது தான். உண்மையிலேயே பதிமூணு வயதில் உழைக்க ஆரம்பித்தார் அப்பா.. செய்யாத வேலை இல்லை.. வாட்ச்-ரிப்பேரிங், கொளுத்து வேலை என்று எதையும் விட்டு வைக்க வில்லை. இவ்வளவு ஏன்.. அன்றைய கட்டுப் பாடான சமுதாய சூழ்நிலையில் வீட்டுக்குத் தெரியாமல் அப்பா நாவிதர் வேலையைக் கூட முயற்சி செய்திருக்கிறார்.. 

    அப்பா பல வேலைகள் செய்தாலும் அவருக்குப் பிடித்தது இரண்டு வேலைகள் தான். ஒன்று போட்டோகிராபி. இரண்டாவது ரேடியோ / டேப்-ரெகார்டர் ரிப்பேரிங். இந்த இரண்டையும் அவர் அலுவலக பணியில் இருந்தாலும் விடாமல் செய்துக் கொண்டிருந்தார். எங்கள் கல்லிடைக் குறிச்சி கிராமத்தில் “போட்டோ சாத்து” என்று தான் அப்பா பிரசித்தம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வேலைப் பளு காரணமாக அப்பா தொழில் முறை போட்டோகிராபியை நிறுத்திக் கொண்டார். ஆனால் தொடர்ந்து ரேடியோ (வால்வ் ரேடியோ.. டிரான்ஸிஸ்டர்), டேப்-ரெகார்டர் (அந்தக் காலத்து ஸ்பூல் டேப்-ரெகார்டர்.. அதன் பிறகு கேசட் ரெக்கார்டர்) ரிப்பேரை மட்டும் தொடர்ந்துக் கொண்டிருந்தார். 

    ரேடியோ ரிப்பேர் அப்பா சுயமாகக் கற்றுக் கொண்டது.. அதன் பிறகு அந்தக் காலத்து லண்டன் ரேடியோ ரிப்பேரிங் இன்ஸ்ட்டிட்யூட் ஒன்றில் பதிவு செய்து சான்றிதழும் வாங்கிக் கொண்டார்.. 

    அப்பாவின் திறமையைக் கண்டு வியந்த ஒரு நண்பர்.. லண்டனில் அப்பாவுக்கு Advanced Training மற்றும் வேலைக்கு ஏற்பாடு செய்தார்.  அப்பா அவரிடம் போட்ட ஒரே கண்டிஷன்.. என்னுடைய பாதி சம்பளத்தை இந்தியாவில் கொடுக்க வேண்டும்.. காரணம் அப்போதெல்லாம் வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது இப்போது மாதிரி சுலபமாக இருக்க வில்லை.. அப்பா அப்படிச் சொன்னதற்கு ஒரு காரணம் இருந்தது.. அதை அடுத்துச் சொல்கிறேன்.. நண்பருக்கு அப்பாவின் கண்டிஷனை ஏற்க முடியாத சூழ்நிலை.. முழு சம்பளமும் லண்டனில் லண்டன் கரன்சியில் தான் கிடைக்கும் என்று கூறினார்.. உடனே அப்பா அந்த வேலையே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.. 

     அப்பா அப்படிச் சொன்னதற்கும் ஒரு காரணம் இருந்தது.. அப்பாவின் இரண்டாவது அக்காவின் குடும்ப சூழ்நிலை தான் காரணம்.. அக்கா கணவர் சிறு வயதிலேயே இறைவனடி சேர.. அக்காவையும்.. அக்காவின் மூன்று வாரிசுகளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அப்பாவுக்கு.. ஒவ்வொரு மாதமும் தன் சம்பளத்தில் பெரும் பகுதியை அக்காவுக்கு அனுப்பி விடுவார்.. மீதி இருப்பதில் தான் அம்மா காலம் தள்ள வேண்டும்.. (அங்கு தான் அம்மா திருமதி சிவகாமி.. விஸ்வரூபம் எடுத்து நின்றாள்.. அக்காவுக்குப் பணம் அனுப்புவதை ஆதரித்தது மட்டுமில்லை.. பற்றா குறையை குறையாக நினைக்காமல் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தைத் திறமையாக சமாளித்தாள்).  வளர்த்த கடா நெஞ்சில் பாய்ந்தது என்று சொல்வதுண்டு.. அப்பாவின் விஷயத்தில் அது நடந்தது.. இவ்வளவு செய்த அப்பாவைப் பார்த்து அத்தையின் வாரிசுகள்.. நீ என்ன பெரிசா செய்துட்டே? என்று குரல் எழுப்ப.. அப்பா உடைந்து போய் விட்டார்.. அந்த சமயத்தில் அப்பாவுக்குத் தெரிந்த பலர் சொன்னார்கள்.. 

     ”பேசாம நீ அந்த லண்டன் வேலையை ஒத்துண்டிருக்கலாம்.. இப்ப நல்ல வசதியா இருந்திருப்பே..  இவ்வளவு பண்ணி கடைசில இப்படிப் பேச்சு கேட்டுண்டிருக்க வேண்டாமே”

      அதற்கு அப்பா சொன்ன பதில்..

      ”அப்படிச் சொல்லாதே.. நமக்கு ஒரு விஷயம் கிடைக்கலைன்னா.. அது நமக்கு தேவை இல்லைன்னு அர்த்தம்.. ஆண்டவன் அதுக்கு பதிலா நமக்கு வேற ஏதோ வெச்சிருக்கான்னு அர்த்தம்.. அதனால வீணாக் கவலைப் படக் கூடாது”

      அப்பாவின் இந்த சித்தாந்தத்தைத் தான் நான் அன்புடன் என்ற பல விருதுகள் பெற்ற என் நாடகத்தில் வைத்தேன்.

       அப்பா பல வேலைகள் பண்ணியிருக்கார்னு சொன்னேனே.. அதுல நான் சொல்லாமல் விட்டது.. அந்தக் காலத்துலேயே அப்பா ஒரு trained teacher.. எங்கள் கிராமம் கல்லிடைக் குறிச்சி லலிதா உயர்நிலைப்  பள்ளியில் சில வருடங்கள் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார்.. 

     அப்பாவின் இன்னொரு முகம்.. அவர் ஒரு சிறந்த ஓவியர்.. கல்கத்தா பாரதி தமிழ் சங்கத்தில் இருக்கும் பாரதியார் படத்தை வரைந்தது அப்பா தான். பின்னாளில் அந்த ஓவியத்தை re-paint பண்ணும் போது அதிலிருந்த அப்பாவின் கையெழுத்தும் மறைத்து விட்டது.. அப்பாவின் கையெழுத்துடனான ஒரிஜினல் படத்தின் புகைப் படம் இன்றும் எங்கள் ஆல்பத்தில் இருக்கிறது. (இணைத்துள்ளேன்).

     அப்பாவின் வாழ்க்கையில் ஐக்கியமான மிக முக்கியமான விஷயம் கர்நாடக சங்கீதம்.. அப்பா வீட்டிலிருக்கிறார் என்பதற்கு அடையாளம் மதுரை மணி ஐயரோ இல்லை செம்மங்குடி சீனிவாச ஐயரோ எங்கள் வீட்டில் ஸ்பூல் டேப்பில் பாடிக் கொண்டிருப்பார்கள்.. அதிலும் அப்பாவின் all time favourite மதுரை மணி ஐயர் தான்.. அப்பாவின் இந்த முகத்தைத் தான் என்னுடை பிள்ளையார் பிடிக்க நாடகத்தில் கணேசன் என்ற கதாப்பத்திரத்தில் படைத்தேன். 

     ஆபோகி ராகத்தில் “ஸ்ரீ லட்மி வராஹம்” என்ற ஒரு பாட்டு உண்டு.. அதை தீட்சதர் க்ருதி என்று தான் எல்லோரும் சொல்வார்கள்.  ஆனால் உண்மையில் தீட்சதர் அந்தக் க்ருதியை இயற்ற வில்லை. நெல்லை வரை வந்து காந்திமதி அம்மனைப் பாடிய தீட்சதர், எங்கள் ஊர் ஸ்ரீ லட்சுமி வராஹப் பெருமாளைப் பற்றி பாடவில்லையே என்று அப்பாவுக்குக் குறை.. உடனே மாலையைக் கோர்ப்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீ லட்சுமி வராஹம் க்ருதியை தீட்சதரின் பாணியிலேயே கோர்த்தார்.. ஆனந்த விகடனில் திருத்தலப் பெருமையைப் பற்றி திரு பரணிதரன் தொடர் எழுதும் போது.. ஸ்ரீ லட்சுமி வராகம் தீட்சதர் க்ருதி இல்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.. இதைப் பற்றி அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்.. 

      “நான் எழுதினதுன்னா யாரும் அந்தப் பாட்டைப் பாட மாட்டா.. எங்க லட்சுமி வராஹப் பெருமாளைப் பத்தி எல்லாரும் பாடணும்.. இப்ப தீட்சதர் க்ருதின்னு எல்லாரும் அதைப் பாடறா.. எவ்வளவு சந்தோஷமா இருக்கு”. 

     அப்பாவை நான் ஆச்சர்யத்தோட பார்ப்பேன்.

     நானும் மிருதங்கம் கற்றுக் கொண்டேன்.. கல்கத்தாவில்.. திரு. எல். வைத்தியநாதன் அவர்களிடமும்.. சென்னையில் திரு. கும்பகோணம் ராஜப்ப ஐயர் அவர்களிடமும் தான் பயிற்சி.. சென்னையில் இருக்கும் எல்லா மேடைகளிலும் ஏறி நான் மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்று அப்பாவின் ஆசை.. சென்னையில் இருக்கும் எல்லா மேடைகளிலும் நான் பல முறை ஏறி விட்டேன்.. ஆனால் மிருதங்கம் வாசிப்பதற்காக அல்ல.. நாடகம் நடிப்பதற்காக..

     எனக்கு ஒரே ஒரு குறை தான்.. என் அக்கா டாக்டர் கமலா, அண்ணா ஹரிஹரன் மற்றும் நான் லெஷ்மிநாராயணன் என்ற SL நாணு.. எங்கள் முன்னேற்றத்துக்காகத் தான் அப்பா உழைத்தார்.. ஆனால் நாங்கள் முன்னேறி வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்ததைப் பார்த்து ஆனந்தப் படாமலே அப்பா தனது அறுபத்தி மூன்றாவது வயதில் எங்களை விட்டுப் போய் விட்டார்.. 

     ஆனால் அப்பாவின் கலையார்வம், விடா முயற்சி.. அறிவுக் கூர்மை.. இதையெல்லாம் என் மகள்களிடம் நான் பார்க்கிறேன்.. அவர்கள் மூலம் அப்பாவை தினமும் ரசிக்கிறேன்..

     இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே வாட்ஸ்-ஏப்பில் ஒரு செய்தி வந்தது.. “பல தடவை அம்மா சொல்லிக் காட்டியிருப்பார்கள் பத்து மாதம் சுமந்த கதையை.. ஆனால் ஒரு தடவை கூட அப்பா சொல்லிக் காட்டியதில்லை.. இரவு பகலாகக் கஷ்டப் பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை”

      உண்மை தான்.. அப்பாக்கள் எத்தனை முறை நமக்காக சிலுவையை சுமந்தாலும் அதை வெளிக் காட்ட மாட்டார்கள்..

      இன்று அப்பாவுக்கு வயது நூறு.. இன்று தான் அப்பாவின் சிராத்த திதியும்.. எங்களை ஆசிர்வாதம் பண்ண அப்பாவே நேரில் வருவது போல் தான் எனக்குப் படுகிறது.. 

      அப்பா.. ப்ளீஸ்.. அம்மாவையும் கூட்டிண்டு வாங்களேன்..

One Comment on “வணக்கம் அன்பர்களே../எஸ்.எல்.நாணு”

Comments are closed.