படுக்கை/எஸ் வி வேணுகோபாலன்

பேரிடி முழக்கம்
நேற்று இரவு…
பளீர் பளீர்
மின்னல் வெட்டுகள்
சன்னல் கண்ணாடிகளில்

ஏதோ உருளும் சத்தம்
பொத்தென்று ஏதோ
விழும் ஓசை

யாரோ ஓடும் அரவம் கூட
யாராயிருக்கும்
இந்த மழையில்

எல்லாப் பழியும் தாங்கி
இருளில் உறைந்து நின்றது மாமரம்

காலையில் முதல் வேலை
தோட்டத்தில் பார்க்கையில்
சிதறி இருக்கவில்லை மாங்காய் எதுவும்.

மெல்லத் திறக்கிறேன் வாசல் கதவு

உள் வராந்தாவில்
ஒடுங்கியபடி உறக்கத்தில்
ஒரு கரும்பூனை

அருகே
காலணிகள் வைக்கும்
மர அலமாரி மீது
ஒய்யாரமான தூக்கத்தில்
பழுப்பான மற்றொன்று

கீழே சிதறிக் கிடந்தது
பழந்துணிகள் திணித்து வைத்திருந்த பெரிய தோல் பை

மேற்படி பெரியவர் தான்
உதைத்துத் தள்ளி இருக்க வேண்டும்

மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்
அவரது படுக்கையில்
கண்டா முண்டா பொருள்கள் அடைத்து வைத்ததற்கு!

11 Comments on “படுக்கை/எஸ் வி வேணுகோபாலன்”

    1. ஒரு மழை பெய்யும் காட்சியை வீட்டில் இருந்து அற்புதமாய் கவிதை வரிகளில் நமது பாச விளங்கின் படுக்கையை பற்றி எழுதியது பெருமை

  1. அருமை. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை பற்றி படித்ததுண்டு… மழையில் பூனைக்கு இடம் தர வேண்டும் என்ற எண்ணம்… வாழ்த்துக்கள்

  2. அன்பிற்கும் பாசத்திர்க்கும் உண்டோ வேற்றுமை?
    அன்று இரவு பெய்தது 8டி மழை அல்ல, கருணை மழை.

  3. பூனைக்கு மணி கட்டுவார்கள்.. உறைவிடம் கொடுத்த உயர்ந்த உள்ளத்திற்கு சல்யூட் ..

Comments are closed.