அப்பா/பாலசாண்டில்யன்

வார்த்தைகளுக்குள்
அடங்காத உறவு

பிள்ளைகள் தான்
அவரின் வரவு

கஷ்டங்களோடு
தான் அவர் வாழ்வு

கண்ணீரை விழுங்கி
கடமையாற்றிய ஆண்மை

கண்ணியம் கடப்பாடு
கருணையின் மென்மை

கடுமை போல் நடித்து
கனிவு காட்டிய தன்மை

கனவுகளைத் துரத்த
காவல் கடவுளின் மேன்மை

ஆசைகள் நிறைவேற்றும்
வள்ளல் வங்கி குணம்

பட்டறிவாய் பரிமளித்த
பட்டறை மிளிரும் ஞானம்

வாழும் முறை தன்னை
வாழ்ந்து விளக்கிய அருமை

பிள்ளைகள் வெற்றியில்
புளகாங்கிதமான எளிமை

நானின்றி நீயில்லை என
சொல்லிக் காட்டாத தியாகி

மேன்மை குடும்பம் பெற
மெழுகாக உருகிய யோகி

மூன்றெழுத்தில் சொல்லிவிட
முடியாது அப்பப்பா

நின்றாய் நீ யாதுமாகி…
எந்தையே ஈசன் போலருள்வாய்