ஜெர்மானிய கவி ஹோல்டர்/எம்.டி முத்துக்குமரசாமி

ஜெர்மானிய கவி ஹோல்டர்லின் நாற்பது வருடங்கள், ஒன்றல்ல, இரண்டல்ல நாற்பது வருடங்கள் மன நிலை சீர்குலைந்தவராக இருந்தார். நான் ஜெர்மனிக்குப் போன பல தடவைகளில் டியுபிங்கன் நகரில் ஹோல்டர்லின் வாழ்ந்த வீட்டினைச் சென்று பார்த்திருக்கிறேன். அவர் வாழ்ந்தவீடு என்று சொல்வதை விட வெளியே போகாமல் அடைத்து வைக்கப்பட்ட வீடு என்று கூட சொல்லலாம். அந்த வீட்டின் மரப்படிகளில் ஒரு கவி எப்படி தடுமாறி வார்த்தைகளோடு அலைந்திருப்பான் என்ற ஒரு எண்ணம் என்னை அந்த வீட்டை நடையால் அளந்தபோதெல்லாம் நிலைகுலையவைத்திருக்கிறது. ரோமன் யாக்கப்சன் தன்னுடைய Verbal Art, Verbal Sign, Verbal Time நூலில் The language of schizophrenia Holderlin’s speech and poetry என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஜேபி நேற்று ஃபேஸ்புக்கில் Sensibility and schizophrenia: Wilhelm Waiblinger on Friedrich Hölderlin’s life, poetry and madness என்பதைப் பகிர்ந்தபோது ஹோல்டர்லின் வீட்டருகே எடுத்த புகைப்படம் நினைவுக்கு வந்தது. அவருடைய நினைவகத்துக்கு அருகே நெக்கார் ஆறு ஓடுகிறது அதன் ஒரு கரையில் நெடிதுயர்ந்த மேப்பிள் மரங்களும் மறு கரையில் காற்றாடி மரங்களும் நிற்கின்றன.
“என்ன பெயர்ச் சொல்லால்
அழைப்பது
weeping willows மரங்களை
என்ற பரிதவிப்பில் பாதியில்
நிற்கிறது இன்றைய கவிதை
காற்றாடி மரங்கள் என்றழைத்தால்
அவை ஏன் தங்கள் தன்மைக்கு மாறாய்
குதூகலம் கொள்வது
போலத் தோன்றுகின்றன
வில்லோவென ஆங்கிலத்தில் எழுதினாலோ
அவை இன்னும் துக்கத்தில்
தலைகவிழ்ந்துகொள்வதேன்” என்று ஆரம்பிக்கும் நீண்ட கவிதையை நான் டியுபிங்கன் நகரில் வைத்துதான் எழுதினேன்.