ஸர்ப்ரைஸ்! /ஜெ.பாஸ்கரன்

“அட, இந்தக் காலத்துல இப்படி ஒரு பெண்ணா?”

வியக்காதவர்களே இல்லை!

விமானத்திலிருந்து இறங்கி, ‘இமிக்ரேஷன்’ கவுண்டரில் ரப்பர் ஸ்டாப் ஒற்றி, பெட்டிகளைச் சேகரிக்க சுழல் மேடையருகே நிற்கும் வரை எல்லாக் கண்களும் அவளையே உற்று நோக்கின.

ஸ்டிக்கர்தான் என்றாலும் நன்றாகக் கண்ணுக்குத் தெரிகிறமாதிரி பொட்டு, காதுகளில் மெதுவாய் ஆடும் ஜிமிக்கி, நடு வகிடு எடுத்துக் கவனமாகச் சீவிய கூந்தலில் இரட்டைப் பின்னல், கழுத்தில் மேட்சிங்காக ஓர் அட்டிகை, ஆரஞ்சு நிற புடவை, முகத்தில் தமிழ்நாட்டுப் புன்னகை!

அமெரிக்காவிலிருந்து இறங்கி வரும் விமானப் பயணிகளில், வித்தியாசமாக இந்தப் பெண் – ஜீன்ஸ் கிடையாது, ‘பாப் கட்’ கிடையாது, கவர்ந்திழுக்கும் வாசகம் பொறித்த ‘டீ சர்ட்’ கிடையாது. சிலருக்கு வேடிக்கையாகவும், சிலருக்கு வியப்பாகவும், இன்னும் சிலருக்குப் பொறாமையாகவும் கூட இருந்திருக்கும்! நடையிலேயே ‘எனக்கு இதுதான் பிடிக்கும்’ என்கிற தோரணை…

வெளியே வந்தவுடன் கேட்ட முதல் குரல் “வாணி” – அவளுடைய அப்பாவின் குரல்தான்! ஆறு வருடங்களுக்குப் பிறகு விடுமுறையில் வரும் பெண். என்னதான் வாட்ஸ் ஆப், ஃபேஸ் டைம் ன்னு பார்த்துப் பேசினாலும், நேராகப் பார்ப்பதுபோலும், பேசுவதுபோலும் ஆகுமா? ஓடி வந்து அணைத்துக்கொண்டார் கதிரேசன்.

“அப்.பா”

“என்னம்மா இது வேஷம்? முந்தாநாள் விடியோ கால்ல கூட ஜீன்ஸும், ஷர்ட்டும் போட்டுக்கிட்டிருந்தே. ஃப்ளைட்டுக்குன்னு ஸ்பெஷல் யூனிஃபார்மா?”

“உங்களுக்கு எப்பொவுமே கிண்டல்தான். தமிழ்நாட்டுக்கு ஆறு வருஷம் கழிச்சு வர்றோமேன்னு, பாரம்பரிய உடையிலே வரலாமேன்னு வந்தா… “ அப்பாவிடம் செல்லமாகக் கொஞ்சினாள்.

டிரைவர் லக்கேஜை எடுத்து வைக்க, அப்பாவுடன் பின்சீட்டில் அமர்ந்துகொண்டு, தலைக்கு மேலெ செல்லும் மெட்ரோ ரயிலையும், ஏறி இறங்கும் மேம்பாலங்களையும், சாலையோரத்துக் குடிசைகளையும் பார்த்தவாறு வந்தாள்.

“அம்மா ஏம்பா ஏர்போர்ட்டுக்கு வரலை?” வாணியின் குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா.. ஒங்கம்மாவப் பத்தி ஒனக்குத் தெரியாதா? உனக்கு ஸ்பெஷலா ஏதாவது சாப்பிடச் செய்து வைக்கிறேன்னு வீட்டிலேயே தங்கிட்டா… வயசாகுதுல்ல, மின்ன மாதிரி இப்பொ எல்லாம் ஓடி ஆடி வேல செய்ய முடியறதில்லே”

“அம்மா கையால காரக்குழம்பும், கோவக்காய் பொறியலும் சாப்டு எவ்வளவு வருஷமாச்சு”

“சமையல் எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லே. தினமும் யூ டியூப் பார்த்து ஏதாவது புதுசா கத்துக்குவா; அதுலெ எல்லாம் ரொம்ப இன்ட்ரஸ்டு வந்துருச்சு”

“சென்னை ரொம்பத்தான் மாறிடுச்சுப்பா… எல்லாம் புதுசா இருக்கு”

“ஆமாம்மா, இங்க ரூபாயில நீ குடுக்கற விலை, அங்கத்திய டாலருக்குச் சரியா இருக்குது! நாமளும் முன்னேறிட்டோமில்ல”

வீட்டுக்குள் வந்து வாணி அம்மாவைத் தேடினாள்.

“அம்மா, அம்மா” …

“வா, வா, வாணி, ஃப்ளைட்டெல்லாம் செளகர்யமா இருந்ததா?”

மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த அம்மாவைப் பார்த்த வாணி வாயடைத்துப் போனாள்!

‘என்னம்மா இது? ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ், கருப்பு ‘டீ சர்ட்’, அதுல ‘வெல்கம்’ வேற! நான் இந்த டிரெஸ்ல வந்து உனக்கு ஸர்ப்ரைஸ் குடுக்க நெனச்சா, நீ இப்டி எனக்கு ‘ஷாக்’ குடுத்துட்டியே’ – அம்மாவைக் கட்டிக்கொண்டாள் வாணி.

“சரி, சீக்கிரம் உடை மாத்திட்டு வா. உனக்காக ஸ்பெஷலா பர்கரும், பீட்ஸாவும் வெச்சுருக்கேன் – நானே செய்தது”

வாணி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள் – அந்த உடை அந்நியமாகத் தெரிந்தது!

One Comment on “ஸர்ப்ரைஸ்! /ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.