புது அம்மா/புஷ்பா விஸ்வநாதன்

“ராமு ராமு எங்கடா போன நீ” ‌என்று குரல் கொடுத்துக்கொண்டே வாசலில் இருந்து கொல்லைப்புறம் வரை தன் அருமைப் பேரனைத் தேடிக் கொண்டு வந்தாள் சீதாப்பாட்டி. பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்த பேரன் இன்றோ நாளையோ கிளம்பி விடுவான் என்பதால் அவனுக்குப் பிடித்த தின்பண்டங்களைச் செய்வதில் பிஸியாக இருந்த பாட்டி, தன் வேலையை முடித்தவுடன் பேரனை வீடு முழுவதும் தேடி கொல்லைப்புறம் வந்தாள். கொல்லையில் ஒரு
கல்மேடையில் அமர்ந்திருந்த பேரனைக் கண்டதும்தான் அவள் படபடப்பு அடங்கியது.

அவனருகில் வந்து அவன் தோளைத்தட்டி “ராமு ராமு” என்று மறுபடியும் குரல் கொடுத்த பிறகுதான் ராமு அசைந்து பாட்டியை ஏறெடுத்துப் பார்த்தான். “ஏண்டா, நான் கூப்பாடு போடுவதைத் கூடக் கேட்காமல் என்னடா பண்ணிண்டிருக்கே” என்று கேட்டவள் அவன் கையிலிருந்த படத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்டாள். அது அவன் அம்மாவின் படம். பாட்டியின் பெண்ணின் படம். தாத்தா தன் ஓவிய‌ நண்பர் உதவியுடன் ஸ்பெஷலாகத் தன் மகளை வரைய வைத்த படம். இரட்டை ஜடையுடன், நீண்ட நாசியும் அகன்ற கண்களும், நெற்றித்திலகமும், ‌காதில்‌ நீண்டு தொங்கும் தொங்கட்டானும், சற்றே திரும்பிய போஸில் அவள் தேவதை போலத் தோற்றமளிப்பாள். அம்மாவின் இந்தப்படம் ராமுவுக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு‌ இந்தப் படம்தான் அவனுக்கு அம்மாவாச்சு. இங்கு வந்த நாளிலிருந்து தினம் ஒரு தடவையாவது இந்தப்படத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டான். பார்த்து “பாட்டி என் அம்மா எவ்வளவு அழகு” என்று வியக்காமல் இருக்க மாட்டான். “ஆமாண்டா, என்‌ பெண் கொள்ளை அழகு” என்று சொல்லும்போது பாட்டியின் கண்கள் அவள் நினைவில் கலங்கும். “ஏண்டி, இவ்வளவு அவசரம் அவசரமாக எங்களை விட்டுப் போனாய்? உனக்குப் பதிலாக அந்த யமன் என்னைக் கொண்டு போய் இருக்கக்கூடாதா” என்று புலம்புவாள்.

ஆனால், இன்று பேரன் அந்தப் படத்தை எடுத்துக்கொண்டு தனியாக கொல்லையில் உட்கார்ந்து, கூப்பிடுவது கூடத் தெரியாமல் படத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டு……. அழுகிறானோ என்று சந்தேகம் வந்தது பாட்டிக்கு. அவன் தோளை மெல்ல அணைத்து “ராமு” என்று அழைக்கவும் “பாட்டி, அம்மா இனிமேல் வரவே மாட்டாளா?” என்று அவன் கேட்கவும் சரியாக இருந்தது. பாட்டியின் கண்களும் லேசாகக் கலங்க ஆரம்பித்தன. உடனே தன்னைச் சுதாரித்துக்கொண்டு
” அம்மா தான் சாமிகிட்ட போயிட்டாளே. எப்படி வருவா? அதனால் என்ன? உன் அப்பாதான் உனக்கு ஒரு புது அம்மாவைக் கொண்டு‌ வருகிறாரே! புது அம்மாவுடன் வந்துதானே உன்னை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போகப் போகிறார்.”
” பாட்டி, புது அம்மா எப்படி இருப்பா?”
” தெரியல்லியே. நாம யாரும் இது வரை பார்க்கலையே. இன்னிக்கு வரும்போது பார்க்கலாம். பொதுவா, புது அம்மாக்கள் கொடுமைக்காரிங்கன்னுதான் சொல்வாங்க. உன்னை இப்போ இங்கிருந்து அனுப்பவே எனக்கும் தாத்தாக்கும் இஷ்டமேயில்லை. ஆனால், உன்
அப்பாவே கூப்பிடும்போது எங்களால் என்ன செய்ய முடியும்? நீ ஒன்றும் கவலைப்படாதே. அங்கே உனக்கு ஏதாவது கஷ்டமாக இருந்தால் உடனே பக்கத்து வீட்டு விஜி ஆன்ட்டியிடம் சொல். அவள் உடனே எனக்கு ஃபோன் போட்டு சொல்லி விடுவாள். நானும் தாத்தாவும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வோம். சரியா” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள். அதற்குள் வாசலில் தாத்தா வரும் சத்தம் கேட்கவே இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். தாத்தா வாங்கி வந்த புது உடைகள், கதைப்புத்தகங்கள், பாட்டி கொடுத்த தின்பண்டங்கள் எல்லாம் அவனை உற்சாகமூட்டின.

மீண்டும் வாசலில் வண்டிச் சத்தம்.
” உன் அப்பா தான் ‌புது அம்மாவுடன் வருகிறாள்” என்று கூறிக்கொண்டே பாட்டியும் தாத்தாவும் வாசலுக்கு விரைந்தனர்.
அப்பாவின் அருகில் புது அம்மா. விரித்த கூந்தல் இரட்டை ஜடை போல
இரண்டு தோள்களின் வழியே முன்புறம் தவழ, அகன்ற கண்கள், நீண்ட திலகம், காதில் தொங்கும் ஜிமிக்கி. “அம்மா…..” என்று கத்திக்கொண்டே ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டான ராமு. தயங்கிய அவள் கைகளும் நீண்டு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டன.

One Comment on “புது அம்மா/புஷ்பா விஸ்வநாதன்”

  1. சித்தியை அம்மா என்றழைக்க வைப்பது அந்தப் புது தேவதையின் கையில் உள்ளது.
    கடைசியில், “கைகள் நீண்டு அவனை இறுக்கிக் கொண்டன” என்று சொல்வதன் மூலம் கதாசிரியர் வந்தவள் நல்ல அம்மாவாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

Comments are closed.