சில மருத்துவ நினைவுக்குறிப்புகள்…!/ஆர்க்கே.

எனக்கு நிறைய
டாக்டர்கள் பழக்கம்.
வைத்தியத்தால் மட்டுமல்ல-
என்
கவிதைப் பைத்தியத்தாலும்.

எங்க ஊர் தேவஸ்தான
தர்மாஸ்பத்திரி டாக்டர்தான்
சிகிச்சை துவக்கியவர்
முதலில் என்னுடம்பில்.

அண்ணனுடன் ஏற்பட்ட
விளையாட்டுச் சண்டையில்
பின்மண்டை வெட்டுக்கு
தையல் போட்டு பாண்டேஜ்
சுற்றிய கம்பவுண்டர்
ஜார்ஜ் அங்கிள்கூட
டாக்டர் போலத்தான் எனக்கு.

பேஷண்ட் கூட்டத்திற்கு நடுவே
என் முகம் பார்க்க நேரிட்டால்
ஒரு நாலுபேர் பார்த்துச் சென்றபின்
என்னை உதவியாளர் மூலம்
அழைத்துப் பேசிய டாக்டர்களும்
வாசல்வரை வந்து வழியனுப்பி
வைத்த டாக்டர்களும்
என் நட்பின் மீதான
மதிப்புக் கூட்டியவர்கள்.

தொலைபேசியில் அழைத்தால்
முதல் இரண்டு கிணுகிணுப்பில்
எடுத்து “சொல்லுங்க ஆர்க்கே!” என
பரபரப்பு பணிகளூடே
இயல்பாய் பேசுவர்
இரண்டு டாக்டர்கள்.

மேற்கு மாம்பல டாக்டர் ஒருவர்
“இப்ப என்ன நாடகத்தில நடிக்கறீங்க?”
என்று தேக அசௌக்ய
இறுக்கம் தளர்த்தி
இயல்பாய் மருத்துவம் பார்ப்பார்.

ஏதோ அவசர விசாரணையாய்
தன் கேபின் விட்டு வெளிவர நேரிடும்
பல் மருத்துவ(ர்)சகோதரி
“வாண்ணா!எப்ப வந்தே?!
நேரே உள்ள வரவேண்டியதுதானே?!” என்பார்.

“சும்மா உங்க வெடிச்சிரிப்பை
கேட்க போன் பண்ணினேன்”
“சும்மாதான் பேசி நாளேச்சேன்னு
கூப்பிட்டேன்” என்று சொல்லி
உரையாடல் முடிக்கும்
டாக்டர்களும் என் வாழ்வில்
அனேகம்.

“எதுனா இரண்டு மாத்திரை மருந்து
எளுதிக்குடு”
என்பேன்
உரிமையாய் ஒரு டாக்டரிடம் போய்.
“யோவ்! உனக்கு ஒண்ணுமில்ல.
என் உசிர வாங்காதே!”
எனச் சிரிப்பார் அவர்.

டாக்டர்களின் அரவணைப்பும்
அன்பும் கரிசனமும் நட்பும்
மருந்துச்சீட்டு
கமணட்லத்திற்குள்
அடங்கிவிடா
அகண்ட காவிரி.

நான் ஒருவேளை என்னை
அர்ஜூனன் என்றுணர்ந்தால்
என் அம்பறாத்தூணியில்
அன்பால் உறைந்திருக்கும்
என் பாதுகாப்பு படைக்கலன்கள்
இவர்கள் அனைவரும்.
சிறு சிறு உபாதை யுத்தங்களுக்கு
அவர்களின் பிரயோகங்கள்
அவசியமில்லைதான்.
உச்சபட்ச உடல்நோவு குருக்ஷேத்திரத்தில்
அவர்களே என் பிரம்மாஸ்திரங்கள்.

அன்புடன் நினைத்துப்போற்றுகிறேன்
அவர்களை இன்று(ம்)..!

(தேசிய மருத்துவர்கள் தினம் இன்று)