வாழ்க்கை அனுபவங்கள் – 1

அழகியசிங்கர்

திடீரென்று என் இளைய சகோதரர் திருப்பதி செல்ல கூப்பிட நானும் மனைவியும் அவன் ஏற்பாடு செய்த டிரவல் காரில் பயணமானோம்.

ஆனால் இப்படி காரில் போவது சரியா வருமா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் ஏற்படும்.  இன்று அதிகமாக இருந்தது. 

வெளியில் சொல்ல விரும்பாத உடல் உபாதைகள் உள்ளவன் நான். நான் எப்போதும் டிரெயினில் போவதைத்தான் விரும்புவேன்.

முக்கியமாக பஸ்ஸில் போக விரும்ப மாட்டேன்.  ஆனால் கார் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்வேன்.

சர்க்கரை நோயின் முக்கியமான அவதி அடிக்கடி யூரின் போவது.  பஸ் சரியாக வராது.  கார் சமாளிக்கலாம்.  

க்ளைமெட் வேற சரியாக இல்லை.  ஆனாலும் துணிச்சலாகப் போவது என்று எண்ணிக் கிளம்பினேன்.  ஏனென்றால் பிரதமர் மோடியைப் பல நாடுகளைத் துணிச்சலாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

கீழ் திருப்பதியில் பத்மாவதி கோயில் செல்லும்போது ஒரு பிரச்சினை சமாளிக்கும்படி நேர்ந்தது. சமாளித்து விட்டேன்.

இரண்டாவது டிராவல்காரர் 300 ரூபாய் ஸ்பெஷல் தரிசனத்திற்கு டிக்கெட் வாங்கவில்லை.  எங்களை  நைசாக  கார் வைத்து அனுப்பிவிட்டார்.  அதற்கு அவர் முன்னதாகவே வாங்கிய தொகை ரூ.10500.

இரவு 10 மணிக்கு இலவச தரிசனம் என்று டிக்கட் கிடைத்தது. எங்களுக்கோ திகைப்பாக ஆகிவிட்டது.  போகலாமா அப்படியே திரும்பிப் போகலாமா என்ற குழப்பம்.  

ஆனால் கார் டிரைவர் உறுதி அளித்ததால் கூட்டம் அதிகமாக இருந்தால் வீட்டிற்குத் திரும்புவது என்று தீர்மானித்துக் கிளம்பினோம்.   போகும் வழியெல்லாம் டிராவலர்ஸய் திட்டியபடி போய்க்கொண்டிருந்தோம்.

கடைசியில் கோயிலை அடைந்தோம்.  என்னவென்றால் கூட்டம் குறைவு.  எளிதாகத் தர்ம தர்சனத்திற்குப் போக முடிந்தது.

2 மணி நேரம் கழித்து வெளியே வந்துவிட்டோம். எல்லோருக்கும் மகிழ்ச்சி. என்னால் நம்ப முடியவில்லை.  முன்பொல்லாம் இந்தக் கோவிலுக்குப் போனபோது பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  இனிமேல் இங்கே போகக் கூடாது என்று முடிவுக்கு வருவேன்  இன்று நான் நடந்ததுபோல் எப்போதும் நடந்ததில்லை. நான்தான் தாமதமாக நடந்துகொண்டிருந்தேன்.  ஆனாலும் சமாளித்தேன்.  கார் இருக்குமிடத்திற்கு வந்தபோது திரும்பவும் பாத்ரூம் போக வந்தேன்.  திரும்பும் போது படிக்கட்டில் இறங்கும் போது பார்த்து இறங்கவில்லை. தவறி கீழே விழுந்தேன்.  முட்டிக்கால் கிட்டே சிராய்ப்பு.  ஆனால் அதிகமாக ரத்தம் வரவில்லை.

ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு கூட்டத்தில் கூறியபடி ஒருநாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கக் கூடிய கடவுள்.  உண்டியில் காணிக்கைச் செலுத்துவதற்கு பயங்கர கூட்டம் நின்று கொண்டிருந்தது.

வி ருட்சம் டெய்லி  முடித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஸ்மார்ட் போன் மூலமாக இதையெல்லாம் பண்ணினேன்.  இனிமேல் இந்தப் பத்திரிகையை நெட்  மூலம்  எங்கே வேண்டுமானாலும் நடத்தலாம்  ஆனால் நல்ல எழுத்து கிடைக்க வேண்டும்.

சில விஷயங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ளும்போது சிலவற்றைக் கவனிக்க வேண்டும்.

1. மிகக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

2. தண்ணீர் குறைவாகக் குடிக்க வேண்டும்.

3. நொறுக்குத் தீனி கூடவே கூடாது.

4. படிக்கட்டுகளில் ஏறும்போதோ இறங்கும்போதோ ஜாக்கிரதை உணர்வு வேண்டும்.

வரும்போது ஒரு இடத்தில் காப்பி குடிக்கும்போது ஒரு போனில் ஒரு புகைப்படம் எடுத்தேன்.

2 Comments on “வாழ்க்கை அனுபவங்கள் – 1”

Comments are closed.