100.குறுங்கதைகள்


முபீன் சாதிகா

இன்று நூறாவது கதை. ..
என் குறுங்கதைகள் நன்னூல் பதிப்பகம் மூலம் “நூறு புராணங்களின் வாசல்” எனும் தலைப்பில் தொகுப்பாக வருகின்றன. மூத்த எழுத்தாளர் வாசந்தி அம்மா அவர்கள் நூலுக்கு முன்னுரை எழுத இசைவு தெரிவித்திருக்கிறார். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் நூல் வெளிவரும். அனைவரும் வாங்கி ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நூறு கதைகளையும் வாசித்து தொடர்ந்து ஆதரவு தந்த விருட்சம் வாசகர்களுக்கும் கதை புதிது உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 
என் முனைவர்பட்ட ஆய்வேட்டை முடிக்கும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் புதிய படைப்புகளை ஜனவரியில் பதிவிடுவேன். 

இனி கதை….

3333ஆம் ஆண்டு பிறந்த முதல் நாள் அவள் குழந்தைகளை உருவாக்கித் தரும் மைத்திற்குச் சென்று ஒரு குழந்தை வேண்டும் என கோரிக்கை வைத்தாள். குழந்தையை வளர்ப்பதற்குரிய தகுதியை நிர்ணயிக்கும் மனுவை நிரப்பிக் கொடுத்தாள். அதற்கான தொகையைக் கணினி நாணயம் வழி பரிமாற்றம் செய்துவிட்டு வந்தாள். அவளுக்கு முன்னால் பலர் கோரிக்கை வைத்திருப்பதால் அவளுக்குக் குழந்தை கிடைக்கச் சில காலம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள். அவளுக்குக் கிடைக்கும் குழந்தை 75% எந்திரமாகவும் 25% இயற்கையாகவும் இருக்கும் என உறுதி கூறப்பட்டது. அதில் கோரிக்கை வைத்து இயற்கை அம்சத்தை 50% இயற்கை அதிகப்படுத்தலாம். ஆனால் முழுமையான இயற்கையான குழந்தை கிடைக்காது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டிருப்பதால் அவை பழுதானால் மாற்றிக் கொள்ளலாம். சாவு என்பதே இல்லாமல் ஒழித்துவிட்ட இனமாக அந்த இனம் மாறிவிட்டது. இயற்கை அம்சங்கள் அதிகமானால் சாவை நெருங்க வேண்டியிருக்கும் என்பதால் அதை அந்த இனத்தை ஆள்பவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இவளுக்கோ எப்படியாவது முழுவதும் இயற்கையான குழந்தை கிடைக்கவேண்டும் என ஏக்கப்பட்டாள். அப்படி முழுமையாக இயற்கையான குழந்தை கோரினால் அவர்கள் பூமி கிரகத்திற்குச் சென்றுவிடவேண்டும். சாவு வந்தால் அங்கேயே சந்தித்துவிடவேண்டும். மீண்டும் அங்கிருந்து வர வேண்டும் என்றால் கணினி நிதியைத் தொகையாகக் கொடுக்கவேண்டும். அதற்கும் இவள் ஆயத்தமாகத்தான் இருந்தாள். ஆனால் இயற்கையான குழந்தை கிடைக்க வேண்டும் என்றால் அதிகக் காலம் எடுக்கும். அப்படி இயற்கையான குழந்தையைக் கோரிப் பெற்றால் நாகரீகமடையாதவர்கள் என ஒதுக்கப்படுவார்கள். இவளுக்கு இயற்கையான குழந்தை தவிர வேறெதுவும் வேண்டாம் எனச் சொல்லிவிடலாம் என முடிவெடுத்தாள். அந்த மையத்திற்குச் சென்று தனது முடிவைச் சொன்னாள். இயற்கையான குழந்தைகளை எந்த மையமும் உருவாக்குவதில்லை எனக் கூறப்பட்டது. அவள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முருகனிடம் வேண்டினாள். தனக்கு இயற்கையான குழந்தை கிடைக்க அருள் புரியவேண்டினாள். இவளுக்குக் குழந்தை கிடைக்கும் நேரம் நெருங்கியது. அந்த மையத்தில் குழந்தையைச் செயற்கையாக உருவாக்குபவர் குளறுபடி செய்ததால் இவளுக்கு இயற்கையாக உருவான குழந்தையே கிடைத்துவிட்டது. அந்த மையம் அதற்காக வருத்தம் தெரிவித்தது. அந்தக் குழந்தைக்குப் பதிலாக வேறு குழந்தையை உருவாக்கித் தருவதாகச் சொன்னது. இவள் மறுத்துவிட்டு அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு பூமிக்கு வந்தாள். முருகன் கோயிலுக்குச் சென்று அவன் காலடியில் குழந்தையை வைத்தாள்.