
இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. அவர் வீட்டுக்குள்தான் வாழ்ந்தார். ஓட்டுக்குள் பழுத்துருளும் விளாம் பழம் போல் ஓட்டுக்குள்ளிருந்தும் ஒட்டியும் ஒட்டாமல் விட்டு விடுதலையான வாழ்வைத்தான் வாழ்ந்தபடி இருந்தார்.
பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது மகள்களை அவர் பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார். ‘குழந்தே’, ‘குழந்தே’ – என்றுதான் கூப்பிடுவார். அவர்களைப் படிக்கவைக்க அவர் பட்ட பாட்டையும் திருமணம் செய்து வைக்க அவர் பட்ட அல்லாட்டத்தின் ஒரு பகுதியையும் நான் அறிவேன். அவர் தனது நண்பர் ல.கி.ராமானுஜத்துக்கு மன்னார்குடி 36, கீழ நாலாந் தெருவிலிருந்து 09.08.1977இல் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“மூத்தவளுக்கு மணம் முடித்தே ஆகவேண்டும். வயது இருபத்தி ஒன்பது முடிந்துவிட்டது. அவமான உணர்ச்சியுடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் விரைவில் ஆகவேண்டும். இறையருள் எப்படியோ. மனசை இம்சிக்கும் தீய கனவுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டால் கொஞ்சமாய் மிஞ்சி மங்கிக்கிடக்கும் ஆத்ம விலாசமும் மாய்ந்தே போய்விடும். ஆனால் அப்படித்தான் மனம் குழம்பிச்செத்த நிலை. மனம் மாய்ந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையில் மனம் மாய்ந்துவிட்டால் நான் ஒரு பரமஹம்சன். அமுதத்தாரையைக் குடித்துக்கொண்டு ஆனந்த சாகரத்தில் திளைப்பேன். அந்த மஹா பாக்கியமெல்லாம் இந்த பாவிக்கேது”
பல சிரமங்களுக்குப் பின் அந்தக் கல்யாணத்தை 21.04.1978 அன்று நடத்தி வைத்திருக்கிறார். தன் அம்மாவோடு அவருக்கு வந்த பெரும் கருத்து வேறுபாடே அவரது மகள்களைப் படிக்க வைப்பதில்தான் தொடங்கியது. “என்னத்துக்குடா பொண் குழந்தைகளைப் படிக்க வைச்சுண்டுருக்க? நான் சொல்றேன் கேளு. இவாள்ளாம் படிச்சுட்டு இப்ப என்ன பண்ணப் போறா? அவள்களுக்கு கல்யாணத்த பண்ணி வைச்சிப்புடு” என்று அவர்கள் சொல்ல, “எப்பாடு பட்டாவது நான் அவாளைப் படிக்க வச்சுடுவேன்” என்று இவர் பிடிவாதமாய் சொல்ல, “அப்படின்னா நீ என் முஞ்சிலயே முழிக்காத. நான் செத்துட்டா தலைகாணிக்கு அடில பணம் வைச்சிருக்கேண்டா. அத எடுத்து நீ எனக்கு காரியம் பண்ணிடு” என்று சொல்லிவிட்டார். அந்தப் பாட்டியோடு பேத்திகள் சீராடிக் கொண்டிருந்தாலும் கரிச்சான்குஞ்சுக்கு இந்தச் சண்டையால் தனது அம்மாவை அவரது கடைசி காலம் வரை பார்க்க முடியவில்லை.
இன்னொரு பக்கம் அவர் சீட்டாடினார். ரேசுக்குப் போனார். எது பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தார். வேலை பார்த்த சில இடங்களில் தவறு நடக்கையில் சகித்துக்கொண்டிராமல் சமரசம் கொள்ளாமல் சண்டைபோட்டு விலகிவந்தார். கோபக்காரர். சாப்பாட்டுப் பிரியர். தாம்பூலக் காதலன். கிடைத்த பணத்தை உடனே செலவிட்டுவிடுபவர். அறச்சினம் கொண்டவர். துன்பங்களை அலட்சியப்படுத்தியவர். கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுபவர். வேதம் படித்தவர். கம்யூனிசத்தில் சற்று மோகம். இசை ரசிகர். விச்ராந்தி மனோநிலையில் இருப்பவர். இப்படி கரிச்சான் குஞ்சுவின் விசித்திரக் குணாம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கொஞ்சம் கொஞ்சம் பிடிமானம் இருந்தாலும் சராசரி வாழ்வில் ஒட்டாத மேலும் கீழுமான இந்த ஏற்ற இறக்கமான நிலைதானே ஒரு அசல் கலைஞனின் சாமுத்ரிகா லட்சணம். அவன் மன நிலையில் அவன் அப்படித்தானே வாழமுடியும்.
ஆனால் இது போன்ற விசித்திரப் பிறவியை வீடு சகித்துக்கொள்ளுமா? அது வரவு செலவு கணக்குகளால் ஆனது. அதைப் புரிந்து சகித்துக்கொள்ள வேறோரு கலைமனம் தேவைப்படுகிறது. திருமதி கரிச்சான் குஞ்சுவான சாரதா அம்மாளும் அவருடைய மகள்களும் பல சமயம் அவரைக் கடிந்துகொண்டதை அவரோடு சண்டையிடுவதை நான் நேரில் கண்டதுண்டு. ஆனால் அது அவர்கள் தவறல்ல. அவர்களின் கருத்துலகம் வழியே, அவர்களின் புரிதல்கள் வழியே, அவர்களின் அன்றாடச் சிரமங்கள் வழியே அவரைப் பார்த்த பார்வை அது. இது கரிச்சான் குஞ்சுக்கு மட்டுமல்ல பெரும்பாலும் தேர்ந்த கலைஞர்களெல்லாம் எதிர்கொள்கிற லௌகீகச் சிக்கல்தான். சம்பாத்தியமில்லாத, செல்வாக்கில்லாத புருஷனை வீடு சகித்துக்கொள்ளாது. சகித்துக் கொள்ளவும் முடியாதுதான். இப்படி ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
முகநூலில் தகவல் : ஆர். கந்தசாமி
நன்றி: காலச்சுவடு

கலைஞன் வாழ்க்கை இதம்.குடும்ப பொறுப்பு வதை!
எழுத்தாளர்கள் போராட்ட்த்தோடேயேதான் வாழ்கிறார்கள்!