
1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலி புறப்படுவதற்காகக் கடலூர் வழியாக அதிகாலை நேரத்தில் செல்ல முயன்றார். அவர் குடும்பத்துடன் சென்ற ஜட்கா வண்டியின் பின்னாலேயே இன்னொரு ஜட்கா வண்டியில் வந்த பிரிட்டிஷ் இந்தியா போலீசார் , பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைக் கைது செய்தனர்.அவரது மனைவி மைத்துனர்கள் மகள்கள் உடனிருந்தனர். செல்லம்மாளும் ஒரு சகோதரரும் முறையீடு செய்யச் சென்னை செல்ல , மகள்கள் இருவரும் சின்ன மாமனுடன் கடையம் புறப்பட்டார்கள்
பாரதியாரை அழைத்துச் சென்று மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்துகின்றனர். சடகோபாச்சாரியார் மற்றும் நடராஜாய்யர் இருவரும் பாரதிக்காக ஆஜராகி பிணை கேட்கின்றனர். ஆனால் பிணை வழங்கப்பட வில்லை. கடலூர் கேப்பர் குவாரி சிறையில் பாரதி அடைக்கப்படுகிறார்.
பாரதியாரைக் கைது செய்த செய்தி தெரிந்ததும், ஏ.ரங்கசாமி அய்யங்கார் மாகாண போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெனரலிடம் சென்று, பாரதியாரைப் பற்றியும் அவர் உடல்நிலை பற்றியும் சொன்னார். தீவிர அரசியலில் இனி ஈடுபடுவதில்லை என்று பாரதியார் வாக்குக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னார். பாரதியாரை இவ்வாறு செய்யும்படியாகக் கேட்பது அவரது நேர்மையான குணத்துக்கும் நாட்டுப்பற்றுக்கும் இழுக்காகி விடும் என்று அய்யங்கார் வாதாடினார். பத்திரிகைகள் பாரதியாரை விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தின. பயனில்லை. சிறையில், பாரதியாரின் உடல்திலை மிகவும் சீர்குலைந்து போயிருந்தது.
வாக்குறுதி கொடுத்தது போலும் இல்லாமல், கொடுக்காமல் இருந்தது போலும் இல்லாமல். ஒரு மன்னிப்புக் கடிதத்தை அய்யங்கார் தயார் பண்ணி, பாரதியாரின் கையெழுத்தைக் கோருகிறார்.
பாரதியார் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரால் சிறையில் நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லை. தன்னால் சிறையில் இருக்க முடியாது என்று மனம் நொந்திருந்த நிலையில் பாரதியிடம் அந்த கடிதத்தைக் கொடுக்கிறார்.
பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த இறுதி நாட்களில் கொடிய வறுமையால் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டுள்ளார். பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்காதிருப்பதையே சிலர் விமர்சிக்க ஆரம்பித்திருந்தார்கள்.புதுவையில் வாழ முடியாது என்று முடிவு செய்து தன்னால் தனது குடும்பத்தினர் அனைவரும் வாடுவதை உணர்ந்துதான் திருநெல்வேலி சென்றே தீரவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்தார். கடிதத்தில் கையெழுத்திட்டார்.
அந்தக் கடிதம் ஆளுநருக்குச் சென்ற பிறகு சுதேசமித்ரன் பத்திரிக்கை ஆசிரியர் ரெங்கசாமி, அன்னிபெஸண்ட் அம்மையார், நீதிபதி மணி அய்யர் அனைவரும் சென்று ஆளுநரைச் சந்தித்து பாரதியை விடுதலை செய்யும்படி கோரிக்கை வைக்கின்றனர். அப்போது பாரதியை விடுதலை செய்ய முயற்சி எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்
பிறகு கடலூர் சிறையில் இருக்கும் பாரதியைச் சந்தித்து அவர் எந்த மனநிலையில் இருக்கிறார். அவர் நிபந்தனைகளுக்கு உட்பட்டுவாரா என்பதை அறிந்துகொள்ள மெட்ராஸ் டி.ஐ.ஜி ஹானிங்டன் என்பவரை அனுப்பி வைத்தார் ஆளுநர்.
பாரதியார் தென்காசி, குற்றாலம் இந்த இரண்டு பகுதியில் மட்டுமே வாழ வேண்டும். சென்னைக்குப் போகக்கூடாது.
இரண்டாவதாக அரசுக்கு எதிராக கட்டுரைகள், கவிதைகளை எழுதக்கூடாது.
மூன்றாவதாக எழுதக்கூடிய கட்டுரைகள் அனைத்தையும் அங்கிருக்கும் காவல் துறையினர் அல்லது மாஜிஸ்ட்ரேடிம் காட்டிவிட்டுத் தான் வெளியிட வேண்டும் என்று ஹானிங்டன் பாரதியாரிடம் கூறியுள்ளார். அதை பாரதியாரும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்ட காரணத்தினால் ஹானிங்டன் சென்னை சென்று பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை ஆளுநரிடம் சொல்கிறார். அதன்பிறகு 1918 டிசம்பர் 14ஆம் தேதி மாலை பாரதியார் விடுதலை செய்யப்படுகிறார்,
புதுச்சேரிகண்டபாரதி என்னும் இந்தத் தொடரை பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதியின் சில வரிகளுடன் நிறைவு செய்கிறேன்.
“என் தந்தை தேசிய விஷயங்களில் இனி சம்பந்தப்படுவதில்லை. அது சம்பந்தமான பிரசங்கங்கள் செய்வதில்லையென எழுதிக் கொடுத்து விட்டு வெளிவந்ததில் என் மாமனுக்கு மிக்க வருத்தம். பெரிய குடும்பத்தை சம்ரட்சிப்பதற்குப் பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால் தனக்கு தேச சேவைக்கு நேரமில்லாமல் போய் விட்டது. தன் தங்கையின் குடும்பத்தையும் தானே வைத்துக் காப்பாற்றுவதாக உறுதி மொழியளித்தும் கூட, என் தந்தை கேளாமல் சிறையிலிருந்து வெளிவந்தது சரியல்லவெனக் கோபித்தார். வீட்டில் எப்பொழுதும் கோபப் பேச்சுக்கள், மனவருத்தங்கள் இதன் மத்தியில் என் தந்தையைக் காணவேண்டி வந்த பந்துக்களின் கூட்டம். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. தன் வாழ்க்கையின் இலட்சிய மாகப் போற்றி வந்த தேசத் தொண்டை ஆற்றுவதற்கான அரசியலில் சம்பந்தப்படுவதில்லையெனத் தாம் வாக்களித்தது பின்னால் அவருக்கு அதிக மனக் குழப்பத்தை உண்டாக்கிற்று. விதியின் கொடுமை! தன் தந்தை பின்னும் சில மாதங்கள் புதுவையிலேயே இருந்திருப்பாரானால் யுத்த சமாதானத்தினால் யாதொரு நிபந்தனையுமின்றி புதுவையிலிருந்து ஸ்ரீ வ.வே.சு ஐயர். ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் இவர்கள் வெளிவந்தது போல அவரும் நிம்மதியாக வந்திருக்கலாம்.”
