கவிஞர் வைரமுத்துவின் பிறந்த தினம் இன்று../அழகியசிங்கர்

13.07.2023

துளி:  270

இன்று கவிஞர் வைரமுத்துவின் பிறந்ததினம்.  முகநூலில் பலர் வைரமுத்துவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சிலர் நேரிடையாகச் சென்று வாழ்த்துகிறார்கள்.  முதல்வர் அவர் வீட்டிற்குப்போய் பொன்னாடை போர்த்தி விட்டு வந்திருக்கிறார்.

அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருமுறை நான் வைரமுத்துவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  அந்தத் தருணத்தில் என்னை அவர் கலைஞரிடம்  அறிமுகப் படுத்தினார். கவிதைகள் எழுதுபவர்கள் சந்தித்த நிகழ்ச்சி.  கலைஞரின் பிறந்த தினம் அன்று.   அப்போது என் பெயர் வைரமுத்துவுக்குத் தெரிந்ததுதான் ஆச்சரியம்.  எனக்கு வைரமுத்துவை தெரியும்.

ஆரம்ப காலத்திலிருந்து வைரமுத்துவை பார்க்காவிட்டாலும் அவரைப் பற்றிய செய்திகளை நான் அறிவேன். கண்ணதாசனுக்குப் பிறகு அவர் சிறந்த சினிமாப் பாடல்களை எழுதியிருக்கிறார். ‘வானம் எனக்குப் போதி மரம்’ என்ற பாடல் இன்னும் கூட என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் டிஸ்கவரி புத்தக நிலையத்திற்குச் சென்றேன்.  அங்கு அவருடைய சிறுகதைகளை வாங்கினேன். ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது.  கெட்டி அட்டை. சிறப்பாக அச்சடித்திருந்தது.  384 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

40 கதைகள் கொண்ட புத்தகம்.  குமுதம் இதழில் வெளிவந்த கதைகள்.

நான் 50க்கும் மேற்பட்ட கதைஞர்கள் கூட்டங்களை  நடத்தி விட்டேன்.  இன்னும் நடத்துகிறேன்.  பொதுவாகச் சிறுகதைகள் படிப்பது ஒருவருக்கு எளிது.  ஒரு புத்தகத்தில் ஒருசில கதைகள் படித்தாலே போதும்.

ஆனால் ஒரு நாவல் என்றால் அதுவும் 100 பக்கங்களுக்கு மேல்படிப்பது சிரமம்.

வைரமுத்து கதைகளை நான் வீட்டிற்கு வந்தவுடன் படிக்கத் தொடங்கி விட்டேன். புலவர் தமிழில் எழுதியிருக்கப் போகிறாரே என்று நினைத்துத்தான் படித்தேன்.  ஆனால் வித்தியாசமான மொழியில் எழுதியிருக்கிறார்.  கதைக்கு வேண்டியது எடுத்த உடன் படித்து முடித்து விடவேண்டும்.  கதை விறுவிறுவென்று போய்க் கொண்டிருக்க வேண்டும்.

இவர் கதைகள் எல்லாம் நாலைந்து பக்கங்களில் முடிந்து விடுகிறது. முதல் கதை தூரத்து உறவு.  அமெரிக்காவிலிருந்து சிவராமன் அமெரிக்காவிலிருந்து பறந்து வந்திருக்கிறான்.  அப்பாவின் உடலை எரி மேடையில் கடைசியாக உற்றுப் பார்த்தான் சிவராமன்.   இப்படி ஆரம்பிக்கிறது கதை.  பொதுவாக வைரமுத்துவின் கதையில் அவர் தலையீடு  தெரிகிறது.  கதை மூலம்  கருத்தைச் சொல்ல முயற்சி செய்கிறார்.

முதல் பாராவிலேயே அப்பாவின் மரணத்திற்கு அழ முடியாத அல்லது அழத்தெரியாத ஒரு தலைமுறை தயாராகி விட்டது.  இப்படி அடுக்கடுக்காக கருத்துக்களைக் கொண்டு வருகிறார்.  பிணத்தில்தான் பிள்ளைகள் பாசமுகத்தைப் பார்க்கிறார்கள்.  மரணம் இறந்தவர்களுக்கே சாதகம் செய்கிறது.  இப்படி இந்தக் கதை போய்க் கொண்டிருக்கிறது.

இப்படி கதையின் ஊடே கவிஞரின் தலையீடு கூட படிக்க நன்றாக இருக்கிறது.

‘இலை கழித்த செம்பருத்திச் செடிகளும், அடிமட்டை காய்ந்த இரண்டே இரண்டு தென்னை மரங்களும் எஜமான் மறைவுக்காகத் தம் பங்குக்குத் துக்கம் அனுஷ்டித்தன.’

அப்பா இறந்தபிறகு அம்மாவைத் தனியாக விட்டுவிட்டுப் போக விரும்பவில்லை.  அம்மாவோ அவனுடன் வரத் தயாராய் இல்லை.  அவனும் அதை விரும்பவில்லை. அதனால் அம்மாவைப் பழத்தோட்டம் என்கிற முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறான். அப்பா இருந்த வீட்டை 7 கோடிக்கு விற்று விடுகிறான். அம்மா மீது அவனுக்கு அக்கறையே இல்லை.

அம்மாவை விட்டுவிட்டு அமெரிக்கா வந்து விடுகிறான் சிவராமன்.  அவன் அமெரிக்கா வந்து சேர்வதற்குள்  இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அவன் அம்மாவும் இறந்து விடுகிறாள்.  இந்த அதிர்ச்சியைக் கேட்டு சிவராமன் கலங்குகிறான்.

இங்கே

‘அவன் அப்படியே தலையில் கைவைத்துத் தரையில் சரிந்து சுவரில் சாய்ந்தான்’ என்று எழுதியிருக்கிறார்.

கடைசியில் இப்படி முடிக்கிறார்.  13,462 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்கைப்பில் எரிந்து கொண்டிருந்தாள் அம்மா என்று முடிக்கிறார்.

நெருக்கமான உறவாக இருந்தாலும் தூரத்து உறவு என்று கதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார்.  இது வியாபார உலகம்.  பாசத்திற்கு இடமில்லை என்று கதை மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

வைரமுத்துவின் பிறந்த நாளன்று அவர் கதையைப் படித்த திருப்தி உண்டாயிற்று.