தாவோ தே ஜிங் – 2/அழகியசிங்கர்

(சாரமும் விசாரமும் : மொழி பெயர்ப்பு சந்தியா நடராஜன்)

திரும்பவும் சந்திக்கிறார்கள். தாவோ தே ஜிங் குறித்து உரை நிகழ்த்துகிறார்கள்.

மோகினி : இந்தப் புத்தகத்தில் 81 பாடல்கள் இருக்கிறது. இதைப் படிக்கும் ஒருவருக்கு ஞானம் ஏற்படுமா?

அழகியசிங்கர் : இதைப் படிக்கும் யாருக்கும் எந்த ஞானமும் ஏற்படாது. முதலில் நம் மூவருக்கும் ஞானம் கிடைக்காது. இதை எழுதிய ஆசிரியருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது கொடுத்தவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் யாராவது முகம் தெரியாத ஞானம் அடைந்த ஒருவரிடம் இந்தப் புத்தகம் இருக்கலாம்.

ஜெகன் : யோகி ராம் சூரத் குமாரைப் பார்க்கப் போனபோது பிரமிளிடம் தெய்வத்தின் குரல் புத்தகத்தைக் கொடுத்து எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்கக் கொடுத்தார். ஏன் கொடுத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அழகியசிங்கர் : அந்தப் புத்தகத்தில் என்னவோ இருக்கிறது என்று யோகியாருக்குத் தெரிந்திருக்கும். நாம் இதைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியாது.

மோகினி : புத்தக ஆரம்பத்தில் யின்-யாங் என்று குறிப்பிடுகிறார். யின்-யாங் இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. பூவில்லாமல் தலை இல்லை. தலை இல்லாமல் பூ இல்லை. அதாவது இருத்தல் என்றால் இருத்தலின்மை என்று இருக்கிறது. அதேபோல் செயல் என்றால் செயலின்மை என்று இருக்கிறது.

ஜெகன் : இப்போது இதில் குறிப்பிடப்பட்டுள்ள 81 பாடல்களைப் படிக்கும்போது எப்படிப் படிக்க வேண்டும்.

மோகினி : ஒவ்வொரு நாளும் ஒரு பாடலைப் படித்துவிட்டு அது குறித்து யோசிக்க வேண்டும். இன்னொரு நாள் இன்னொரு பாடல். அப்படிப் படித்தால்தான் மனதில் ஆழமாகப் பதியும்.

அழகியசிங்கர் : இரண்டாவது பாடலைப் படிக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடலை திரும்பவும் படிக்க வேண்டும். ஆழமாகப் போக வேண்டிய புத்தகம் இது.

ஜெகன் : முதல் பாடலில் கடைசி நான்கு வரிகளைப் படிக்கிறேன்.

இவற்றின் மூலம்

இருண்மை எனப்படும்

இது இருண்மைக்குள் இருண்மை

எல்லாப் புரிதலும்

இருள்வழி ஏகும்

இதை இப்படியே படிக்கும்போது ஒன்றும் புரியாது. ஆனால் இதற்கு நூலாசிரியர் அர்த்தம் கொடுக்கிறார். அதைப் படிக்கும்போதுதான் இதைக் கொஞ்சம் நெருங்க முடிகிறது.

அவர் என்ன சொல்கிறாரென்றால் பற்றுடைய மனதிற்குப் புறப்பொருள் மட்டுமே காட்சிப்படும். பற்றில்லாத மனதிற்கு மறைபொருள் தெரியும், அவிழும். அதற்கு உன் மனம் வெற்றிடமாக வேண்டும். இன்மையும் இருப்பும் ஒன்றிணைய வேண்டும். பிளவுபடாத மனம் தாவோவின் உலகம்.

மோகினி : சி மணி புத்தகத்தில் ஒன்றும் விவரிக்காமல் அப்படியே பாடல்களை மொழி பெயர்த்துள்ளார். படிப்பவர்கள் சில நிமிடங்களில் விலகி ஓடிவிடுவார்கள்.

அழகியசிங்கர் : முதல் பாட பாடலிலிருந்து இரண்டாவது பாடலுக்குப் போனால் இன்னும் சற்று வித்தியாசமிருக்கிறது. ஒன்றுக்கொன்று எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஜெகன் : ஆமாம். நீங்கள் பலமுறை ஒவ்வொரு பாடலையும் படிக்க வேண்டும். உங்கள் மூளையில் போகிறதோ இல்லையோ மனதில் பதிய வேண்டும்.

அழகியசிங்கர் : இந்தப் புத்தகத்தை நான் என் டேபிளின் மீதே வைத்திருப்பேன். ஒவ்வொரு முறையும் எடுத்துப் படிப்பேன். திரும்பவும் படிப்பேன். முதலில் படித்தது மறந்து போயிருக்கும். புத்தகத்தில் கோடெல்லாம் போட்டிருப்பேன்.

(இன்னும் வரும்)

14.07.2020

No photo description available.

Like

Comment