ஆபிச்சுவரி…/

அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை வாசலில் போடப்பட்டிருக்கும் கம்பி நாற்காலியில் அமர்வார். ஜீன்ஸ் பேண்ட், கருப்பு லெதர் செருப்பு, பச்சையோ, நீலமோ, காலர் வைத்த ஒரு டீ சர்ட், கையில் அன்றைய நியூஸ் பேப்பர். அமர்ந்தவுடன் கண்ணாடி சன்னலின் வழியே தலையைக் குனிந்து, புருவம் உயர்த்திப் பார்ப்பார். பத்து நிமிடங்களுக்குள்ளாக, உள்ளிருந்து சூடான காப்பி, இரண்டு பிஸ்கட் கொண்டு வந்து வைப்பார் வெயிட்டர் – அன்று யார் டியூடியிலிருந்தாலும் இதுதான் நடக்கும், கிட்டத்தட்ட முப்பது வருடப் பழக்கமாயிற்றே – எங்கோ ஒலிக்கும் சின்னப் பறவை கூவும் சத்தம் தவிர காலையில் வேறு சத்தம் இல்லை. காப்பியைக் குடித்தவாறே, அன்றைய பேப்பரில் முதலில் அவர் பார்க்கும் செய்தி ஆபிச்சுவரி – இறந்தவர்கள் பற்றிய அறிவிப்புகள்!

அருகில் ஒரு மைல் தொலைவில் ஏதோ ஒரு குடியிருப்பில் இருப்பவர். வேலை ஏதும் கிடையாது. சேமிப்பிலிருந்து வருகின்ற பணத்தில் வாழ்க்கை. தனி மனிதராகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு முறை கூட அவருடன் யாரும் வந்ததில்லை. தனிமை விரும்பி போலும். எல்லாம் ஒரு அனுமானம்தான், யாருக்கும் உண்மையாக அவர் பற்றி தெரியாது, அதற்கு அவசியமும் இல்லை! அவரவர் வாழ்க்கை அவர் கையில்.

புராதனமான கடையில், தன் விருப்பப்படி கிடைக்கும் காப்பியைத் தினமும் ருசிக்கும் இந்தப் புராதனமான மனிதரைப்பற்றி பலருக்கும் வியப்பிருந்தாலும், யாரும் அவரிடம் கேட்டதில்லை. அப்படியே கேட்டாலும், நெற்றி சுருக்கி, கண்கள் மூடி, ஒரு புன்னகையைத் தவிர வேறு பதில் ஒன்றும் தரமாட்டார். ‘அழுத்தமான, ஆனால் இனிமையான கிழப் பேர்வழி’ என்ற பெயர் அவருக்கு உண்டு என்பதை அவர் அறிவார் – அதனால் வருத்தமில்லை!

என்றாவது ஒருநாள் தன் புகைப்படமும் ஆபிச்சுவரிப் பக்கத்தில் வரும், ஆனால் தான் அதைப் பார்க்க முடியாது.. அதற்காகவே கோட், டை எல்லாம் போட்டு எடுத்த புகைப்படம் ஒன்றைத் தன் அறையின் டேபிள் மேல் வைத்திருந்தார். ‘இந்தக் கிழவன் இந்த வயதிலும் இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறானே’ என்று எல்லோரும் நினைப்பார்கள், ஒரு சிலர் பேசவும் செய்வார்கள். ஆனால் அது அவருக்குத் தெரியப்போவதில்லை – தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்தால் போதுமே! ஒரு கணம் அன்றைய ஆபிச்சுவரியில் அவர் படம் தோன்றி மறைந்ததைப்போல அவருக்குத் தோன்றியது, எல்லாம் நினைப்புதானே!

அன்று கூடலூரில் எண்பது வயது முதியவர், ராணிப்பேட்டையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி, இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் இறந்த ஆறு வயதுச் சிறுமி, ஐந்து வயது டோனி என்னும் நாய்க்குட்டி என ஆபிச்சுவரி காலம் ஃபுல்லாக இருந்தது. கிழவரின் முகத்தில் ஓர் அமைதி. மீதி பேப்பரை விரைவாகப் புரட்டினார், கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு கிளம்பினார். அருகில் இருந்த சர்ச் வாசலிலிருந்த மேரி மாதாவுக்குப் பூச்செண்டு ஒன்றை வைத்துவிட்டு, தன் குடியிருப்பை நோக்கி நடந்தார்.

“ரோஸி, நாம் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லையா?”

பெயருக்கேற்றார்போல ரோஸ் கலரில் அந்தப் பெண். செதுக்கியது போன்ற மூக்கு, கருமையான விழிகள், சுருள் முடி, அளவான உடலைப் பிடிக்கும் நீள கவுன், காலில் ஹை ஹீல் ஷூ, நடையில் ஓர் ஒயிலான அமைதி! எதிரே ஜீன்ஸ், டீ சர்டில் படிய வாரிய தலையுடன் நின்று கொண்டிருந்த இளைஞனின் முகத்தில் எதிர்பார்ப்புடன் கூடிய சோகம். குரலில் ஒரு கெஞ்சல்.

“இல்லை. எங்கள் மதத்தில் இது சாத்தியமில்லை. என் பெற்றோரைப் பற்றித் தெரியும்தானே, அவர்கள் மிகவும் பிடிவாதக்காரார்கள்”.

“அவர்களைப் பற்றி உனக்கும் முன்பே தெரியும்தானே? பின் ஏன் இந்தக் காதல்?”

“காதலுக்குத் தெரியவில்லையே என் பெற்றோரைப் பற்றி”

“பின் என்னதான் முடிவு?”

“என் பெற்றோரின் முடிவுக்கு நானே காரணமாக இருக்க விரும்பவில்லை. அவர்கள் தங்கள் மதத்திற்காகத் தங்கள் உயிரையே விட்டுவிடத் தயாராக உள்ளார்கள்”

“ம்..ம்ம்.. நான் வேண்டுமானால் உங்கள் மதத்திற்கு மாறிவிடவா?”

ஒரு கணம் அங்கே கனத்த அமைதி விழுந்தது.

“தன் மதத்திற்குத் துரோகம் செய்யும் எவரையும் என் பெற்றோர் விரும்புவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை”

“…. சே, ஏன் இப்படி மதம் பிடித்து அலைகிறார்கள்?”

“காதலைவிட, மதங்களை விட மனித உயிர்கள்தான் பெரியவை. காதலுக்காக, மதங்களுக்காக உயிரை விடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எதற்காகவும் எந்த உயிர் போவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”.

“நான் தற்கொலை செய்துகொண்டால்….?”

“உன்னை என்னால் விரும்பவே முடியாது. என் இதயத்தில் இப்படிப்பட்ட ஒரு கோழையை, ஒரு தோல்வியை எதிர்கொள்ளக் கூட வலுவில்லாத ஒரு மனிதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது”

அவர் அன்று மூன்றாவது முறையாக அந்த ஆபிச்சுவரி பகுதியைப் படித்தார். கண்களைச் சுருக்கிப் பார்த்தார். ஈரித்த கண்களை கைக்குட்டையில் துடைத்துவிட்டுப் பார்த்தார். பாக்கெட்டிலிருந்து ஒரு லென்ஸை எடுத்து, மேலும் கீழும் அசைத்துப் பார்த்தார். நடுங்கும் கைகளில் இருந்த லென்ஸில், படத்திலிருந்த பெண்ணின் சிரித்த முகம் ஆடியது. அவளது மரணச் செய்தியில் மனமுடைந்து, எதிரே இருந்த காப்பி டேபிளில் சரிந்தார் அவர்.

“ரோஸி தாமஸ், வயது 72” கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் மரித்துப்போனதாக ஒரு புகைப்படத்துடன் செய்தி சொல்லியது ஆபிச்சுவரி பக்கம்.

அடுத்த வாரம் ஆபிச்சுவரியில் வரப்போகும் ‘கோட்’ போட்ட இவர் புகைப்படத்தைப் பார்க்க ரோஸி இல்லை என்பதுதான் இறந்தவரின் சோகம்!

ஜெ.பாஸ்கரன்.

One Comment on “ஆபிச்சுவரி…/”

Comments are closed.