20.07.2023 அன்றைய நிகழ்வில் வாசித்த கவிதை/நாகேந்திர பாரதி

எழுதப் படாத வேதனைக் கதைகள்


எல்லாக் கதைகளும்
எழுதப் படவில்லை

மழைச் சகதியில்
மாட்டிக் கொண்ட ஒற்றைச் செருப்பு

மின்சாரக் கம்பியில்
தொங்குகின்ற அறுந்த பட்டம்

தேர்முட்டி வீதியில்
திணறுகின்ற கோயில் தேர்

எலும்புச் சண்டையில்
சதை பிய்ந்த தெரு நாய்

கருடப் பசிக்குக்
காவு தந்த கோழித் தாய்

கண்மாய்க் கரையில்
காய்கின்ற கந்தல் வேட்டி

களத்து மேட்டில்
கிடக்கின்ற கருக்கா நெல்

கேட்டால் கிடைக்கலாம்
எழுதப்படாத வேதனைக் கதைகள்

————–