
20.07.2023 அன்று விருட்சம் கவியரங்கில் வாசித்த இரு கவிதைகள்
என் இறையே
மீட்சியில் அரவணைத்து
புறந்திரும்பியதைச் சுட்டாது
பெருகும் சுடுநீர் வழித்து
நெட்டி முறிக்கும்
உனதன்பின் பொறியில்
சடசடத்து அடங்கும் இருளைக் காணிக்கையாக்குகிறேன்
வழக்கம் போல….
மயில்பீலியின் தடவலாய்
வருடி ரணம் துடைக்கும்
விரல்கள் வரமென்ற
தவம் புரியா தற்குறியின்
தற்காலிக உணர்தல்
குணமடைந்த அகாலத்தின்
பனிப் போர்வைக்குள் பதுங்க
கைவிலக்கி நிறுத்தி
விழித்திரையின் தளும்பலில்
பொருந்தாது அசைந்தாடும்
பிம்பத்தை உற்று நோக்கி விடையளிக்கையில்
எழும் உன் ஆயாஸப் பெருமூச்சு
புரிந்த கதையைப்
புரியாத பல புதிர்களுடன்
வழித்துணையாக்க…
சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்த இருண்மை
மாறாத விதிக்கோளமாய்
உருண்டு தொடரும்
பதறிய பாதம் பிடறி பட
முன் செல்கையில்
குதிகாலில் உரசி ஒட்டி
முதுகேறி அமர்வது
உறுதியான கணத்தில்
தளர்ந்தமர்ந்தாலும்
மீட்சியில்
வரவேற்க காத்திருப்பாய்
வழக்கம் போல…..
போதிமரம்
நீந்துதலின் இனிமையை
இந்த மீன்கள் கற்றுக் கொடுக்க
மிதத்தலின் இலகுத் தன்மையை
போகிற போக்கில்
சொல்லாது சொல்கிறது சருகு!
காற்றின் விளையாட்டில்
சிற்றலைகள் கரை தொட்டுத் திரும்ப
கனவில் சிரித்துக் கொண்டது குளம்!
நீந்துதல் மீனுக்கும்
நகர்தல் மேகத்திற்கும்
இளைப்பாறுதலற்ற நேசமாய்
விதிக்கப்பட்டதாக
நிலைத்து நின்ற மரத்திடம்
பிதற்றிக் கொண்டிருக்கையில்
மோனம் கலைக்காது
கரையோரம் காத்து நிற்பதும்
தவமெனப் புன்சிரித்தது அது!

தவம்” அருமை!