
சிவாயநம. இன்று விருட்சம் நிகழ்வில் வாசித்த என் கவிதை :
அச்சொல்லை சொல்லிவிடின் அகத்தில் கொஞ்சம்
அமைதிநிலை வரலாம்தான்; சொன்னால் என்ன?
எச்சொல்லை எவரினெந்தச் செயலை நெஞ்சம்
ஏந்திசுமை உணர்ந்ததோ அவ்விறுக்கம் மாற்றும்
அச்சொல்லை சொல்லிவிடின் ஒருக்கால் உள்ளே
அகவிறுக்கம் தளரலாம்தான்! ஆனால் சிந்தை
இச்சொல்லை உதிர்க்காதே; உதிர்த்தால் அள்ள
இயலாதே மீண்டுமென மன்றா டிற்று!
சிலர்செயல்கள் சிலர்சொற்கள் அவ்வப் போது
சிற்சிலவாய் மனதிற்குள் தரும் காயங்கள்!
உலர்வதுபோல் தோன்றிடினும் வெடிக்கும் புண்ணாய்
உள்ளாறா வடுக்களென உறுத்தி நிற்கும்!
மலருமென நினைத்திருக்க ரோசா மொட்டு
மண்ணினிலே வாடிவிழல் போல, நேயம்
அலருமென எதிர்பார்க்க மீண்டும் சொல்லால்
அடிபடுமோர் சூழலிலே மனமென் செய்யும்?
‘ஒருசொல்லால் மனவிறுக்கம் தளரு மாயின்
உதிர்த்துவிடேன் ‘ எனவொன்றும், ‘வேண்டாம் ‘ என்றும்
இருகுரல்கள் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே
இருந்ததனால் குழம்பினேன்நான்! ‘இன்னும் கொஞ்சம்
மெருகேற்றேன் சிந்தனையில் ‘ என்றோர் தூண்டல்
முகிழ்த்திடவே முயற்சித்தேன்; முகம்நேர் சொல்லால்
வரும்பயனென்? இறுக்கமான மனதில் ஈரம்
வருவித்தேன்! சொல்கரைந்து வடிந்தோ டிற்று!
**

இறுக்கமான மனதில் ஈரம் வரவழைத்தேன்;
சொல் கரைந்தோடிற்று!
அருமை!
பலமுறை யோசித்தால் நிறைய வார்த்தைகளை நாம் பேசவே மாட்டோம்!👏👏👏👌🌈
ஒரு தடவைக்கு மூன்று தடவை படித்தேன்.
எந்த ஒரு சொல்லையும், இன் சொல்லோ அல்லது சுடு சொல்லோ, கூறுவதற்கு முன் அதை ஆராய்ந்து விட்டு சொல்வதே சிறந்தது என்பதை வலியுறுத்தும் கவிதை. அருமை