வத்சலா கவிதைகள்

20.07.2023 ல் விருட்சம் கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசித்த 4 கவிதைகள்👇🏾

1. கணினி செய்த சதி
நான் ஒன்று தட்டச்ச
அது வேறு ஒன்றடித்திட
அவள் கழுத்தில் அவன் தாலி
சங்கு என் காதலுக்கு


2. பொறாமை
மனம் நினைத்ததை
வாய் பேச
கைபேசி
தட்டச்ச
உருவாகியது
ஓர் கவிதை

பழுதாகி
மூலையில் கிடந்த
மடிக்கணினி
கொதித்தது
பொறாமையில்


3. வெற்று மடி
கனக்கிறது வெற்று மடி
ஏங்குகிறது மனம்
வீட்டுவேலையில்
கவனச் சிதறல்

கணவரிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டேன்
சர்க்கரைக்கு பதில்
உப்பை சேர்த்து
காப்பி கோப்பையில்

உணவு செல்லவில்லை
மதியம் உண்ட உடன்
வரும் உறக்கம்
இன்று வர மறுத்தது
குடித்த தேநீர் கோப்பைகளுக்கு
கணக்கு வழக்கில்லை

சரி செய்வதற்காக
காலையில் எடுத்துப் போன
மடிகணினியை
பொறியாளர்
மாலையில்
கொண்டு வரும் வரை
தவித்துதான் போய் விட்டேன்

4. மனவேலி

சீட்டு எடுத்து கொடுத்தவுடன்
திருப்தியுடன் கூண்டுக்கு திரும்பும்
ஜோசிய கிளி

அடைப்பின் கதவு திறந்திருந்தாலும்
பழக்க தோஷத்தில்
உள்ளே சுற்றும்
ஆடு

பெற்ற பட்டங்களை அலமாரியில் பூட்டி
அழகு குறிப்புப் பார்த்து அலங்கரித்துக்கொண்டு
சமையல் குறிப்பு எழுதி பரிசு வாங்கி
கணவனின் வெற்றிகளுக்கு பின்னால் நிற்கும்
பெண்

One Comment on “வத்சலா கவிதைகள்”

Comments are closed.